சிவகளை நாகரீகத்தினை 3200 வருடம் பழமையானது என நிரூபித்த தொல்லியல் ஆய்வாளர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்ராஜ் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
சிவகளையில் மாநில அரசு சார்பில் கடந்த ஆண்டு முதல் அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குநர் பிரபாகரன் தலைமையில் நடந்த இந்த ஆய்வில் நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த நெல்மணிகள் அமெரிக்கா பீட்டா ஆய்வு மையத்துக்கு அனுப்பி அதன் வயதை 3200 ஆண்டுகள் பழமையானது நிரூபித்தனர். மேலும் தாமிரபரணி கரை நாகரீகம் 3200 வருடங்கள் பழமையானது என நிரூபிக்கக் காரணமாக சிவகளையில் கிடைத்த பொருள்கள் விளங்கியது. இதனால் தமிழக முதலமைச்சர் பொருநை அருங்காட்சியம் அமைககப்படும்என அறிவித்தார். இதனால் சிவகளை உலகப்புகழ் பெற்றது.
இதுபோன்ற நெல் 2004ல் இந்தியத் தொல்லியல் துறை மூலம் அகழாய்வு செய்த போது கூட கிடைத்தது. ஆனால் இது குறித்து பெரிய அளவில் ஆய்வு அறிக்கை வெளிவரவில்லை. இந்த நிலையில் சிவகளை ஆய்வு 1 வருடத்தில் வெளிவந்து இருப்பது இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. எனவே சிவகளையில் அகழாய்வு செய்த தொல்லியல் அலுவலர்கள் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையில் சிவகளையை ஆய்வு செய்ய வந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தொல்லியல் இயக்குனர் பிராபாகரன், தொல்லியல் ஆய்வாளர் விகடர் மற்றும் தொல்லியல் பணி புரிந்தவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். அதன்பின் தோண்டப்பட்ட குழியில் உள்ள முதுமக்கள் தாழிகளையும், கண்காட்சிக்கு வைக்கப்பட்ட பொருள்களையும் பார்வையிட்டார்.
அதன்பின் அவர் நிருபர்களிடம் பேசியபோது, ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தாமிரபரணி கரை தோண்டத் தோண்ட தொல்லியல் எச்சங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இந்த எச்சங்களை முறையாக ஆய்வு செய்து குறித்த இடத்துக்கு அனுப்பி அதன் வயதை வேகமாக கணககிட்டு 3200 வருடம் பழமையானது எனக் கூறிய தமிழக முதல்வர், தொல்லியல் துறை அமைச்சர் உள்பட அலுவலர்களுக்கு நன்றி. இந்த காரியங்களைச் செய்த தொல்லியல் அலுவலர்களை உளமார பாராட்டுகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிவகளை மூன்றாம் கட்ட ஆய்வு சிறப்பாக நடந்து மேலும் நமக்கு பல்வேறு பாரம்பரிய மிக்க தகவல் கிடைக்க அவர்கள் ஆவண செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆய்வுகள் குறித்து அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் விளக்கிக் கூறினார். எம்.எல்.எ வரவையொட்டி இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்களைக் கண்காட்சி படுத்தி வைத்திருந்தனர் தொல்லியல் துறையினர். அதை மிகவும் ஆர்வத்துடன் சட்டமன்ற உறுப்பினரும் உடன் வந்தவர்களும் ரசித்துப் பார்த்தனர்.
அவருடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆசிரியர் மாணிக்கம், சாத்தான்குளம் சங்கர், காமராஜ் காந்தி, சிவகளை பிச்சையா உள்படப் பலர் வந்தனர்.


