தாமிரபரணி நதியில் மாபெரும் தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, தொடங்கி வைத்தார்.
தாமிரபரணி நதியினை மாபெரும் தூய்மை படத்தும் பணி இன்று மேற்கு தொடர்ச்சி மலை சின்னமயிலாற்றில் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தொடங்கி வைத்து அங்குள்ள காணி இன மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். மேலும் காணி இன மாணவ, மாணவிகள் பயன்படுத்துவதற்கு மையால் எழுதும் பேனாக்கள் மற்றும் மை பாட்டில்களை வழங்கினார்கள். பல்துளக்குவதற்கு வேப்பங்குச்சி மற்றும் ஆலங் குச்சிகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். காணி இன மக்கள் அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பாபநாசம் பகுதியில் தாமிரபரணி நதியினை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டிருந்த மாணவ, மாணவிகளை சந்தித்து தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தாமிரபரணி தோற்றம் அது செல்லும் வழி பாதைகள் அதன் பயன்பாடுகள் குறித்தும் அதை நாம் எவ்வாறு தூய்மையாக வைக்க வேண்டும் என்பது குறித்தும் ஒலி,ஒளி படக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மதுரா கோட்ஸ் மேலகொட்டாரம் இரும்பு பாலம் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து படகு மூலம்; சிவந்திபுரம் வரை பயனித்து தாமிரபரணி ஆற்றினை எவ்வாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அதனை தொடர்ந்து சின்ன சங்கரன்கோவில் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாணவ,மாணவிகளை சந்தித்து பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மாணவ,மாணவிகள் தூய்மை பணி குறித்து நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி,ஒவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். மூக்கூடல் பகுதியில் ஏராளமான மாணவ, மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர். அவர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்கி, அவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை தூய்மை படுத்தும் பணி; ‘Mission Thamirabari Cleaning” திட்டத்தின் கீழ் தாமிரபரணி நதியில் 57 வழித்தடங்களில் 4700 கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாபெரும் தூய்மை பணியினை பொது மக்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
தாமிரபரணி நதியில் தலையனைக்கு பிறகு குளிக்கும் தண்ணீராக வரும் தாமிரபரணி தண்ணீரை குடிக்கும் தண்ணீராக எல்லோரும் பயன்படுத்தும் வகையில் ’தூய பொருநை நெல்லைக்குப் பெருமை” என்ற மாபெரும் திட்டத்தினை கருவாக கொண்டு இப்பணி இன்று தொடங்கப்பட்டள்ளது. மேற்கு தொடர்;ச்சி மலையில் இருந்து அம்பாசமுத்திரம் வரை ஒரு பகுதியாகவும், அம்பாசமுத்திரம் சுத்தமல்லி வரை ஒரு பகுதியாகவும், சுத்தமல்லி முதல் நெல்லை மாநகராட்சி வரை ஒரு பகுதியாகவும், மாநகராட்சி முதல் மருதூர் அணைக்கட்டு வரை ஒரு பகுதியாகவும், என நான்கு கட்டங்களாக பிரித்து 62 கி.மீ நீளம் தூய்மைப்பணிகள் நடைபெற உள்ளது.
தாமிரபரணி வற்றாத ஜீவ நதி இதை சூழல் மாறாமல் காப்பது நமது கடமை. எனவே இப்பணியில் பொதுமக்கள் அனைவரும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி தூக்கி போடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மஞ்சள் பை இயக்கத்தின் மூலம் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கும் திட்டத்தினை மாவட்டத்தில் சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து இன்று தாமிரபரணி கரையோர மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தாமிரபரணி நதியில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட ஏதுவாக டிரோன் மூலமாகவும், DGPS கருவி மூலமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் கோவில் பகுதியில் 100% நெகிழி பைகள் பயன்படுத்துவது தடை செய்யப்படுகின்றது. இதன் மூலம் இப்பகுதி ‘Plastic Free Zone” ஆக உருவாக்கப்படவுள்ளது. தாமிரபரணி ஆற்றின் கழிவு நீர் கலக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தாமிரபரணி நதிப்பகுதியில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி அவை மீண்டும் தளிர்க்காத வகையில் நமது பராம்பரிய மரங்கள் நடப்படுகின்றது. 10 இடங்களில் ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை” என்ற தலைப்பில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டிகளும் நடைபெற்று வருகின்றது.
‘சமூக சூழலியல் பார்வையில் தாமிரபரணி புத்துயிரளித்தல் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் ‘Tamira SES” என்ற தலைப்பில் தாமிரபரணி நதி பாய்ந்தோடும் பகுதிகளில் சமூகம் சார்ந்த முன்னெடுப்புகள் மூலமாக தாமிரபரணி நதியினை மாசு பாட்டிலிருந்து பாதுகாத்து புத்துணர்வு அளிக்கப்படவுள்ளது. முதல் கட்டமாக நான்கு இடங்களை தேர்வு செய்து தாமிரபரணி நதியினை புத்துணர்வு ஆக்கும் நோக்கில் இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்துதல், நதிக்கரைகளில் தொண்மையான மரங்களை நட்டு வளர்த்தல், கழிவுநீர் நதியில் கலக்கப்படாதவகையில் நடவடிக்கை எடுத்தல், தண்ணீரின் தூயதன்மையை பரிசோதித்தல் போன்ற செயல்பாடுகள் நடைபெறவுள்ளன.
நெல்லை நீர்வளம் அமைப்பின் மூலமாக தன்னார்வலர்களை கொண்டு தாமிரபரணி நதியினை தூய்மைப்படுத்தும் பணியினையும் விழிப்புணர்வு பணியினையும் வரும் நாட்களிலும் தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ.2.96/- கோடி திட்ட மதிப்பீட்டில் கீழ் தாமிரபரணி நதியோரம் உள்ள பேரூராட்சி பகுதியில் கழிவு நீர் ஆற்றில் கலக்காதவாறு DEWATTS முறையில் 83 உறிஞ்சு குழிகள் அமைக்கப்படவுள்ளது.
விக்கிரமசிங்கபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் நகராட்சி FSTP திட்டத்தின் கீழ் ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் கழிவறைகளில் சேகரிக்கப்படும் கசடு நீரை சுத்திகரித்து உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கழிப்பிட கழிவுகள் ஆற்றில் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் அனைவரும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு சூழல் மாறாத தாமிரபரணியை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக காணிக் குடியிருப்பில் 4 நபர்களுக்கு சாதிச் சான்றிதழ்களும், 8 நபர்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ்களும், மாணவ, மாணவிகளுக்கு போட்டித்தேர்வுக்கான நூல்களும் விளையாட்டு உபகரணங்களும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் களக்காடு முண்டந்துறை வனப்பாதுகாப்பு மற்றும் களஇயக்குநர் செந்தில்குமார், சூழலியல் மேம்பாட்டு அலுவலர் அன்பு, சேரன்மகாதேவி சார்ஆட்சியர் சிந்து, விக்ரமசிங்கபுரம் நகர் மன்ற தலைவர் செல்வ சுரேஷ் குமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர், விக்ரமசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கண்மனி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ஆனந்த குமார், தன்னார்வலர்கள் மதிவானன் (அரும்புகள்), மதிவானன் (அகஸ்தியர் மலை வனப் பாதுகாப்பு குழு) உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள்,மாணவ,மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


