ஆதிச்சநல்லூரில் எஸ்.எப்.எஸ் அரசு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை & திருச்செந்தூர் மெயின்ரோட்டில் ஆதிச்சநல்லூர் மிக முக்கிய பஸ் நிறுத்தமாகும். உலக புகழ் பெற்ற நாகரீகம் என போற்றப்படும் முதுமக்கள் தாழிகள் நிறைந்த இடம். இவ்விடத்தினை காணவேண்டும் என வெளியூரில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் ஆதிச்சநல்லூர், கால்வாய், வீரளபேரி, புளியங்குளம் உள்பட பல பகுதிகளுக்கு இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறங்கி தான் செல்கிறார்கள். ஆனால் இங்கு அரசு பேருந்து எஸ்.எப்.எஸ் போன்றவை நின்று செல்வதில்லை.
இதுகுறித்து கால்வாயை சேர்ந்த பரமசிவன் கூறும் போது, ஆதிச்சநல்லூர் மிக முக்கியமான பேருந்து நிலையம். நெல்லை &திருச்செந்தூர் மெயின்ரோட்டில் இந்த ஊர் உள்ளது. இந்த இடத்தில் இறங்கி தான் கால்வாய், வீரளபேரி, புளியங்குளம், ஆதிச்சநல்லூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லவேண்டியது உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் உலக நாகரீகத்தின் தொட்டில் என கருதப்படும் ஆதிச்சநல்லூர் இங்குதான் உள்ளது. எனவே இங்கு வெளியூரில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே பயணிகள் பயன்பெற அரசு பேருந்துகளான எஸ்.எப்.எஸ் இந்த பஸ் நிறத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


