1.முத்து கிளி
தொடர் கதை – முத்தாலங்குறிச்சி காமராசு
தாமிரபரணி நதி, மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயணம், நெல்லை ஜமீன்தார்களின் வரலாறு, சித்தர்கள் ஸ்தலங்கள், சிறு தெய்வங்களின் அருளை தேடி பயணம், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வரலாறுகளை தேடுதல் என பல வகையான களப்பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. தினத்தந்தி, விகடன், சூரியன் என முன்னணி பதிப்பகங்கள் மூலமாக நூல் வெளியிட்டு வருகிறார்.
இவர் சான்றோர் மலரில் ‘எனது மலை பயணம்’ என்ற தொடரை 46 மாதங்களாக எழுதி முடித்துள்ளார். நான்கு வருடங்களாக தொடர்ந்து சான்றோர் மலர் வாசகர்களிடம் வித்தியாசமான மலை பயணங்கள் பற்றிய தகவலையும் தனது அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் அந்த தொடரை ‘எனது பயணங்கள்’ என காவ்யா பதிப்பகம் மூலமாக நூலாகவும் வெளியிட்டுள்ளார். இதுவரை சுமார் 43 நூல்களை எழுதி வெளியிட்டுள்ள இவர், தற்போது தினத்தந்தியில் செவ்வாய்கிழமை தோறும் வெளிவரும் ஆன்மிகமலரில் ‘அதிசய சித்தர்கள்’ என்னும் தொடரை எழுதி வருகிறார். இந்த தொடர் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
144 வருடங்களுக்கு ஒரு முறை வருகின்ற தாமிரபரணி புஷ்கர திருவிழாவை முன்னிட்டு இவரது, ‘நவீன தாமிரபரணி மகாத்மியம்’ என்னும் நூல் டிஜிட்டல் முறையில் தயாராகி வருகிறது. இதற்காக இந்த நூலில் பார்கோடு தயார் செய்து அதில் தாமிரபரணி குறித்த தகவல்களை வீடியோவில் ஸ்கேன் செய்து பார்க்க கூடிய நவீன யுக்தியை இவரது மகன் அபிஷ்விக்னேஷ் மூலமாக அறிமுகபடுத்தவுள்ளார்.
வரலாறு, ஆன்மிகம், சித்தர்கள் என அவர் பயணம் செய்தாலும் கூட ஆரம்ப காலத்தில் இவர் நாவலாசிரியர். கிராமங்களிலும், வானொலியிலும் நாடகங்கள் எழுதும் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகர்.
இவர் எழுதிய ‘கொன்றால் தான் விடியும்’, ‘என் உயிரே விட்டுக்கொடு’, ‘கரகம் எடுத்து வந்து’ ஆகிய நாவல்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. ‘கண்ணாடி மாப்பிள்ளை’ என்னும் இவரது சிறுகதை தொகுப்பு வாசகர்களால் சிறப்பு கவனம் பெற்றது. இவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பை, ‘முத்தாலங்குறிச்சி காமராசுவின் நாடகங்கள்’ என்ற பெயரில் இவரது சிஷ்யன் சுடலை மணி செல்வன் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளார்.
தற்போது ‘முத்துகிளி’ என்ற தொடர்கதையை சான்றோர் மலர் வாசகருக்காக எழுதவுள்ளார்.
இந்த கதையில் 1980ல் அவர் கண்ட கிராமத்தினையும், 2018 அவர் தற்போது கண்டு கொண்டிருக்கும் கிராமத்தினையும் உங்கள் கண் முன் கொண்டு வரவுள்ளார். வீட்டுக்கு வீடு செல்போன் இருக்கும் இந்த நவீன யுகம், போன் இல்லாத காரணத்தினால் உயிரை இழந்த பழைய கால யுகம் இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கிறார்.
இந்த தொடர்கதையில் காதல் இருக்கிறது. குடும்ப பாசம் எதிரொலிக்கிறது. கிராமத்தில் நடைபெறும் சுவையான வரலாற்று சுவடுக்குள்… திரிலிங்காக ஒரு பெண்ணின் ஆவியும் வரவுள்ளது.
