இந்த கட்டுரையை படிக்க தவறாமல் ஞாயிறுதோறும் , நெல்லை டைம்ஸ் நாளிதழை வாங்கி பயன்பெறுங்கள். கட்டுரையை மிகச்சிறப்பாக வெளியிட்டு வரும் நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் திரு. தம்பான் மற்றும் ஆசிரியர் குழு, நிர்வாகிகளுக்கு நன்றி நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
தாமிரபரணியின் துணை நதிகளில் முக்கிய நதி சிற்றாறு. இந்த நதியில் பெருமை குற்றால அருவி. குற்றாலம் ஏழைகளின் ஊட்டி. இங்கு குற்றாலம் மெயின் அருவியும், அருகில் உள்ள சிற்றருவியும், புலியருவியும் நம் கண்ணுக்கு தெரிந்த அருவிகள் . ஆனால் அதை தாண்டி மலை பயணத்தினை தொடர்ந்து செண்பகாதேவி அம்மன் கோயிலும், அதன் அருகே ஓய்யாரமாய் விழும் செண்பகா தேவி அருவியையும் நம்மில் பலர் அறிந்திருக்கமாட்டோம். இவ்விடங்கள் எல்லாமே தவசித்தர்கள் வாழும் இடம். அகத்திய பெருமான் குற்றாலத்தில் நெடுமாலை சிவலிங்கமாக்கி விட்டு, செண்பகாதேவி காட்டு வழியாக அத்ரிமலை , மற்றும் பொதிகை மலைக்கு சென்ற வழிதடம்தான் இது தான்.
இவ்விடத்தில் அபூர்வ குகைகள் பல உள்ளன. இங்கு தெட்சணாமூர்த்தி குகை, வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தவமேற்றிய கசாய குகை, செண்பகாதேவி அருகில் உள்ள அகத்தியர் குகை உள்பட பல குகைகள் தவத்திற்கு ஏற்றது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு 18 சித்தர்கள், சப்த ரிஷிகள் தவமிருந்த இடம். சித்திரா பௌர்ணமி அன்று செண்பகாதேவி அருவியில் அம்மன் நீராட சப்பரத்தில் வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். அந்த சமயத்தில் பக்தர்கள் அருவியை மஞ்சள் கலந்து மஞ்சள் அருவியாக விழ செய்வதும். அந்த சமயத்தில் பூக்களை அருவியில் கொட்டுவதும் காண்பர்கள் மத்தியில் கண்கொள்ளா காட்சியாகும். வானில் இருந்து பூக்கள் சொரிய மஞ்சள் அருவியில் அன்னை நீராடும் இந்த காட்சி பார்த்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தி விடும்.(16.04.2022 அன்று பிடித்த புகைப்படத்தினை அருகில் பிரசுரம் செய்துள்ளோம்.) இதை தொடர்ந்து தெட்சணாமூர்த்தி குகையில் அமர்ந்திருந்தால் அருவியே நமது மேல் கொட்டுவது போல கொட்டும் அற்புதத்தினை உணரலாம். தொடர்ந்து கரை வழியே நடந்து சென்றால் காசாய குகையை காணலாம். சித்தர்கள் நீராடும் தடாகத்தினை தொடர்ந்து நதியில் பயணத்தினை மேற்கொண்டால் அற்புதமான தேனருவி நடுக்காட்டுக்குள் வானத்தில் இருந்து விழுவதை காணலாம். தேனருவி என்பது சிவமதுகங்கை என்றழைக்கப்படுறது. இங்கு சித்ரா பௌர்ணமி தோறும் ஈசனை, அம்மை உள்பட தேவர்கள் தேனால் அபிஷேகம் செய்கிறார்கள். எனவே தான் இங்குச் சித்ரா பௌர்ணமி தோறும் மஞ்சள் மழை பொழிகிறது என்கிறார்கள் பக்தர்கள். நாங்கள் சென்ற போது கூட மஞ்சள் மழை துளிகளை அங்குள்ள பாறைகளில் கண்டோம். வெள்ளை வேஷ்டியை முதல் நாள் விரித்து வைத்து விட்டு, மறுநாள் போய் பார்த்தால் அந்த வேஷ்டி மஞ்சளாக மாறி விடும் . இதுபோன்ற அபூர்வ இடங்களை கொண்டது தான் சித்தாற்றங்கரை. தற்போது தேனருவி செல்வது வனத்துறையால் தடைசெய்யப்பட்டுள்ளது. ( இதைப்பற்றி முழுமையாக அறிய என்னுடைய அத்ரி மலை யாத்திரை என்ற நூலை நீங்கள் படி க்கலாம்)
இந்த நதிக் கரையில் தான் மழைவேண்டி அபூர்வ பூஜை நடைபெறுகிறது.
