“கல்விச் சூழலில் வட்டார வழக்குகள்”
ஒரு மொழியின் உயிர்ப்பும் வளர்ச்சியும் அதன் இலக்கியங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. அன்றாட வாழ்விலும், குறிப்பாகக் கல்விச் சூழலிலும் நிகழும் மொழிப் பரிமாற்றங்களே அதன் தொடர்ச்சியான செழுமைக்கு அடித்தளமாக அமைகின்றன.
பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் வட்டாரவழக்குகள் எவ்வாறு சந்திக்கின்றன, பரிமாறிக்கொள்கின்றன, புதிய மொழிச் சூழல்களை உருவாக்குகின்றன என்பதை எனது அனுபவங்களின் அடிப்படையில் பதிவு செய்யும் ஒரு சிறு முயற்சியே இக்கட்டுரை.
எந்தவொரு மொழியும் அது பேசப்படும் வெவ்வேறு பகுதிகளில், அங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, சமூகச் சூழல், பிறமொழித் தொடர்பு போன்ற பல்வேறு காரணிகளால் மாற்றமடைந்து புதிய பரிமாணங்களுடன் வழங்கப்படுவது இயல்பு.
மொழியின் இத்தகைய நெகிழ்வுத் தன்மையால் உருவாகும் பேச்சுமுறைகளே வட்டாரவழக்குகள் எனப்படுகின்றன. இப்பண்பு தமிழுக்கு மட்டுமல்ல; உலகின் பெரும்பாலான மொழிகளுக்கும் உரிய இயல்புதான்.
ஒரே மொழி பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களால் மாறுபட்ட …உச்சரிப்பு, சொற்கள், இலக்கணப் பயன்பாடு மற்றும் மொழிநடை ஆகியவற்றோடு பேசப்படுவது, அப்பகுதியின் வட்டாரவழக்காகக் கருதப்படுகிறது.
இவ்வேறுபாடுகள் சில நேரங்களில் சொற்களின் திரிபுகளாகவும், சில வேளைகளில் பிறமொழிகளின் தாக்கத்தால் உருவான புதிய சொற்களாகவும் அமைகின்றன. இவ்வாறு உருவாகும் வட்டாரவழக்குகள் அப்பகுதி மக்களின் மொழி அடையாளங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றன.
நெடுந்தொலைவு பேருந்து அல்லது இரயில் பயணங்களில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குள் நுழையும்போது, அந்நிறுத்தங்களில் ஏறும் மக்களின் பேச்சுவழக்கிலேயே நாம் புதிய வட்டாரத்தை அடைந்துவிட்டோம் என்பதை உணர முடியும். இத்தகைய அனுபவங்கள் மொழியின் பல்வகைமையையும் அதன் இயல்பான அழகையும் நமக்கு உணர்த்துகின்றன.
இன்றைய சமூக ஊடக வளர்ச்சியால், பல்வேறு பகுதிகளின் வட்டாரவழக்குகளை எளிதாகக் கேட்டு அறியும் வாய்ப்பு நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது.
பள்ளிகளில் வட்டாரவழக்குகள்
*************
குழந்தைகள், குடும்பம் என்னும் முதல் சமூக அமைப்பிலிருந்து தங்களது வீட்டாரின் பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டு, பள்ளி என்னும் பொதுவான கல்விச் சூழலுக்குள் நுழைகின்றனர். அங்கு அவர்கள் கல்வியை மட்டுமல்லாது, மொழி சார்ந்த பல புதிய அனுபவங்களையும் பெறுகின்றனர்.
ஒரு பள்ளியில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வரும் மற்ற மாணவர்களின் வட்டாரவழக்குகள் ஒன்றோடொன்று கலக்கின்றன. அதன் விளைவாக புதிய மொழிப் பயன்பாடுகள் உருவாகி, அப்பள்ளிக்கே உரிய ஒரு பொதுவான பேச்சுவழக்கு படிப்படியாக உருவெடுக்கிறது. இச்செயல் ஆண்டாண்டு காலமாக ஒரு பள்ளிச் சூழலில் நடைபெறுவதால் மொழி தொடர்ந்து செழுமையடைந்து வளர்கிறது.
குறிப்பிட்ட சாதி, சமயம், தொழில், வாழ்வியல் சூழல் போன்ற காரணிகளும் வட்டாரவழக்குகள் உருவாகி நிலைபெறுவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன.
