முக்காணி கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியினை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், முக்காணி கிராமம், தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக நின்று, தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது கடந்த 23.06.2024 அன்று காலை 6.30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி (வயது 50) க/பெ.பலவேசம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி (வயது 58) க/பெ.சித்திரைவேல் மற்றும் பார்வதி (வயது 35) க/பெ. குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகதாய் (வயது 55) க/பெ. (லேட்) சுந்தரம் என்பவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு உத்தரவிட்டார்
.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ் , விபத்தில் படுகாயமடைந்த சண்முகதாய் என்பவருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையையும், விபத்தில் உயிரிழந்த நட்டார்சாந்தி, அமராவதி, பார்வதி ஆகிய 3 பேரின் குடும்பத்தினரிடம் தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளையும் வழங்கினார். அப்போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், ஏரல் வட்டாட்சியர் கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.


