மேல ஈரால் கிராமத்தில் கண்மாயைச் சீரமைத்த கிராம மக்கள் 8 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாம் இந்திய கட்சியின் மாநிலச் செயலாளர் பி. பொன்ராஜ் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்தமனுவில், “தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் வட்டம், மேல ஈரால் கிராமத்தில் கடந்த 24.06.2026 அன்று நான்கு திருக்கோவில்களின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதற்கு முன்னதாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் போது அப்பகுதியில் உள்ள கண்மாய் உடைந்து, குடிநீர் கிணறும் கடுமையாகச் சேதமடைந்திருந்தது. இது குறித்துப் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள சூழலில், கோவிலுக்கு எதிரே உடைந்த நிலையில் இருந்த கண்மாய் மற்றும் கிணறினால் பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ ஏதேனும் உயிர்ச்சேதம் அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவற்றைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுநலன் கருதி சீரமைப்புப் பணிகளைச் செய்த மேல ஈரால் கிராமத்தைச் சேர்ந்த 8 நபர்கள் மீது தவறான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கிராம மக்கள் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