தொடர்ந்து கதைக்குள் செல்வோம்.
1.போனில் பேசியது.. யார்.? திக் திக் நிமிடங்கள்
‘யய்யா ரத்னம் அங்க நின்னு என்ன செய்ற… முத்துகிளி பத்தி தகவல் கிடைச்சுச்சா..’
சொர்ணகிளியக்கா சொல்வது காதில் விழாமல் வயலுக்குள் களையை பிடிங்கி கொண்டு நின்றார் ரத்னம்.
60 வயது நிரம்பிய ரத்னம். காதோரம் நரைத்த முடி. உருண்ட கண்கள். உமைகளிலும், காதுக்குள்ளும் கவர்ச்சியாய் வெள்ளை முடி வெள்ளியை உருக்கி விட்டால் போல இருக்கும் அழகோ தனி அழகு. இடுப்பில் நாலு முழ வேஷ்டியும், தலையில் கட்டிய தலைப்பாகையும், மெளிந்த அவரது தேகத்துக்கு மணி மகுடமாகவே திகழ்கிறது. மார்பிலும் நரைத்த முடி. முடிக்குள் தான் ரத்னம் ஒளிந்து இருக்கிறரோ என்பது போன்ற தோற்றம்.
இதுவரை யாருக்காகவும்… எங்கேயும் தலை குனிந்தது கிடையாது.. ஆனால். இன்று.. தன்னோட மகள் முத்துகிளி காணாமல் போனதால் தலை குனிந்து நிற்கிறார்.
‘யய்யா…. அவ கிட்ட செல்போனு… இருக்குல்லா… பேசினாளா…’
சொர்ணகிளிக்கா… ரத்னத்தோடு சித்திமகள். அவர் மீது பாசம் கொண்டவள். அக்காளுக்கு 61 வயது இருக்கும். இந்த தள்ளாத வயதிலும் பனையேறும், தனது கணவர் லிங்க நாடாருக்கு கஞ்சி கொண்டு செல்கிறார்.
‘இல்லையக்கா…’ சொல்லும் போதே.. கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
அவர் எவ்வளவோ மறைக்க முயற்சி செய்தும்.. முடியாமல் தேம்பி அழுதார்.
சொர்ணகிளியக்கா தேற்றினார்.
‘அழாத தம்பி.. அவ கூட படிக்கிறவ கிட்ட போனு போட்டு கேட்டியா…’
ரத்னம் பதிலே சொல்லவில்லை.
சொர்ண கிளியக்கா.. ‘யய்யா, சாப்பிட்டியா…’
தலையாட்டினார்.
‘எங்க சாப்பிட்டுறுப்ப… அத்தானுக்கு கஞ்சிகொண்டு போறேன். இன்னா. உனக்கு கொஞ்சம் தூக்கு சட்டியில வச்சிருக்கேன்.. சாப்பிடு.’.
அதற்கும் தலையாட்டினார்.
‘யய்யா… அத்தான் வயிறு பசி தாங்க மாட்டாவ… நான் வாறேன்… அழாத..’
நடந்து கொண்டே புலம்பினாள் சொர்ணகிளியக்கா.
‘எப்படி இருந்தவன்.. நல்ல செவ செவன்னு வாலிப பருவத்தில எப்படி இருப்பான் பய… நாலு பொட்டபுள்ளைய பெத்து, பெண்டாட்டியை பறி கொடுத்துட்டு, கடைசி மகளை தொலைச்சிட்டு, இப்போ தவிச்சிகிட்டு நிக்கான். உடலும் முகமும் இப்ப கருகருன்னு. மாறிட்டானே…’
ரத்னம். அப்படியே வரப்பில் அமர்ந்தார். அக்காளின் குரல் மேற்கத்தி காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
சொர்ணகிளியக்கா… கொடுத்த.. தூக்குசட்டியை திறந்தார்.
