சாத்தான்குளம் அருகே அம்மன் கோயிலில் திருடுபோன நகை மற்றொரு கோயில் உண்டியலில் கண்டெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளம் கீழூரில் ஶ்ரீமுத்தாரம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தர்மகர்த்தாவாக அதே ஊரைச் சேர்ந்த நடேசன் (56) இருந்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி முத்தாரம்மன் கோயிலில் கதவை உடைத்து அம்மனின் கழுத்தில் இருந்த தாலி செயினை மர்ம நபர்கள் திருடி விட்டனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தர்மகர்த்தா நடேசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அதே ஊரில் உள்ள முத்தாரம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வெள்ளையூரணி சுடலைமாட சுவாமி கோயிலில் கொடை விழா கடந்த 21-ம் தேதி நடைபெற்றது விழா முடிந்ததும் மறுநாள் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது அப்போது அம்மன் கோவிலில் இருந்து திருட்டு போன அம்மனின் தாலி தங்கச் செயின் முக்கால் பாகம் உண்டியலில் இருந்துள்ளது.
இதையடுத்து கோயில் நிர்வாகத்தினர் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பார்வையிட்டு நகை திருடியவர் குறித்தும், அவர் திருடிய நகையை சுடலைமாட சுவாமி கோவில் உண்டியலில் போட்டு சென்றது குறித்தும், திருடியவர் அதே பகுதி சேர்ந்தவரா எனவும், மீதமுள்ள நகை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


