தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் சார்பாக ‘Living legends’ ஆவண படத்திற்காக திரு. சுப்பு ஆறுமுகம் அவர்களை பல முறை சந்தித்து உரையாடியவன். அவரது பேச்சில் காந்தியம், பாரதியம், தேசிய பற்று, திராவிட இயக்க அன்பர்கள், தூய்மை, நல்ஒழுக்கம் குறித்த அவரது நம்பிக்கைகள் வெளிப்பட்டு கொண்டே இருக்கும்.
இவரது வில்லிசையை ரசிக்கும் இசைப் பிரியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். சபா கச்சேரி ரசிகர்கள், நடுத்தர வர்க்கத்தினர், கிராமப்புற மக்கள் என மூன்று தரப்பினருக்கும் ஏற்றவாறு கதை தலைப்பையும், விஷயத்தையும் கையாளுவதில் சுப்பு ஆறுமுகம் மிகவும் தேர்ந்தவர்.
சபா கச்சேரிகளில் பகவத் கீதை, ராமாயணம், ஆதி சங்கரர் போன்ற தலைப்புகளை எடுத்து மொழி அமைப்பு பேச்சு வழக்கை தவிர்த்து மிக சிரமமான உயர் தத்துவங்களை யாவரும் புரியும் வண்ணம் எளிமைப் படுத்தி அழகான மொழி நடையில் வில்லிசையில் கையாள்வார்.
கிராமப்புறங்களில் வில்லிசைக்கும்போது அவர்களுக்கான வட்டார மொழியில் பாடி அசத்திவிடுவார். பொதுவாக எந்த கச்சேரியாக இருந்தாலும் ஆரோக்கியமான நகைச்சுவை, நல்லொழுக்கம், தேசியபற்று, என். எஸ். கே. புகழ் பாடுதல் அவரது வில்லிசையில் பொதுக்கூறுகளாக காண முடியும்.
என். எஸ். கே. கம்பெனியில் வேலை பார்த்ததால் திராவிட இயக்க அன்பர்களின் சாயலும் கதை கூறலில் இடம்பெறும். என். எஸ். கிருஷ்ணன் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த போது சத்திய சோதனை புத்தகத்தை கொடுத்து ‘காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டு வடிவில் எழுத சொல்லி கேட்டிருக்கிறார். ஒன்றரை மணி நேரத்தில் எழுதி முடித்து விட்டார் சுப்பு ஆறுமுகம். எம். எஸ். சுப்புலட்சுமி வீட்டில் அரங்கேற்றம். “காந்தி பேரை சொன்னவுடன் /கம்பெடுத்து வந்தவங்க /கண் முன்னாலே அதே கம்பில் / ‘காந்தி கொடி காட்டினாங்க ‘ என்ற சந்தத்துடன் இருக்க பாடலை பார்த்து சந்தோஷமடைந்த என். எஸ். கிருஷ்ணன் “காந்தி என்றதும் அடிக்க வந்த கொம்பிலையே கொடியை காட்டினாங்க என்று சொல்லியிருக்கும் நகைச்சுவை உணர்வு இருக்கே அது திருநெல்வேலி மண்ணுக்கே உரிய சிறப்பு என்று பாராட்டிஇருக்கிறார்.
ஒரு முறை திருமண வீட்டில் ‘மீனாட்சி கல்யாணம்’ தலைப்பில் வில்லிசை கச்சேரி சுப்பு ஆறுமுகம் அவர்கள் நடத்தி கொண்டிருந்தார். அந்த திருமண வீட்டுக்கு தந்தை பெரியார் வருகை புரிந்தார். வந்தவர் வில்லிசை கச்சேரி முடியும் வரை ரசித்து பார்த்தார். பெரியாரோ நாத்திகர். நடப்பதோ மீனாட்சி கல்யாணம். சுப்பு ஆறுமுகம் அவர்கள் ஒருவித பயத்துடன் வில்லிசை கதையை நகர்த்தி கொண்டிருக்கிறார். ஆனால் கச்சேரி முடிந்ததும் மேடைக்கு வந்த பெரியார், எனக்கு இதில் ஒரு இடம் பிடிச்சது. மீனாட்சியை தமிழச்சினு சொன்னாருல அந்த இடம். பாட்டுன்னா இப்போது என்னெம்மொ சொல்றாங்க. முதல்ல பாட்டு புரியணும். அதோடு பாட்டில் மானம் இருக்கணும். இவருடைய பாட்டு புரியவும் செஞ்சது. மானத்தோடும் இருந்தது. இந்த பெரியாரின் பாராட்டை சுப்பு ஆறுமுகம் தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைப்பவர்.
புகழ் பெற்ற நாட்டுப்புற வியல் ஆய்வாளர் எம். டி. முத்துக்குமாரசுவாமி அவர்கள் திரு. சுப்பு ஆறுமுகம் அவர்களை “சுதந்திர போராட்ட காலகட்டத்தின் அனைத்து தரப்பினரிடையேயும் பொது எழுச்சியான சுதந்திர உணர்ச்சி இந்தியா முழுமையும் இருந்தது. அந்த பொது எழுச்சியினை இக்கால தலைமுறையினருக்கு தனது கலை மூலம் பிரதிநிதித்துவ படுத்துபவராக சுப்பு ஆறுமுகம் அவர்களை இனம் காண முடிகிறது என்கிறார்.
வில்லிசை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற பகுதிகளில் கொடை விழாகாலங்களில் நடைபெறும் சடங்கு சார்ந்த தொல்கலையை நவீனமாக்கி நகர் சார்ந்த பகுதிகளுக்கு கொண்டு வந்து பெருந் தெய்வ கோவில் விழாக்களிலும், சபா கச்சேரிகளிலும், திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாக்களிலும் வில்லிசைக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் வில்லிசை கலைஞர் திரு. சுப்பு ஆறுமுகம் அவர்கள்.
என்னிடம் உரையாடிய வேளையில் என். எஸ். கே. யாலும் என்னாலும் எவ்வளவு நகைச்சுவையோடு உரையாடினாலும் சிரிக்க வைக்கவே முடியாமல் போன ஒருவர் மு.வரதராசன் அவர்கள். அவ்வளவு இறுக்கமானவர். என். எஸ். கே. சொல்வாராம் இந்த வரதராசனை சிரிக்க வைத்தால் தான் நாம் சிறந்த நகைச்சுவை கலைஞர் என்பாராம்.
திரு. சுப்பு ஆறுமுகம் வாங்கிய பல விருதுகளில் குறிப்பிட த் தக்கவை 2006 ம் ஆண்டு சங்கீத நாடக அகடெமி விருது, கலைமா மணி விருது (1975), தமிழிசை மன்றத்தின் ‘பண்இசை அரசு ‘ தமிழ் சன்றோர் விருது (2003), பாரத் கலாச்சார் அமைப்பின் ஞான கலா பாரதி ‘ விருது போன்றவை.
1928 ஆம் ஆண்டு ஜூலை 12ம் நாள் திருநெல்வேலி சத்திரம் புதுக்குளம் என்ற ஊரில் பிறந்த திரு. சுப்பு ஆறு முகம் அவர்கள் தனது 94 ம் வயதில் பேரும் புகழுடன் பெருவாழ்வு வாழ்ந்து நம்மிடையே வில்லிசைக்கு சுப்பு ஆறுமுகம் என்று அழுத்தமான கலைத்தடம் பதித்து சென்றுள்ளார். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