இதற்காக காலை 7 மணிக்கு ஊர்மக்கள் குற்றாலம் சிற்றருவி அருகே ஒன்று கூடுவார்கள். பூஜை பொருள்களை எல்லாம் சுமார் 3 டிராக்டரில் ஏற்றி கொண்டு செல்வார்கள். ஒரளவு வயதானவர்கள் டிராக்கரில் ஏறிக் கொள்வார்கள். மற்றவர்கள் நடைபயணம் தான். முதலில் நாம் ‘பிரிஞ்சு பார்த்தான் பாறை’ ( இந்த பாறையில் இருந்து குற்றாலம் அழகை பிரிஞ்சி பார்க்கலாம் . அதனால் தான் இந்த பெயர்.) யை கடந்து மூலிகைத்தோட்டத்தினை தாண்டி மேலே செல்லவேண்டும். டிராக்டர் வழித்தடத்தில் சென்றால் நேரம் பிடிக்கும். ஆகவே குறுக்கு வழியாக செங்குத்தான ஏற்றத்தில் ஏறி காத்தாடி மொட்டை என்ற பகுதிக்கு வந்து சேர்வோம். தொடர்ந்து மேலே ஏறிச்செல்லும் போது புங்கன்சோலை வருகிறது. அடர்ந்த காடு. எங்கும் வித்தியாசமான பறவைகளில் இன்னிசை. தொடர்ந்து நமக்கு அழுப்பு தெரியாமல் இருக்க நமது முகத்தில் அடிக்கும் தென்றல், புது உற்சாகத்தினை தருகிறது. இந்த சோலையை அடுத்து மேலே ஏறினால், ‘நெல் தீ மொட்டை’ என்ற பகுதி வருகிறது. அங்கு உள்ள மஞ்சள் மாரியம்மனை வணங்கி பயணத்தினை தொடர்வோம். அதோடு மட்டுமல்லாமல் அம்மனிடம், “எங்களுக்கு பாதுகாப்பு கொடு” என ஒரு கோரிக்கையை வைத்து விட்டு மீண்டும் மலை ஏறுகிறோம்.
தெற்கு மலை எஸ்டேட்டுக்குள் நுழைகிறோம். இது தனியாருக்கு சொந்தமான எஸ்டேட். இங்கு மங்குஸ்தான் பழங்கள் பயிரிடப்பட்டுள்ளது. சரியாக சொல்லப்போனால் தேனருவிக்கு மேல்தளத்தில் தான் இவ்விடம் உள்ளது. உள்ளே நுழைந்து சிற்றாற்றை கடக்கிறோம். அங்கு நிறைய நறுவளி செடிகள் ஆற்றோடு பிண்ணி பிணைந்துக் காணப்படுகிறது. இவ்விடத்தில் காலை வைத்தால் மின்சாரம் ஷாக் அடிப்பதை உணரலாம். இந்த அதிர்வு தான் குற்றாலத்தில் குளித்தால் மனநோய் தீருக்கிறது என்பது அறிவியல் உண்மை. அடுத்து தபால் காரன் பாறை வருகிறது . அந்த காலத்தில் குற்றால மலைக்கு மேலே கண்ணாடி பங்களாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களுக்கு தபால் வந்தால் இந்த பாறையில் தான் உள்ளூர் தபால் காரர்கள் கொண்டு வைப்பார்களாம். வெள்ளைகாரர்கள் குதிரையில் வந்து தபாலை எடுத்து செல்வார்களாம். தொடர்ந்து சென்றால் பரதேசி புடை உள்ளது.
இதற்காக மீண்டும் சிற்றாற்றின் எதிர்கரைக்கு வரவேண்டும். இந்த புடையானது அகத்தியர் தவமேற்றியது. இங்கு தான் போதி தர்மர் தவமேற்றினார் என்ற கருத்தும் உண்டு. இந்த பாறையில் உள்ள எழுத்துக்கும் , சீனாவில் உள்ள எழுத்தும் ஒன்றுபோல் உள்ளன . இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக கலைகள் தான் சீனாவுக்கு சென்றுள்ளது என்பதற்கு எடுத்த காட்டாக இந்த எழுத்துக்கள் சாட்சியாக உள்ளன. இதைப்பற்றி தனியாகவே ஒரு புத்தகம் எழுதலாம். தொடர்ந்து பயணம் செய்கிறோம். ‘யானை உரச்சான் பாறை’ வழியாக செல்கிறோம். யானைகள் கூட்டம் கூட்டமாக நின்று இந்த பாறைகளில் உரசிக்கொண்டு நிற்பதால் இந்த பெயர் ஏற்பட்டுள்ளது. அடுத்து யானை ஓய்வெடுக்கும் ‘யானை அசண்டி’ என்னும் இடத்தினை தாண்டி செல்கிறோம். அங்கே ‘சென்ற ராமன் கல்’ என்றவொரு இடமுள்ளது. இவ்விடம் ராமன் சீதாபிராட்டியுடன் காட்டு வழியாக கூட்டிக்கொண்டு கடந்து சென்ற இடமாக கருதப்படுகிறது. தொடர்ந்து அகத்தியர், இராவணன் இசைப்போட்டியின்போது உருகிய மலை காணப்படுகிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாறை உருகியது போலவே காட்சியளிக்கிறது. என்ன ஆச்சரியம். அதன் அடிவாரத்தில் சிற்றாற்றங்கரை கரை நடுவில் அகத்தியர் பாதம் உள்ளது. இங்கு சென்று அகத்திய பெருமான் பாதத்தினை வணங்கி விட்டு, மீண்டும் பணத்தினை தொடருகிறோம். எங்கும் மூலிகை எதிலும் மூலிகை. குற்றால மலையில் 2500 மூலிகை உள்ளது என்று ஆங்கில ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். அதன் வாசம் இவ்விடத்தில வீசுமிடமாக விளங்குகிறது. இந்த வழியாக நாம் கடந்து சென்றாலே போதும், நமது உடலில் உள்ள நாள் பட்ட நோய்கள் தீர்ந்து விடும்.