எனினும், ஒரு பள்ளி பொதுவாக அது அமைந்துள்ள பகுதியின் வட்டாரவழக்கின் செல்வாக்கையே அதிகமாகப் பெற்றிருக்கும்.
குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த சில மாதங்களிலேயே வெவ்வேறு ஊர்களிலிருந்து வரும் மாணவர்கள் ஒருவரது பேச்சுமுறையை மற்றொருவர் இயல்பாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகின்றனர். நாளடைவில் இக்கலப்பு, அப்பள்ளிக்கே உரிய ஒரு பொதுவான பேச்சுவழக்காக நிலைபெறுகிறது.
ஆயினும், மாணவர்கள் தங்களது ஊர், இன, சமயப் பின்னணியைச் சேர்ந்த நண்பர்களுடன் உரையாடும்போது, தங்களது இயல்பான வட்டாரவழக்கையே தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிற்றூர்களில் அமைந்துள்ள பள்ளிகளில் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்த மாணவர்களே அதிகமாக இருப்பதால், அப்பகுதியின் வட்டாரவழக்கே அவர்களின் அன்றாடப் பேச்சுமொழியாகத் தொடர்கிறது. குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்நிலை அதிகமாகக் காணப்படுகிறது.
ஆசிரியர்களின் பேச்சு வழக்கு
*************
இந்நிலையில் வெளியூரிலிருந்து அப்பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் பேச்சுவழக்கு மாணவர்களின் மொழிப் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஆசிரியர்களைப் பின்பற்றும் இயல்பு குழந்தைகளுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்கள் ஆசிரியர்களின் சொற்கள், உச்சரிப்பு, மொழிநடை ஆகியவற்றை எளிதில் உள்வாங்கிக் கொள்கின்றனர். இத்தகைய மாற்றங்கள் மொழியின் செழுமைக்கும் வளர்ச்சிக்கும் துணைபுரிவதோடு, குழந்தைகளின் பெற்றோர்களாலும் அம்மாற்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமூகப் பயன்பாட்டிலும் நிலைபெறுகின்றன.
ஆசிரியர்களின் இத்தகைய மொழிச் செல்வாக்கினால், அப்பகுதியில் நீண்டகாலமாக வழங்கிவரும் சில சொற்களின் திரிபுகளும் மருவல்களும் படிப்படியாக மாற்றமடைகின்றன. அவை ஏற்கெனவே வட்டாரவழக்கின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், ஆசிரியர்கள் அவற்றைச் செம்மைப்படுத்திப் பயன்படுத்தும்போது, மாணவர்கள் அவற்றை இயல்பாகவே உள்வாங்கி தங்களது பேச்சுவழக்கில் இணைத்துக் கொள்கின்றனர். நாளடைவில் அவ்வாறான மொழிப்பயன்பாடுகளே புதிய வழக்காக நிலைபெறுகின்றன.
இதற்கு ஓர் எளிய சம்பவத்தைக் கூறலாம். சில பகுதிகளில் உயர்திணை, அஃறிணை விகுதிகளுக்கிடையிலான வேறுபாட்டைப் பொருட்படுத்தாமல் பேசும் வழக்கம் இன்றளவும் காணப்படுகிறது. அது அப்பகுதி மக்களின் இயல்பான வட்டாரவழக்காகவே தொடர்கிறது.
குறிப்பாக அப்பகுதியிலிருந்து வரும் மாணவர்கள் தங்களுக்குள் ஆசிரியரைப் பற்றிப் பேசும்போது, “ஆசிரியர் வருகிறார்” என்பதற்குப் பதிலாக “ஆசிரியர் வருது” என்றும், அதுபோலவே “என் அப்பா வருகிறார்”, “என் அம்மா வருகிறார்” என்பதற்குப் பதிலாக “என் அப்பா வரும்”, “என் அம்மா வரும்” என்றும் கூறுவர்.
இதற்குக் காரணம், அக்குழந்தைகள் வீட்டிலும் தங்களைச் சுற்றியுள்ள சமூகத்திலும் அதே மொழிப்பயன்பாட்டைக் கேட்டு வளர்வதுதான். அவர்களது பெற்றோரும் பிற பெரியவர்களும் அதே முறையில் பேசுவதால், அதுவே குழந்தைகளின் இயல்பான பேச்சாக உருமாறுகிறது.
