இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வேங்கடராமன் ஆகும். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.
இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறி 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பாதாள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். அங்குச் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளிலிருந்து சேஷாத்ரி சுவாமிகள் அன்பர்களின் மூலம் காத்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், மாமரக் குகை, குருமூர்த்தம் எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”இரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.
கையில் ஏற்பட்ட கொடிய சார்கோமா புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார்.
ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற புத்தகம் முதன்மையானதாகும்.
ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.
ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.[
பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் தேகமறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் தாயார் சமாதி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கலானார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை


