இங்குள்ள மூலவர் திருவேங்கடநாதன். அந்த வடவேங்கமுடையானே இங்கும் வெங்கடாசலபதியாக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவரின் நான்கு திருக்கரங்களில் வலதுகரம் உள்ளங்கை கீழ் நோக்கி தாழ்ந்து வேண்டிய வரம் தரும் வரதஹஸ்தமாகவும், இடது கரம் தொடையில் பதிந்த கடிகஸ்தமாகவும், புறக்கரங்களில் வலது கரத்தில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் ஏந்தி வேங்கடவர் நிற்கிறார். மூலவரின் வலப்புறம் மலர் மகளும் (திருதேவி) இடப்புறம் பூமி தேவி தாயாரும் நின்ற கோலத்தில் அருள் வழங்குகின்றனர்.
இவர் இருபுறமும் திருதேவி பூதேவி தயார்களுடன் உற்வர் சீனிவாசப் பெருமாள் உள்ளார். உற்சவருக்கு பக்கத்தில் தனியாக அந்த வட வேங்கடத்திலே எழுந்தருளியுள்ள அதே அலர்மேலு மங்கை பிராட்டி இங்கேயும் தம்பதிகளாக எழுந்தருளி யுள்ளனர்.
கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள பன்னிரெண்டு படிகளும் பன்னிரு ஆழ்வார்களாக கருதப்படுகின்றன. பெருமாளின் திருப்பாதம் இவர்கள் திருமார்பிலே பட வேண்டும் என படுத்துக் கொண்டுள்ளார்கள் என்பது நம்பிக்கை.
இங்கு பல கல்வெட்டுகள் உள்ளன. மூலவர் கருவறையின் வெளிப்புறச் சுவரிலும் மற்றும் நுழைவாயில மண்டபத்தில் தெலுங்கு எழுத்துகளும் காணப் படுகினறன. இதன் மூலம் மதுரை மன்னர் திருமலைநாயக்கர் மற்றும விசுவநாத நாயக்கர் இருவரும் கொல்லமாண்டு 722ல் பிரபல வருட கார்த்திகை மாதம் சுக்ல பட்சத்தில் இத்திருக்கோயிலுக்கு வந்து இத்திருக்கோயில் சீனிவாச தீர்த்த கட்டம் தாமிரபரணி ஆற்றில் உள்ளது. நீராடி பெருமானை வழிபட்டுச் சென்றதாக அறிய முடிகிறது.
திருக்கோயில் தீர்த்தம் தென்புறம் தாமிரபரணி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்கிறது. இங்கு நீராட படித்துக் கொண்ட பகுதியே சீனிவாச தீர்த்தகட்டமாகும். இது பாபநாச தீர்த்தத்துக்கு இணையானது என்று கூறப்படுகிறது.
கருடசேவை புரட்டாசி மாதம் வரும் எல்லா சனிக் கிழமைகள் இரவு நடைபெறுகிறது. மற்றும் அன்பர்கள் வேண்டுதலுக் கிணங்க அவர்கள் விரும்பும் நாட்களிலும் கருடசேவை நடத்தி வைக்கப்படும். கருட சேவையின் போது பெருமாள் கருட வாகனத்தில் மிகந்த பூ அலங்காரத்துடன் வலம் வந்து காட்சி தருவது கண்கொள்ளா காட்சியாகும்.
தெற்கு பிரகாரத்தில் உள்ள சன்னதியில் உள்ள வெண்கல கருடன் இருபுறமும் இரண்டு மடித்த இறக்கைகளுடன் கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி யளிக்கிறது. இது வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்றாகும். தினமும் ஐந்து கால பூஜைகள் வைகானச ஆகம முறைப்படி நடந்து வருகினறன.
ஏழுமலைகளைத் தாண்டி வடக்கே திருப்பதியில் கோயில் கொண்டதைப் போல இங்கும் ஏழு மேடான நிலைகளைத் தாண்டி கருவறையில மூலவர் கோயில் கொண்டுள்ளார். இது தவிர பல ஒற்றைமைகள் திருப்பதி கோயிலுக்கும் இந்த கோயிலுக்கும் உள்ளன. பக்தர்கள் வடதிருப்பதிக்கு வேண்டிக் கொண்டு செய்ய நினைத்தவைகளை இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டு அவைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள். என்பது தொன்ற தொட்டு வரும் ஐதீகமாகும். இவ்வூரின் வேறு பெயர்கள் திருநாங்கோயில் அல்லது மேலத்திருவேங்கநாதபுரம் என்றழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் காலை 6.30 மணி முதல் நடை திறந்து இருக்கும். 6.30 மணிக்கு விஸ்வரூபம், 8.30மணிக்கு காலச்சந்தி, 10.30 மணிக்கு உச்சிகாலம், 11 மணிக்கு நடை சாத்துதல் நடைபெறும். சனிக்கிழமை 12.30 மணிக்கு நடைசாத்தப்படும்.
மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு திருவிசாகம் நடந்து நடை சாத்தப்படும். இந்த கோயிலுக்கு 06.02.2012 காலை 9.18&9.42 மணிக்கு கர வருடம் தை மாதம் 23 ந்தேதி திங்கள் கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா காலத்தில் கும்பாபிசேகம் நடந்தது.
இங்குள்ள கல்வெட்டுகள் பல்வேறு வரலாற்றுகளை சுமந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு கல்வெட்டில்..
திருநாங்கோவில் தெய்வீக திருப்பணி சங்கம் சென்னை சங்கத்தின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட ராஜகோபுர திருப்பணி 14.07.2000ல் இனிதே நிறைவேறிட உதவிய அனைத்து சங்க உறுப்பினர்களுக்கு உபயமாக அளிக்க அனுமதி வழங்கிய இந்து சமய அறநிலையத் ஆட்சித்துறை யினருக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக கீழ்க்கண்ட மெய்யன்பர்களுக்கும் சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை காணிக்¬க்யாக்குகிறது. அப்பாச்சி ராமன் குடும்பத்தினர், சுப்பிரமணியன் குடும்பத்தினர் கொல்லம் சாரங்கபாணி குடும்பத்தினர் பாலச்சந்திரன் குடும்பத்தினர் ஆகியோர் கல்வெட்டு பொறிக்கப்பட்டள்ளது.
இந்தகல்வெட்டில் தலவர் சுந்தரராஜன் துணைத்தலைவர் ஸ்ரீனிவாசன், செயலாளர் சேதுராமன், பொருளாளர் மணியன், இணைசெயலாளர்கள் டி.கே சீனிவாசன், குளத்து சீனிவாசன் ஆகியோர் செயல்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது.
இந்த ஆலயத்தில் 13.06.1997 அன்றும் கும்பாபிசேகம் நடந்துள்ளது. ஸ்ரீவேங்கடாஜலபதி ஸஹாயம் ஸவஸ்தி ஸ்ரீ நாளது மங்களகரமான கொல்லம் ஆண்டு 1173 ஈஸ்வர வருஷம் ஆனிமீ 10 தேதி 13.06.1997 பானு வாரமும் ஹஸ்த நட்சத்திரமும் அமிர்தயோகமும் கூடிய -சுபயோக சுப தினத்தில் அன்று காலை 8.30 க்குமேல் 10 மணிக்குள் கடக லக்னத்தில் திருநேல்வேலி மேல திருவேங்கடநாதபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபூமி நீளா அலர்மேலு மங்கா ஸமேத ஸ்ரீ வேங்கடாஜலபதி மற்றம் சகல பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன ஆலய ஜீர்ணோத்தாரண மகா ஸமப் ரோக்ஷணம் (கும்பாபிசேகம் ) வைகாநஸ ஆகமபடி பக்த கோடிகள் சார்பாக சிவஸ்வாமி நினைவு அறக்கட்டளை யினால் தனது பொறுப்பிலும் சொந்த செலவிலும் அதி விமரிசையாக நடத்தப்பட்டது.
இதனருகே முழுமைபெறாத நவின கால கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது. வெங்கடாஜலபதி ஸகாயம் பரீதாபிளுசூ அய அளுமகாமி அதிஸோமவாரம் சுக்கில தாயோதசி மிருக சீர்ஷ நட்சத்திரமுங் கூடிய சுபதினத்தில் உதிது நாழிகைக்குள் மீன லக்னத்தில் சுவாமி வெங்கடாஜலபதிக்கு அஷ்டபந்தன கும்பாபிசேகமும் விமா பிரதிட்டையும் திருப்பணி வேலையும் தாமாத்த கடட்டன் தவஜபாதீஷ்டையும் அன்று கன்னி விநாயகருக்கும் ஈசான்ய அம்மனுக்கும் நாள் வேதபாராயணம் பிராமண போஜன துடன் கும்பிசேக கெருடோத்ஸவமும், மண்டலாபிசேகமும் கிராம மகாஜனங்களால் என தேதி எதுவும் குறிப்பிடாமல் பழமையான கல்வெட்டுகள் ஒனறு உள்ளது.
