விளாத்திக்குளம் வட்டம், நாகலாபுரத்தில் பள்ளி வாசல்பட்டி கிராமத்தில் 1892 இல் முத்தாண்டி தேவர்.இருளாயி தம்பதி யினருக்கு பாஸ்கரதாஸ் பிறந்தார்.
இயற்பெயர் வெள்ளைச்சாமி. நாகலாபுரத்தில் தொடக்கக் கல்வியை முடித்து விட்டு. இளம் பருவத்தில் தனது பாட்டியிடம் மதுரைக்குச் சென்றார்.
பகலில் கூலி வேலை. மாலையில் தன்னுடைய பாடல்களையும், கதைகளையும் தெருக்கூத்தாக நடித்து பாமர மக்கள் மத்தியில் கொண்டு சென்றார்.
இவர் எழுதிய பாடல்கள் மக்களிடையே எளிய மக்களையும் சிந்திக்க வைத்ததால் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாஸ்கரதாஸ் பாடல்களை மக்களிடையே பாடினர்.
இந்து தேசபிமானிகளின் செந்தமிழ் திலகம் என்று இரண்டு பாகங்களாக இவரது நாடகப் பாடல்களின் தொகுப்பு வெளியானது. விடுதலைப் போராட்டத் தலைவர்களைப் பற்றிய பாடல்கள் தான் அனைத்தும். 1935 இல் இவரது பாடல் தொகுப்புகள் தடை விதிக்கப்பட்டன. மகாத்மா காந்திஜியின் கருத்துக்கள் அடங்கியதாக பாஸ்கரதாஸ் படைப்புகள் இருந்தன.
எளிய நடை, இனிய இசை, உணர்வூட்டும் கருத்து இருந்ததால் இவரதுபாடலை எவர் பாடினாலும் கைதானார்கள். மக்கள் இதயத்தில் மதுரகவி பாஸ்கரதாஸ் இடம் பிடித்தார்.
நாடக மாமேதை விஸ்வநாததாஸ்
இந்தியத்தாயின் அடிமை விலங்கை அகற்றிட பாடல்களாலும் நடிப்பினாலும் பாமரமக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டினார். விஸ்வநாததாஸ் 1886 ஜூன் 16இல் சுப்பிரமணியம். ஞானம்மாள் தம்பதியருக்கு மருத்துவக் குலத்தில் பிறந்தார்.
துள்ளி விளையாடும் இளம் பருவத்தில் இவரது நாவில் சங்கீதம் விளையாடியது. முறையாக சங்கீதம் கற்றார். நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களை தன்னுடைய வழிகாட்டிகளாக மனதில் கொண்டார். 1925 இல் மகாத்மா காந்தி தூத்துக்குடிக்கு வந்தபோது விஸ்வநாததாசின் நாடகத்தைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினார்.
மகாத்மாவின் பாராட்டிற்குப் பின்பு அவரது பாடல்களும் நாடகங்களும் சுதந்திரதாகத்தை ஏற்படுத்தும் எழுச்சி பெற்றன. ஆங்கிலேயர் இவரது நாடகத்தை நடத்திட இட்டனர் தடை.
கொக்கு பறக்குதடி பாப்பா -நீயும் கோபமின்றி கூப்பிடடி பாப்பா
கொக்கென்றால் கொக்கு நம்மை
கொல்ல வந்த கொக்கு
எக்காளம் போட்டு நாளும் இங்கே ஏய்த்துப் பிழைக்குதடி பாப்பா…..
என்ற பாடலை ஒவ்வொரு மேடையிலும் அல்லது மக்கள்
கூட்டங்களில் எப்படியாவது பாடுவார் விஸ்வநாததாஸ்.
இதனைக் கேட்கும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதை எவராலும் தடுக்க முடியாது.
1940 செப்டம்பர் 31 ஆம் தேதி சென்னை ராயல் தியேட்டரில் ஸ்ரீவள்ளிதிருமணம் என்ற சிறப்புமிக்க நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் போது ஆங்கிலேயரின் போலீஸ் தியேட்டரை சுற்றி வளைத்தனர்.
வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா
அதை விரட்டுவதற்கு ஆள் இல்லையடி பாப்பா……
என்ற பாடலை அச்சமில்லாமல் ஓங்கிப்பாடினார். மக்கள் கையைத் தட்டியும் குரல் எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். முருகன் வடிவத்தில் வந்த விஸ்வநாததாஸ். மயில் மீது அமர்ந்தபடி
“மாயாப் பிரபஞ்சத்திலே…. என்ற பாடலைப் பாடும் போது அவரது உயிர் பிரிந்தது.
இன்றும் மகாகவி விஸ்வநாததாசின் பாடல்கள்
ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.
சுப்பிரமணிய தாஸ்
மகாகவி விஸ்வநாத தாஸ் புதல்வரான இவர். தந்தையின் நாடகங்களுக்கு ஆர்மோனியம் இசைப்பது வழக்கம். தந்தையுடன் சேர்ந்து இவரும் மக்களிடையே பாடல்களைப் பாடி விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வந்தார். 1933 இல் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட்டால் தண்டிக்கப்பட்டு திருச்சி மதுரை சிறையில் ஓராண்டு சிறைவாசம். 1950 இல் காலமானார்.


