வல்லநாடு கணபதி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலையாண்டி மகன் மாரிமுத்து(30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு மாரிமுத்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது முறப்பநாடு போலிசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மாரிமுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக போலிசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து அதற்கு அபராதம் விதித்தனர். மேலும் அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தி விட்டு வாகனத்தை பெற்றுச்செல்லுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால் கடந்த 2 தினங்களாகவே மாரிமுத்து மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது இறப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் 5 லட்சம் நிவாரணம் வழங்க கோரி தூத்துக்குடி & திருநெல்வேலி நான்குவழிச்சாலையில் மாரிமுத்துவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


