021 நெல்லை சீமையை ரசிக்கும் எழுத்தாளர் தங்கை ஜா. தீபா
சுமார் 15 வருடங்கள் இருக்கும். என் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெண்மணி இறங்கினார். எனக்குத் தாமிரபரணியைப் பற்றித் தெரியவேண்டும். நீங்கள் எழுதிய தாமிரபரணி கரையினிலே நூலைத் தாருங்கள் என அறிமுகமானார்.அவர்தான் சகோதரி ஜா.தீபா. அதன் பின் பொதிகை மலை பயணம். பெண்கள் ஏறமுடியாத சவாலான பயணத்தில் என்னோடு தன் கணவர் ஐயப்பன் அவர்களோடு பயணித்தார். அதன் பின் வசந்த் தொலைக்காட்சியில் நெல்லை மண்பேசும் சரித்திரம் தொடரில் ஒன்றாகப் பயணித்தோம். தந்தி தொலைக்காட்சியில் யாத்திரிகன் தொடரில் அவருக்காக என்னால் இயன்ற உதவிகளைச் செய்தேன். இப்படித்தான் எங்கள் தொடர்பு தொடர்ந்தது. ஒரு காலகட்டத்தில் நான் நடிகனாக வேண்டும் என்ற ஆசையை தெரிவிக்க, அவர் துணை இயக்குனராக பணியாற்றிய நடிகை ரோகிணி மேம் இயக்கிய அப்பாவின் மீசை படத்தில் என்னை நடிக்க வைத்தார். இப்படியாக எனக்குத் தங்கையின் உதவி தொடர்ந்தது. எப்போது எதைப் பற்றிப் பேசினாலும் உற்சாகப்படுத்தி அந்தவழியில் பயணிக்கச் செய்வார். யாராவது வில்லங்கமான சண்டை இழுத்தால் போட்டு பாத்திருவமா என எதிர்த்து நிற்கத் தயங்க மாட்டார். என் மகளிடம் கூட தீபாவை போல வாழ கற்றுக்கொள் என்று நான் சொன்னதுண்டு, அதை எனது சித்தர்களின் சொர்க்கப்புரி பொதிகை மலை நூலிலும் எழுதியிருக்கிறேன். அதுபோலவே ஐயப்பன், மிகப்பெரிய இயக்குனர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைப்பார். நான் தான் சென்னைக்குச் செல்லாமல் தாமிரபரணி கரை வரலாற்றை முடித்தால் தான் எங்கேயும் செல்வேன் எனப் பிடிவாதமாக இருக்கிறேன். இல்லை என்றால் ஐயப்பன் – தீபா என்னை தொலைக்காட்சி தொடர் அல்லது திரைத்துறையில் பயணிக்க வைத்து இருப்பார்கள். நாள்கள் ஓடி விட்டது. இன்று 10ஆண்டு திருமண விழாவாம். இரு குழந்தைகள் அவர்களின் அன்புக்குப் பரிசாக இருக்கிறார்கள். இடை விடாத குடும்ப வாழ்க்கையிலும் நூல்கள் வெளியிடுவதில் தயங்குவதே கிடையாது. சென்னையில் உள்ள மிக முக்கிய ஊடகத்தில் பொறுப்பு என மிகவும் உற்சாகமாக வாழ்த்துகொண்டிருக்கிறார் சகோதரி. வாழ்த்துகள் சகோதரி தீபா அவர்களே . உங்கள் குடும்பத்துடன் வாழ்க வளமுடன் . அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