14.07.2000 அன்று ஒரு கும்பாபிசேகம் நடந்துள்ளது. அதற்கான கல்வெட்டுகளும் இங்குள்ளது.
எம்பெருமான் சுவாமி வெங்கடாசலபதியின் பேருள்துணைக்கொண்டு திருநாங்கோவில் தெய்வீக திருப்பணி சங்கத்தினாரால் உபயமாக வழங்கப்பட்ட ராஜகோபுர திருப்பணி கலை மாமணி திரு எம்.எஸ். சிவப்பிரகாச ஸ்தபதியார் மேற்பார்வையில் நிறைவடைந்து மங்களகரமமான 1175 ஸ்ரீவிக்ரம ஆண்டு ஆனி மாதம் 30ம் தேதி 14.07.2000 வெள்ளிக்கிழமையும் சுக்ல திர யோதசியும் மூலம் நட்சத்திரம் அமிர்த்த யோகமும் கூடிய சுப யோக சுபதினத்தில் காலை 8 மணிக்கு மேல் 10மணிக்குள் சிம்மலக்னமான ஸ்திரலக்னத்தில் ராஜகோபுர சம்ப்ரோகஷணம் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருநேல்வேலி இணை ஆணையர் சி.இளங்கோ அவர்கள் முன்னிலையில் மிக விமரிசையாக நடைபெற்றது. உதவிஆணையர் இராஜாராம், தலைவர் சுந்தரராஜன், செயலாளர் சேதுராமன், உதவிகோட்டப் பொறியாளர் சுப்பிரமணியம், துணைத்தலைவர் ஸ்ரீனிவாசன், இணை செயலாளர் சீனிவாசன், குளத்து சீனிவாசன், பொருளாளர் மணியன், செயல் அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் பெயர் இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
தினமலர் சீனிவாச சாமி எங்களை கூட்டிக்கொண்டு கோயிலுக்குள் கிளம்பினார். முதலில் கொடி மரத்தினை தரிசனம் செய்தோம். பெரும்பாலுமே கொடிமரத்தில் ஆண் தேவதைகள் இருப்பார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த கோயிலில் கொடிமரத்தில் வன தேவதை ஒன்று வந்துள்ளதாக கூறினார். இந்த தேவதை துடிப்பானவர். இவரை வணங்க பூச்சட்டை சாத்தி வழிபடுகிறார்கள். மேலும் இங்கு வழங்கப்படும் தீர்த்தம் மிகவும் விசேஷமானது . எனவே பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தம் வாங்குவதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். இதற்காகவே கொடிமரத்தினை அபிசேகம் செய்து பூச்சட்டை சாத்தி வணங்கி வருகிறார்கள். குறிப்பாக உயரமான கட்டிடத்தில் வேலைகள் செய்து வருபவர்கள். தங்களை இன்னல்களில் இருந்து காப்பாற்றி கொள்ளவும், தீராத நோய்களில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவும் இந்த பூஜையை செய்வார்கள்.
கோயிலில் உள்ள கல்வெட்டுகளை பார்த்தோம். அதையெல்லாம் சேகரித்து எழுதிவிட்டோம். தொடர்ந்து கோயிலை சுற்றி வருகிறோம். கோயிலின் தலவிருட்சம் மூங்கில் மரத்தினை பார்த்தோம். திருநெல்வேலி மாநகரமே வேனுவனம் தான் . நெல்லையப்பர்கோயிலிலும் தல விருட்சம் மூங்கில் இருப்பதை கண்டிருக்கிறோம்.
இந்த வேளையில் எங்களிடம் சீனிவாச சாமி இந்தகோயிலில் நடந்த வரலாறு ஒன்றை கூறினார். அந்த காலத்தில் இந்த ஊரைச் சேர்ந்த சிவசாமி அய்யர் என்பவர் கப்பல் அதிபராக இருந்துள்ளார். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு இவர் மும்பையில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருந்துள்ளார். இவர்கள் தங்கள் தொழிலை துபாய் பகுதியில் உள்ள சேக் ஒருவரோடு நடத்திக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு சொந்தமான கப்பல் மும்பைக்கும் துபாயுக்கும் பயணம் செய்து கொண்டிருந்தது.
