ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து 7 மாத காலமாக நடந்து வருகிறது.
இந்த அகழாய்வு பணியில் 3 பகுதிகளில் 32 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அந்த குழிகளில் இருந்து 3000 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரையிலான 62 மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் குடுவைகள், பானைகள், இரும்பு பொருட்கள், மணிகள் என ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அகழாய்வு பணியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 2 நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 3 இடங்களில் ஒரு இடம் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 1902 ம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த இடத்தின் அருகே இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த இடத்தின் அருகில் நடந்து வரும் அகழாய்வில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பெரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அதனைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கலையங்கள் மற்றும் பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் அருகே வாள் போன்ற இரும்பு பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த பெரிய முதுமக்கள் தாழியில் இருந்து நெல் உமிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அளவில் இந்த நெல் உமிகள் இருந்தன.
நெல் உமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழியை சுற்றி 100க்கும் மேற்பட்ட கலையங்கள், சிறு பானைகள், இரும்பு வாள் உள்ள காரணத்தினால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தலைவனாகவோ, போர் வீரனாகவோ இருந்திருக்கலாம் என்றும், 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் நெல் பயிர் உற்பத்தியில் சிறந்து விளங்கியுள்ளான் என்பதை உணர்த்தும் விதமாக இந்த நெல் மணிகள் கண்டுபிடிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பல அபூர்வ பொருள்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்து வருவதால் தமிழ் ஆர்வலர்களின் கவனம் முழுவதும் ஆதிச்சநல்லூரை நோக்கி திரும்பியுள்ளது.


