தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதனையடுத்து அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. தற்போது முதல்கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் வாழ்விடப்பகுதிகளை கண்டறிய 5 இடங்களை தேர்வு செய்துள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் நடந்த இடங்களை பார்வையிட தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் நேரில் வருகை தந்தார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜீம் உடன் வந்தனர்.
அவர் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தினை பார்வையிட்டார். தொடர்ந்து மத்திய தொல்லியல் துறையினர் காட்சிப்படுத்தி வைத்திருந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு, வெண்கலப் பொருட்கள், ஆதிகால மனிதனின் தலை மற்றும் எலும்புகளையும் பார்வையிட்டு மத்திய தொல்லியல் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதற்கு மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் எத்திஸ்குமார் விளக்கமளித்தார்.
அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலகட்டத்தை கண்டறிய கூடுதல் நிதி தேவைப்பட்டால் தமிழக அரசு சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொல்லியல் துறையினரிடம் தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் தெரிவித்தார்.
அதன்பின்னர் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த 3 வருடங்களாக அகழாய்வு பணிகள் நடந்த சிவகளை தொல்லியல் தளத்தினை பார்வையிட்டார். அங்கு அவருக்கு அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் விளக்கமளித்தார்.
அங்கு தமிழக தொல்லியல் துறை சார்பில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்காக ரூபாய் 23 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