அவருக்கு அந்த தூக்கு சட்டியில் இருந்த கஞ்சி கண்ணுக்கு தெரியவில்லை. ஆனா… தன்னோட கடைசி மகள் முத்துகிளியின் முகம் தான் தெரிந்தது.
துரு…. துருன்னு இருப்பாளே. அப்பா மீது மிகவும் பாசமாக இருப்பாளே. சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போயிட்டா..
ரத்னம் மனைவி புஷ்பம் இறந்த பிறகு. இவருக்கு எல்லாமே முத்துகிளி தானே. இவளுக்கு முத்துகிளி என்று பாசமாக பெயர் வைக்க ஒரு காரணம் இருந்தது. இறந்து போன தனது உடன் பிறந்தவள் முத்துகிளியின் பெயரை தான் மகளுக்கு வைத்திருந்தார் ரத்னம்.
முத்து கிளி.
ரத்தினத்தின் உடன் பிறந்த அக்காள்.
இவர்கள் இரண்டு பேரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் மணக்காடு என்னும் கிராமத்தில் பிறந்தவர்கள். அப்பா… நாடோடி பனையேறி பாலையா நாடார். கங்கைகொண்டான், ராஜக்கள்மங்களம் என பல்வேறு இடங்களில் சென்று பனையேறுவார். பிள்ளைகளை படிக்க வைக்காமலேயே மனைவியோடு அந்த ஊருக்கே கூட்டிச் செல்வார். அங்கே காட்டுக்குள் ஒரு விடிலியை போட்டு, அங்கேயே படுத்து உறங்கி, எழுந்து, பனையேறி, பதனீர் காய்ச்சி, கருப்பட்டி தயாரித்து, கொட்டான் கொட்டான கருப்பட்டியை கட்டி மாட்டு வண்டியிலே பாளையங்கோட்டை பனையேறி சொசைட்டிக்கு அனுப்பி வைப்பார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு ஓய்வறியாமல் உதவி செய்வார்கள். பிள்ளைகளும் கல்வி இல்லாமல், தொழிலே தெய்வம் என மதித்து வாழ்வார்கள்.
ஒரு காலத்தில் பல இடங்களில் பஞ்சமானது. கங்கைகொண்டான், ராஜக்கள்மங்களம் பகுதியில் அதிகமாக பதனீர் கிடைக்கவில்லை. தாமிரபரணி ஆற்றங்கரையில் தான் அதிகமாக பனை பதனீர் தந்து கொண்டிருந்தது. எனவே ஸ்ரீவைகுண்டம் பக்கம் ஆதிச்சநல்லூருக்கு பனையேற வந்தார், பாலையா நாடார். ஆதிச்சநல்லூரில் பனையேறிக்கொண்டிருக்கும் போது தான் முத்துகிளியை பொண்ணு கேட்டு, அவரது சொந்தக்காரர் மல்லக்குளம் கிருஷ்ணநாடார் வந்தார். அவரோட மகன் தங்கவேலுவுக்கு முத்துகிளியை கேட்டார்கள்.
முத்துக்கிளிக்கு அப்போது 18 வயது கூட இருக்காது. மிஞ்சி போனால் 15 வயது தான் இருக்கும்.
அம்மா தெய்வானை அழுத்துக்கொண்டார். ‘ஒரு ஊருல உக்காந்து பனையேற முடியுதா..? சொந்தமாக பனை இருந்தாலும் பராவாயில்லை. ஊர் ஊரா போய் உழைக்கோம். உயிரை பணயம் வைக்கிற தொழிலு… மார்பில சீராய் விழுந்து, உடம்பை உருக்கி பனையேறுதாவ.. உங்க அப்பா. நல்லா தூங்க வீடு கிடையாது. நானும் நெருப்பில கிடந்து காய்ஞ்சி போய் பயினி காய்க்கேன். அக்காளும் போற இடத்தில இத மாரி கிடந்து கஷ்டப்படக்கூடாதுய்யா. அக்காளுக்கு பாத்திருக்க மாப்பிள்ளை பனையேறலை. தோட்டத்துல விவசாயம் செய்றாவலாம். அவிய அப்பா காலத்தில பனையீத்தை விட்டுடாவுலாம்’. என ரத்னத்திடம் அம்மா சொன்னாள்.
