முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய முத்துக்கிளி என்ற நாவலை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. ‘யாவரும் பதிப்பகம் ‘ சார்பாக 236 பக்கங்களில் முழு நாவல். அட்டைப்படத்தைப் போல உள்ளேயும் சில படங்கள் இருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்.
ஆன்மீக கட்டுரைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராமிய மனம் கமழும் வகையில் மிகச் சிறப்பாக இந்த நாவலை எழுதியுள்ளார்.
“அட பொசகெட்ட பயலே” , “பனை ஈத்து சீசன் “, “மக புள்ள பொடிசு” , “செங்க சொமந்து போவிய”- என்று கிராமிய பேச்சு கதை முழுக்க பரவிக் கிடக்கிறது.கிராமிய வழக்கில் இக்காலத்தில் உள்ள நடைமுறையோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள வாழ்க்கை முறைகளையும் ‘ஃபிளாஷ்பேக்’ ஆகச் சொல்லி இருப்பது, கதையை வாசிப்பதற்கு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. நிகழ்கால கதையும், ‘ஃபிளாஷ் பேக் ‘கதையும் மாறிமாறி வருவது வாசிப்பதற்கு ‘சஸ்பென்ஸ்’சையும் ஏற்படுத்துகிறது.
மறந்தும், மறைந்தும் போன தோல் பாவை கூத்து, கோவில் விழாவில் ஆட்டம், களரி வித்தை என்று கிராமிய கலைகளையும், டிவி-டெக்கில் படம் போடுவது, ஒலிபெருக்கி அமைப்பு என்று நாசுக்காக கதையோட்டத்தில் ஆங்காங்கே புகுத்தியிருப்பது சிறப்பு. கதாநாயகி முத்துக்கிளி காணாமல் போவதில் தொடங்கி, இறுதியில் அவளை கண்டுபிடிப்பது வரை, பல்வேறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி, ஒவ்வொன்றுக்கும் ஒரு கதையையும் கூறியிருப்பது அருமை.
கிராமத்தில் வீடுகளில் நாய், பூனை வளர்ப்பது, அவைகள் சாகும் போது சகுனம் பார்ப்பது , இளைஞர்களின் பக்குவப்பட்ட காதல், காதல் தோல்வி, திருமண முறைகள் என்று நம் கண்முன் அப்படியே நிறுத்துகிறார். கதாநாயகன் இல்லாத குறையை முதிர் வயது நாயகன் ரத்னம் நிறைவு செய்கிறார்.
மும்பையின் தாராவி பகுதியையும் நேரில் பார்த்தது போல் படம் பிடித்து எழுத்து திறமையை காட்டியுள்ளார்.
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கதையில் கண்டிப்பாக ஆன்மீகமும் வர வேண்டுமே அதுவும் இடம் பெற்றுள்ளது. அதற்காகவே சித்தர், சுப்பிரமணி கதாபாத்திரங்கள் உருவாக்கப் பட்டுள்ளது. இதில் மட்டும் சில இடங்களில் லாஜிக்கை மீறுவது போல் உள்ளது.
முத்துக்கிளியை கடத்திய வில்லன் யார் என்று ஆவல் அதிகரிக்க…… அந்த வில்லனையும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக காட்டி, இறுதியில் அவர்களையும் நல்லவர்களாக சித்தரித்திருப்பது, கதாசிரியரின் தனித்தன்மை. முள்ளின் மீது நடப்பது போல திருநங்கைகளை குறைத்து மதிப்பிடாமல் கதைக்கு உயிரூட்டியிருப்பது பாராட்டத்தக்கது.
இடையிடையே உண்மை சம்பவங்களையும் கூறி, இது ஒரு உண்மையான, நடந்த கதை போல வாசிப்பவர்களையும் கதையோடு ஒன்றவைத்துள்ளார். இதற்கு தோதாக கொரோனா சம்பவமும் கதாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசுக்கு கைகொடுத்துள்ளது.
முதியவர்கள் பழைய சம்பவங்களை அசைபோடவும், இளைஞர்கள் அக்கால கிராமிய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளவும் “முத்துக்கிளி” நாவலை படியுங்கள். அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் உள்ள சிறந்த கதை. எதிர்காலத்தில் தொலைக்காட்சி நெடுந்தொடர் எடுக்கத் தேவையான அத்தனை அம்சங்களும் இந்த நாவலில் உள்ளது என்றால் அது மிகையாகாது.


