தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டு குடியிருப்புக்கும், கடலுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் உடைந்து வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ரூ. 25 கோடியில் மேற்புறம் 800 மீ. தூரம், கிழக்குபுறம் 20 மீ. தூரம் புதிய தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டது. இந்த தூண்டில் வளைவு பாலம் முறையாக அளவீடு செய்து அமைக்கப்படாததால், அது அமைக்கப்பட்ட நாளில் இருந்து பெரியதாழையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், கரையில் படகு நிறுத்துவது பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாயத் துறையினர் தூண்டில் வளைவு பாலத்தை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர்.
மேலும், இந்த கடல் சீற்றத்தை தடுக்கும் வகையில், 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவை 600 மீ. அளவு நீட்டிக்க வேண்டும், சிறு மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 10 நாள்களில் பெரியதாழை கடலில் கடல் சீற்றம் ஏற்பட்டதில் அங்குள்ள தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்தது. இதேபோல, வெள்ளிக்கிழமை மாலை பெரியதாழை கடலில் மீண்டும் அதிகளவு கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதனால், குடியிருப்புக்கும், கடலுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் மேலும் உடைந்து கடல்நீர் குடியிருப்பு பகுதியில் புகும்நிலை உருவாகி வருகிறது.
இதையடுத்து, மீனவர்கள் அச்சமடைந்து, மாவட்ட ஆட்சியர், மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற உரிய நிவாரணம் ஒதுக்கி விரைந்து பணிகளை தொடங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