சரி… முத்துகிளியாட்டும் நம்மை போல பயினி காய்த்து, கஷ்டப்படக்கூடாது என்று அம்மா முடிவு செய்து விட்டாள். எப்படியாவது மகள் முத்துகிளியை நல்ல இடத்துல கட்டி கொடுத்திடனும்னு முடிவு பண்ணிட்டாள். இறுதியில் பாலையாநாடாரும் சம்பதித்தார்.
பனைஈத்து சீசன். இந்த நேரத்தில எப்படி மச்சான் கல்யாணம் செய்வது என இழுத்த பாலையாநாடாரிடம், ‘மச்சான். நீர் சாயந்தரம் பனை ஏறி பாளையை சீவிட்டு ராத்திரி வீட்டுக்கு வாரும். அதுக்கப்புறம் கல்யாணத்தை வச்சிக்கலாம். காலையில பொன்னை கூட்டிட்டு நாங்க ஊருக்கு போறோம். நீர்.. உம்ம ஜோலியை பாரும். ஜோலியை கெடுத்துக்கிட்டு கல்யாணம் பண்ணினா நல்லாவ இருக்கும்’ என்றார் கிருஷ்ண நாடார். அவருக்கு பெண்ணை விட்டுவிடக்கூடாதுன்னு ஆசை.
உண்மையா உழைக்கிற மனசு. வேலையை தெய்வமா மதிக்கிற மனுசன். வேலை கெடாமல் கல்யாணம் நடக்கிறது என்றவுடன்,
‘சரி’. என தலையாட்டி விட்டார் பாலையா நாடார்.
ஒரு நாள் ராத்திரியோட ராத்திரி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. வில்லு வண்டியில வந்தாங்க. முத்துகிளியை திருமணம் முடிச்சு, மறுநாள் காலையில அவர்கள் ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.
பாலையாநாடாரும், தெய்வானையும் முத்துகிளியை பார்க்க போகணுன்னு நினைத்தார்கள். ஆனால் வேலை அவர்களால் போக முடியவில்லை.
ஒரு நாள்.. திடீர்ன்னு முத்துகிளி வீட்டுக்கு வந்தாள். கண்ணை கசக்கிட்டே பேசினாள்.
‘யம்மா.. ஊரா.. அது.. குடிக்க கூட தண்ணீ இல்லை. உப்பு தண்ணீ தான். தண்ணீ குடிச்சா தாகம் தீர மாட்டேங்குது. ஊர் கிணத்து தண்ணீயில குளிச்சா… உப்பு உப்பா தலைமுடி பூறாவும் கழியுது.. தாமிரபரணி ஆத்துல குளிச்ச மாறி இல்லைம்மா…’
தாய் தெய்வானை. முத்துகிளி தலைமுடியை பிடித்து பார்த்தாள். தலை முடி கழிந்து இருந்தது. முத்துகிளி கலரும் மங்கி போய் இருந்தது. கட்டி தங்கம் மாதிரி மினுமினுப்பாக இருப்பாளே.. இப்போ கறுத்து பக்கி அடிச்ச மாதிரி ஆகிட்டாளே. தப்பான முடிவு எடுத்துட்டோமோ… என மனம் அவளுக்கு திக் திக்குன்னு அடிச்சுது..
‘எம்மா.. என்னால தனியா வீட்டில இருக்க முடியலை.. வயலு வயலுன்னு ராத்திரிக்கு கூட கிணத்தில முறை தண்ணீ பாய்க்கனும்னு போயிருதாவ.. எனக்கு வீட்டில இருக்கவே பயமாக இருக்கு..’ முத்துகிளி அழுதாள்.