இவர்களது கப்பல் நடுக்கடலில் சரக்குடன் சென்று கொண்டிருந்தது. அப்போது மிகப்பெரிய புயல் ஒன்று அடித்தது. இந்த புயலில் சிக்கிக்கொண்ட கப்பல் என்ன ஆச்சி என்று தெரியாமல் ஆகி விட்டது. இந்த சமயத்தில் அய்யர் திருவேங்கடநாதபுரத்தில் இருந்தார். இவர் கோயிலுக்குள் நுழைந்து பகவானை சேவித்து விட்டு, “வேங்கடநாதா என் கப்பலை காப்பாற்று” என வேண்டுதல் வைத்து விட்டு வெளியே வந்தார். என்ன ஆச்சரியம். கப்பலில் இருந்து சிக்னல் கிடைத்து நல்ல தகவல் வந்தது. கப்பல் புயல் பிரச்சனையில் இருந்து மீண்டு விட்டது. இனி பயம் இல்லை.
சந்தோசத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அய்யர். நமது கப்பலை காப்பாற்றி பகவானுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டு இருக்கிறேன். என ஆண்டுக்கு ஒரு முறை எண்ணெய் காப்பு சாத்தும் பொறுப்பை தானே ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார்.
தற்போது அவர் வழியில் அவரது வாரிசு ரமேஷ் அய்யர் இந்த கோயிலுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.
இவ்வூரில் இரண்டு கருடர் உள்ளார். ஒருவர் சன்னிதானத்துக்குள்ளும் மற்றவர் கச்சேரி மண்டபத்திலும் உள்ளார். இதில் கச்சேரி மண்டபத்தில் உள்ளவர் பழைமையானவர். இவர் பித்தளையில் உருவாக்கப்பட்ட கருடன். இதில் சிறு பின்னம் ஏற்பட்டு விட்டது என்று புதிய கருட வாகனம் ஒன்றை வெண்கலத்தில் செய்ய முடிவு செய்தனர். இதை லாலா குடும்பத்தினர் செய்துக் கொடுத்தார்கள். அந்த கருட வாகனத்தில் கருடசேவை செய்ய தூக்க முயற்சி செய்தனர். சுமார் 30 பேர் முயற்சி செய்தும் தூக்க முடியவில்லை. இதுகுறித்து பிரசன்னம் பார்த்த போது பழைய கருடனை வைத்தே கருடசேவை செய்யட்டும். என உத்தரவு வந்தது. தற்போது அதன் படியே கருடசேவை நடைபெறுகிறது. வெண்கல கருடனை கோயிலுக்குள் வைத்து பூஜை செய்து வருகிறார்கள். இந்த கருடனுக்கு பூ வங்கி சேவை செய்து வருகிறார்கள்.
இந்த கோயிலை பொறுத்தவரை ஸ்ரீபாத தாங்கிகள் உள்ளனர். இவர்கள் கருடசேவை செய்யும் போது பகவானை தோல் கொடுத்து சுமப்பவர்கள். ஒருகாலத்தில் பிராமணர்கள் மட்டுமே இந்த சேவை மட்டுமே செய்து வந்தார்கள். அதன் பிறகு பிராமணர்கள் தொழிலுக்கு வெளியூர் சென்று விட்டனர். அதன் பிறகு பல இடங்களில் இருந்து பெருமாள் பக்தர்கள் இந்த பணியை செய்து வருகிறார்கள். இவர்களை ஸ்ரீ பாத தாங்கிகள் என தற்போதும் அழைக்கிறார்கள். இவர்கள் தாங்கள் வாழ்க்கை முழுவதும் இந்தப்பணியை பகவான் சேவைக்காக செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து கோயிலை சுற்றி வந்தோம். அங்கே தியான அறை ஒன்று இருந்தது. இந்த அறையில் பக்தர்கள் தியானம் செய்யவதற்கு வாய்ப்பாக கட்டியிருக்கிறார்கள்.
ஆஞ்சநேயர் சன்னதி இங்கு உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிறப்பு வாய்ந்தவர். ஒருவருக்கு பேச்சு வரவில்லை. அவர் இந்த ஆஞ்சநேயரை வணங்கி தனக்கு பேச்சு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் அவருக்கு பேச்சு வரவைத் துள்ளார். ஆகவே அந்த பக்தர் தங்க நாக்கு ஒன்றை வாங்கி காணிக்கையாக கோயிலுக்கு செலுத்தியுள்ளார்.
