தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அரசுத் துறையின் சார்பில் பல்வேறு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு விருது மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது தமிழ்நாட்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 11 நல்லாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர், அலுவலக உதவியாளர், இளநிலை வருவாய் அலுவலர் என 7 பேருக்கும், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் என 5 பேருக்கும் ஆக மொத்தம் 12 பேருக்கான கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவர்குளம் கொட்டி மூடி இப்பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி காயமடைந்த நபர்கள் மற்றும் இறந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 பேருக்கு ரூபாய் 14 லட்சத்துக்கான காசோலையை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பாக 10 நபர்களுக்கு ஜவுளி வியாபாரம், தையல் இயந்திரம், ஆடு வளர்ப்பு, ஆகிய தொழில் தொடங்குவதற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது மக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்ற தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரும், கூடுதல் கலெக்டருமான சரவணன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தாசில்தார் ஜஸ்டின், திமுக மாணவர் அணி மாநில துணைச்செயலாளர் உமரி சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