மறுநாள். முத்துகிளிக்கு துணையாக இருக்க ரத்னம் கிளம்பினார். அப்போது அவருக்கு 9 வயது இருக்கும்.
அதன் பிறகு அப்பா, அம்மா சாவுக்குதான் வந்தார். அக்காள் வீட்டிலேயே தங்கி விட்டார் ரத்தினம்.
ரத்தினத்துக்கு மனைவியாக புஷ்பம் கிடைத்ததே அக்காளோட ஏற்பாடு தான்.
தனக்கு நல்ல வாழ்க்கை ஏற்பாடு செய்து தந்த அக்கா ஒரு காலகட்டத்தில தீ… விபத்துல பலியாகியே போயிட்டா…
அந்த சம்பவம் நெஞ்சை விட்டு நீங்காத சம்பவம். அதை அந்த ஊர் காரார்களே மறக்க முடியலை.
பல வருடம் அக்காள் நினைப்பு ரத்தினம் மனதை விட்டு நீங்கவே இல்லை.
அதனால தான் இளைய பொண்ணுக்கு முத்துகிளின்னு அக்காளோட பெயரையே வைத்தார் ரத்தினம்.
‘அக்கா, சின்ன வயசுல தீக்கு இறையாகிட்டா.. இப்போ.. என் தள்ளாத வயதிலே தனக்கு துணையா இருப்பான்னு நினைச்ச மகள் முத்துகிளி காணாமல் போயிட்டா..’
‘முத்து ளி…. எங்கே .. போனா.. என்ன ஆனா..’
உடல் சிலிர்க்க எழுந்தவர்.. சாப்பிட முடியாமல் தூக்கு சட்டியை மூடினார். பின் விடிலிக்கு நடந்து சென்றார்.
அங்கு தான் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பையை எடுத்தார். அதில் இருந்த போனில் இரண்டு மிஸ் கால் கிடந்தது.
‘யாராக இருக்கும்.. ஒரு வேளை முத்துகிளி பேசியிருப்பாளோ..’
இவர் போனில் அந்த எண்ணுக்கு டயல் செய்தார்.
எதிர் முனை இந்தியில் ஒரு பெண் பேசினார்.
இது என்னடா.. இந்தி பாஷை பேசுது.. அப்போ.. மும்பையில இருந்து யாரும் பேசுறாங்களா?.
மீண்டும்.. மீண்டும் டயல் செய்தும் பலனில்லை. எதிர் முனையில் யாரும் எடுக்கவில்லை.
எனவே இடுப்பில் போனை செருகி கொண்டு, கூடையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
மீண்டும் செல் போன் சிணுங்கியது.
போனை எடுத்து ‘ஹலோ’ என்றார் ரத்னம்.
கர கரவென குரலில், ‘நான் முத்துகிளி…பேசுறேன்’.
சந்தோஷத்துடன் குதுகலத்துடன், ‘எப்படிம்மா இருக்க. முத்துகிளி.’
குரல் கரகரத்துடன், ‘நான் உன் அக்கா… முத்துகிளி பேசுறேன்’
அதிர்ந்தார்..
‘அக்காவா…’
‘ஆமாண்டா.. நான் உன் அக்கா தான்’
அக்கா இறந்து 30 வருசம் ஆயிட்டே.. எப்படி பேசுவா.. அதுவும் போனுல.. யாரும் விளையாடுறாங்களா?
குரல் தளுதளுக்க.. கேட்டார், ‘என் உடன்பிறந்தவளா… பேசுற’.
‘ஆமாண்டா..’
அக்கா.. ஆவி.. பேசுது.
‘டேய் ரத்னம்.. உன் மகள் முத்துகிளிக்கு ஆபத்துடா… அவ ஒரு சிக்கலில மாட்டிக்கிட்டா.. காப்பாத்த உடனே பம்பாயிக்கு வாடா..’
அதிர்ச்சியில்.. ‘யக்கா…’ என கதறினார்.
மறுநிமிடம். போன் துண்டிக்கப்பட்டது.
(தொடரும்)