தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரம் பகுதியில் 500 வீடுகள் அமைந்துள்ளது. இந்த ஊரை சேர்ந்த விஷ்ணு பகவத்சலம் என்பவர் தனக்கு சொந்தமான ஒன்பதரை ஏக்கர் நிலத்தை தனியார் சோலார் கம்பெனிக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அந்த தனியார் சோலார் கம்பெனி பழனியப்பபுரத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் மிகப்பெரிய சோலார் கம்பெனி அமைப்பதற்காக பனைமரகாட்டில் உள்ள 24 பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பனை நல வாரியம் அமைக்கப்பட்டு பனைமரங்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பனை மரங்களை பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே பல இடங்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பனை விதைகளை விதைத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது பழனியப்பபுரம் பகுதியில் 24 பனை மரங்களை வெட்டி சாய்த்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பழனியப்பபுரத்தை சேர்ந்த எமர்சன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்ததின் அடிப்படையில் சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பனை மரங்கள் வெட்டி சாய்த்த இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்துள்ளனர். மேலும் அனுமதியின்றி வெட்டி சாய்த்த பனைமரங்களை அனுமதி பெற்ற பின்னரே எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றனர்.