பாம்பு பரிகாரம் செய்ய, பலர் இங்கே கல்லில் நாகர் அடித்து வைத்து உள்ளார்கள். விஸ்வக்னேசர், சேனை முதல்வர், இராமனுஜர் ஆகியோர் சன்னதியும் இந்த கோயிலில் உள்ளது. அவர்களையெல்லாம் வணங்கியபடியே இந்த கோயிலில் நாயக்கர் மன்னர்கள் உருவம் கல்தூணில் பொறிக்கப் பட்டுள்ளது. நாயக்கர் மன்னர் காலத்தில் இந்த கோயிலில் திருப்பணி நடந்தது புரிய வருகிறது. அதற்கான கல்வெட்டு தெலுங்கில் உள்ளது என தினமலர் சீனிவாசன் சாமி கூறினார்.
நாட்டிய மங்கைகள் உருவம், மயில், யாழி உருவம் பல இடத்தில் காண்படுகிறது. சொர்க்கவாசல் திறக்கும் இடத்தில் வெங்கிடாசலபதி வரைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
அருகில் உள்ள மண்டபத்தில் அதிகமான சிற்பங்கள் உள்ளன. இரண்டு குரங்கு ஒரே முகம், குரங்கு நாகரை பிடிப்பது போன்ற சிற்பங்கள் உள்ளன. இக் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என எழுதி வைத்துள்ளார்கள்.
தொடர்ந்து முன் பகுதிக்கு வந்தால், அங்கே துலாபாரம் உள்ளது. தனது எடைக்கு ஏற்ப பகவானுக்கு பொருளை வழங்கி வருகிறார்கள். நாங்கள் கோயிலில் இருக்கும் போது கூட துலாபாரம் வழங்க ஒரு பெண் வந்து இருந்தார். அவர் “எடைக்கு தக்க பொருள் வாங்க டவுண் போய் வரவேண்டும். அது வரை அர்ச்சகர் இருப்பாரா?” என கேட்டு நின்றார். அர்ச்சகர் முரளிசாமி சரி என்றவுடன் அவர்கள் காரில் பொருள் வாங்க சென்றனர்.
முரளி சாமி கூறும் போது, வெல்லம், நெய், அரிசி, இளநீர், தேன், சர்க்கரை போன்ற பொருள்களை துலாபாரமாக கொடுப்பார்கள் என கூறினார். குறிப்பாக ஜோதிடர் அறிவுருத்தலின் படி துலாபாரம் கொடுப்பது வழக்கம். தோள் சம்பந்தப்பட்ட நோய் இருந்தால் இளநீரும், சர்க்கரைநோய் தீரவேண்டும் என்றால் வெல்லமும், நோய்க்கு ஏற்படி துளசி, தேன், காசு உள்பட பொருள்களை வழங்குவார்கள்.
ஒரு காலத்தில் தங்கம் வெள்ளி வழங்குவதாக கூறுவார்கள். ஆனால் சமீபத்தில் அப்படி யாரும் வழங்கிய படி தெரியவில்லை.
அர்ச்சகர் கூறும் போது கோயிலை பொறுத்தவரை தலவிருட்சம் மூங்கில் தான். நெல்லி இல்லை. ஒரு காலத்தில் வனபோஜனம் நடத்துவதற்காக நெல்லி மரத்தினை நட்டு வைத்துள்ளார்கள் . எனவே தலவிருட்சம் என்றால் மூங்கில் தான் என்று கூறினார்.
கோயிலுக்கு முன்பு வந்து பகவானை தரிசனம் செய்தோம். முன் மண்டபம் சிற்பங்கள் நிறைந்து காணப்பட்டது. வணங்கிய படியே சிறப்பங்கள், கரும்பு வில்லுடன் சிற்பங்கள், அரசர்களோ அல்லது திருப்பணி செய்தவர்கள் சிற்பங்களும் தூணில் காணப்பட்டது. தூண்களில் யாழியும் காணப்பட்டது.
அனைத்தையும் சந்தோசமாக கண்டோம். அர்ச்சகர் முரளி சாமி எங்களுக்கு அழைத்து பகவானுக்கு தீபாரதனை காட்டினார். பகவானை நன்றாக சேவித்து விட்டு, அவரிடம் விடைபெற்று கிளம்பினோம்.