‘அரிசிப் பெட்டிப் பாறை’ என்ற இடத்தினை தாண்டி கடினப்பயணம் மேற்கொள்கிறோம். இரண்டு தடவை ஆற்றை கடந்து அங்கே ஒரிடத்தில் பாறையில் போய் நிற்கிறோம்.
அந்த பாறையில் 2 அடியில் தண்டம் ஒன்று உள்ளது. இதுதான் அகத்தியர் தேரையர் , அத்ரி ஆகியோர் தவமேற்றுமிடம் என்பதை குறிக்கும் இடம். இவ்விடத்தில் இந்த தண்டம் பாறையில் உள்ள குழியில் வைக்கப்பட்டுள்ளது. சிற்றாற்றில் அடித்து செல்லும் வெள்ளம் இந்த தண்டத்தினை அடித்துச்செல்லவில்லை என்பது மிகப்பெரிய அதிசயம் தான். அங்குதான் மழை வேண்டி சிறப்பான பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் ரசமும் ,ரொட்டியும் தான் சிறப்பு பிரசாதம். இந்த பிரசாதத்தினை பூசாரி காசிமேஜர்புரம் முத்துகுமார சுவாமிகள் தயார் செய்ய வாயை கட்டிக்கொண்டு அமர்கிறார். ஒரு காலத்தில் அகத்தியர் அருள் வந்து சாமி ஆடிய ஒருவரை பார்த்து ஆங்கிலேய துரை “உண்மையான சாமி உங்கள் சாமி என்றால் தீயில் இறங்க சொல்” என்று கூற. அதன் படியே அந்த சாமியாடி தீயில் இறங்கி எந்த காயமின்றி வெளியே வந்தாராம். அதன் நினைவாகத்தான் இந்தபூஜை என்கிறார்கள். அதன் பின் அகத்தியரை ஆங்கிலேயர் ரொட்டியும் ரசமும் வைத்து வணங்கியுள்ளனர். ஆகவே தான் இந்த பூஜையிலும் அது தொடர்கிறது. தண்டத்துக்கு சிறப்பு பூஜை அலங்காரம் , ஆராதனை நடைபெறும். ஊர் கூடி நின்ற மக்கள் எல்லோரும் அந்த தண்டத்தின் முன்பு விழுந்து நெடுஞ்சாண் கிடையாய் கிடந்து மழை வேண்டி நின்றனர். சிலர் ஆதாளி வந்து ஆடி அருள்வாக்கும் கூறினர்.
மதியத்துக்குள் இந்த பூஜை முடித்து விட வேண்டும். அதன் பின் கீழே இறங்கி தெற்குமலை எஸ்டேட்டில் அன்னதானம் புசித்துவிட்டு மக்கள் கீழே இறங்கும் போது வானம் கருகருத்து, மழை பெய்ய ஆரம்பித்து விடும். இதை கண்கூட மக்கள் பார்த்து மகிழ்கிறார். புது மழையை கண்டு சந்தோஷமாக அதில் நனைந்து வீட்டுக்கு வந்து சேரும் விவசாய பெருங்குடி மக்கள் தொடர்ந்து சமீப ஆண்டுக்கான விவசாய வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள்.
ஆச்சரியமான இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது என்பதால், தள்ளாத வயதானவர்களும் , தவழும் குழந்தைகளும் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் குற்றாலம் வந்து காலை 7 மணிக்கு தங்களது ஆதார் அட்டையை வனத்துறையிடம் காண்பித்து, இந்த பூஜையில் கலந்துகொள்ளலாம். வைகாசி மாதந்தோறும் மூன்றாவது வெள்ளி இந்த பூஜை நடைபெறும். இந்த வருடம் 3.06.2022 அன்று கிராம மக்கள் மழைவேண்டி இந்த பூஜையை நடத்துவார்கள்.¬
சரி இது இருக்கட்டும். குற்றால மலையில் மஞ்சள் மழை பொழிவதை பற்றி கூறினோம். தாமிரபரணி மற்றும் அதன் துணை நதியான கடனா நதியில் முறையே சந்தன மழை மற்றும் பன்னீர் மழை பொழிவதை அறிந்து இருக்கீறீர்களா?.
இதுவும் மிகப்பெரிய ரகசியமே. அந்த ரகசித்தினை தேடி தொடர்ந்து பயணிப்போம்.¬
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


