தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
நேற்று இரவு பூஜையை முடித்த பூசாரி முத்துக்கிருஷ்ணன் கோவிலை அடைத்து விட்டு சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் பூஜைக்காக வந்து பார்த்த போது கோவிலின் உள்ளே உள்ள மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவிலில் மூலவருக்கு முன்புறம் ஒன்றரை அடி உயரம், 30 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன உற்சவர் ஐயப்பன் சிலை திருடப்பட்டிருந்தது. மேலும் அருகில் இருந்த அறையில் வெண்கலத்திலாலான திருப்பாச்சி மற்றும் சூடம் தட்டும் திருடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூசாரி முத்துக்கிருஷ்ணன் உடனே அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்து செய்துங்கநல்லூர் காவலர் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோயில் சுவர் அருகே சுமார் பத்து செ.மீ உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை எடுத்தனர். கோயிலில் திருடிச் சென்ற மர்ம நபர் நபர்கள் தப்பி செல்வதற்காக சுவர் ஏறிக் குதிக்கையில் ஆஞ்சநேயர் சிலை கீழே விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் தடயவியல் துறை நிபுணர்கள் சோதனையிட்டனர்.
கடந்த 2000ம் ஆண்டு தனியாரால் தொடங்கப்பட்ட இந்த ஐயப்பன் கோவிலில் இருந்த ஐம்பொன்னால் ஆன ஐயப்பன் சுவாமி சிலை கடந்த 2000 ஆண்டு மதிப்பில் ரூபாய் 85 ஆயிரம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது அதன் மதிப்பு சுமார் மூன்று லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.