இந்த ஊரைப்பற்றிய தகவல் தர உதவியாக இருந்த பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் குமரேசன், பஞ்சாயத்து எழுத்தர் குமரேசன் ஆகியோருக்கு நன்றி கூறிவிட்டு கிளம்பினேன். எங்களோடு பயணித்த தினமலர் சீனிவாசன் சாமி, தருவை நண்பர் பத்திரிக்கையாளர் பிச்சு மணி, சிஷ்யன் காமராசு செல்வன் ஆகியோருடன் காட்சி மண்டபம் வந்து அங்குள்ள அருவி பேக்கரியில் உற்சாகமாக தேநீர் அருந்தினோம்.
இறுதியாக தினமலர் சீனிவாசன்சாமியிடம் இந்த ஊரில் இருந்த பிராமணர்கள் எங்கே இருக்கிறார்கள் என கேட்டேன். அவர் அதை பற்றிய தகவல் ஒன்றை என்னிடம் கூறினார். ஒரு காலத்தில் கேரள மாநிலம் கொல்லம் கொச்சின் போன்ற பகுதியில் அரிசி மண்டி நடத்துவதற்காக இங்குள்ள பிரமாமணர்கள் சென்றார்கள். அவர்கள் அங்கே மிகவும் பிரமாண்டமாக தொழில் செய்தனர். ஆனாலும் பகவானை சேவிக்க வருடந்தோறும் வர தவறவதில்லை. இதற்கிடையில் இரண்டாம் உலகப்போர் (1917) வந்தது. அந்த சமயத்தில் அனைவரும் மீண்டும் ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டது. அனைவருக்கும் தெரிந்த தொழில் கோயில் சேவை மட்டுமே. அனைவருக்கும் அந்தசேவை செய்ய வாய்ப்பு வசதி கிடைக்கவில்லை. எனவே வறுமையில் வாட ஆரம்பிததனர். எனவே கல்வி தக்க அவர்களது வாரிசுகள் வெளியூருக்கு செல்ல ஆரம்பித்தனர். வெளியூருக்கு சென்றவர்கள் ஆங்காங்கே தங்க ஆரம்பித்து விட்டார்கள்.
தற்போது கணேஷ் தியேட்டர் இருக்கும் டவுண் சந்தி பிள்ளையார் கோயில் அருகே உள்ள இடத்தில் பாப்புலர் தியேட்டர் இருந்தது. அதற்கு முன்பு கணபதி விலாஸ் தியேட்டர் இருந்தது. அந்த காலகட்டத்துக்கு முன்னால் அங்கே கன்னையா நாடக கம்பேனி இருந்தது. இந்த கம்பேனியில் நாடகம் நடத்தினால் 6 மாதம் வரை நாடகம் நடைபெறும். இந்த நாடகத்தினை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் வருவார்கள். ஒரு சமயம் இந்த நாடக கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சுமார் 20 பேர் இறந்து விட்டார்கள். இது மனதை உருக்கும் சம்பவமாகும் என கூடுதல் தகவல் ஒன்றை சொன்னார்.
தினமலர் சீனிவாசன் சாமியின் தந்தை குளத்து அய்யர் என்ற ஹரிஹரன். இவர் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். மிகவும் நேர்மையான அதிகாரியாக பணியாற்றிய இவர் பல வீரதீர செயல்களை செய்தவர். அந்த காலத்தில் தாலூகாவுக்கு ஒரு சர்க்கிள் இன்ஸ்பெக்டர்தான் உண்டு. இவர் ஓய்வு பெறும் போது நான்குனேரி தாலூகா சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார்.
தினமலர் சீனிவாசன்சாமி ஒரு தகவல் சுரங்கம். இவர் எழுதிய நூலான தேரின் பாகங்கள் என்னை கவர்ந்த நூலாகும். கிட்டத்தட்ட 45 வருடங்களாக தினமலரில் பணியாற்றி வரும் இவர் இந்த பகுதியில் பல கோயில்கள் திருப்பணி நடைபெற காரணமாக இருந்துள்ளார். அவரின் உதவி நாம் திருநெல்வேலி சீமையிலே எழுதும்போது தேவைப்படம்.
அதுவரை அவரிடம் இருந்து விடைபெற்றோம்.
திருவேங்கடநாதபுரம் எனும் திருநாங்கோவில் அழகும் செய்தியும், ஆன்மிக தலங்களும் எங்கள் மனதை விட்டு நீங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது.


