தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.இ. ரோடு பகுதியில் உள்ள ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (09.12.2021) மாணவ மாணவியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மாணவியருக்கு மிக அவசியமான ஒன்றாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்களுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. கல்வி ஒன்றுதான் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கென இலவச தொலைபேசி எண்கள் 1091, 1098, 181, மற்றும் 14417 ஆகிய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்களது புகைப்படங்களையோ, சுய விவரங்களையோ சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மாணவிகளாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ஞானம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், உதயலட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


