தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப் பேராலயத்தின் 11 நாள் ஆண்டுத் திருவிழா கடந்த ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியன்று பாதுகாப்புப் பணிக்காக மொத்தம் 660 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். தினசரி சுமார் 150 காவல்துறையினர் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் சுமார் 70,000 பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 1,000 காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றச் சம்பவங்களைத் தடுக்க தினசரி 50 ஆண், பெண் காவலர்கள் சீருடை அணியாமல் மக்கள் கூட்டத்தில் கலந்து கண்காணித்து வருகின்றனர். இறுதி 3 நாட்களில் இவர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும்.
திருவிழா பகுதியில் முக்கிய இடங்களில் 82 தற்காலிக சிசிடிவி கேமராக்களும், 6 உயர் கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 4 ட்ரோன் கேமராக்கள் மூலம் பேராலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் வான்வழியாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்தைச் சீரமைக்கவும், அவசரகால உதவிகளை வழங்கவும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்களையோ அல்லது உரிமையாளரற்ற பொருட்களையோ கண்டால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், திருவிழாவின் அமைதியைக் கெடுக்க முயல்பவர்கள் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாவட்டக் காவல்துறை எச்சரித்துள்ளது.