இத்தகைய சூழல்களில், அம்மாணவர்களின் வட்டாரவழக்கை புறந்தள்ளாமல்,நிலையான மொழிநடையையும் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். நாளடைவில் மாணவர்கள் இருவகை மொழிப்பயன்பாட்டையும் புரிந்துகொண்டு, தேவைக்கேற்ப சரியாகப் பயன்படுத்தும் திறனைப் பெறுகின்றனர். இது கல்வியின் முக்கியப் பங்களிப்பாகவும் அமைகிறது.
இவ்வாறு கல்வி நிலையங்கள் வட்டாரவழக்குகளை ஒதுக்கிவைப்பதில்லை; மாறாக, அவற்றை மொழியின் இயல்பான வளர்ச்சியின் ஓர் அங்கமாக ஏற்றுக்கொண்டு, தேவையான இடங்களில் செம்மையான மொழிநடையையும் கற்பிக்கின்றன. இதன் விளைவாக, அடுத்தடுத்த தலைமுறையினர் தங்களது வட்டார அடையாளத்தை இழக்காமல், நிலையான தமிழை இயல்பாகப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெறுகின்றனர்.
கல்லூரிகளில் வட்டாரவழக்குகள்
**************
பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், தங்களது வட்டாரவழக்குகளையும் உடன் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். அவர்களது பேச்சுமுறையைக் கேட்டாலே அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை சக மாணவர்களும், நீண்டகாலமாகப் பணியாற்றிவரும் ஆசிரியர்களும் பணியாளர்களும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.
ஒரு வகையில், வட்டாரவழக்கு ஒருவரின் மொழி அடையாளமாக மட்டுமல்லாமல், அவர் சார்ந்திருக்கும் நிலப்பரப்பின் பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகிறது.
கல்லூரிகளில் பல்வேறு மாவட்டங்கள், சமூகங்கள், வாழ்வியல் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றிணைவதால், மொழிப் பரிமாற்றம் இன்னும் விரிவான பரிமாணத்தை அடைகிறது. ஒருவரது பேச்சிலுள்ள சொற்கள், உச்சரிப்பு, மொழிநடை ஆகியவை மற்றவர்களிடம் இயல்பாகப் பரவி, புதிய மொழிச் சூழலை உருவாக்குகின்றன. அதேவேளையில், அக்கல்லூரி அமைந்துள்ள பகுதியின் வட்டாரவழக்கும் அங்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்துகிறது.
இதனால் மாணவர்கள் தங்களது சொந்த வட்டாரவழக்கை முற்றிலும் இழக்காமல், அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பொதுவான பேச்சுமுறையையும் இயல்பாக உருவாக்கிக் கொள்கின்றனர். இந்த மொழிப் பரிமாற்றம் நாளுக்கு நாள் தொடர்ந்து நடைபெற்று, மொழியின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் வலுவான அடித்தளமாக அமைகிறது.
மொழி உயிர்ப்புடன் நிலைத்திருக்க வேண்டுமெனில், அது சமூக மாற்றங்களையும், மக்களின் வாழ்வியல் மாற்றங்களையும் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய நெகிழ்வுத் தன்மையுடைய மொழிகளே காலத்தை வென்று தொடர்ந்து செம்மையடைந்து வளர்கின்றன.
தமிழ்மொழி இத்தகைய ஆற்றலைப் பெற்ற தொன்மையும் செழுமையும் வாய்ந்த மொழியாகும். அதன் வட்டாரவழக்குகள் தமிழின் வளத்தை வெளிப்படுத்தும் பலநிற மலர்களைப் போன்றவை. அவற்றை மதித்துப் பேணுவதோடு, தேவையான இடங்களில் செம்மையான மொழிநடையையும் வளர்த்தெடுக்கும் பொறுப்பை கல்வி நிலையங்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. எனவே, மொழியின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், அதன் பண்பாட்டு வளம் நிலைத்திருப்பதற்கும் கல்விக்கூடங்கள் சிறப்பாக பங்களித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
மொழியை வெறுமனே கற்பிப்பதல்ல; அதன் உயிரையும் பண்பாட்டு வேர்களையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் அரிய பணியை கல்விக்கூடங்கள் மேற்கொண்டு வருகின்றன.
_ முனைவர் த.ஜான்சிபால்ராஜ்
எழுத்தாளர், ஆசிரியர்.
திருநெல்வேலி.


