திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியாக பாலக்காடு விரைவு வண்டி கொரோனாவுக்கு முன் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அப்போது மதுரை திண்டுக்கல் பழனி பொள்ளாச்சிக்கு செய்துங்கநல்லூர் மக்கள் ஏறி செல்ல முடிந்தது. மேலும் திருநெல்வேலியில் மதியம் ஒன்று ஐம்பதுக்கு புறப்படும் திருநெல்வேலி செங்கோட்டை பாசஞ்சர் ரயிலை பிடிக்க முடிந்தது.
கொரேனா காலத்திற்கு பின்னர் இந்த வண்டி மீண்டும் இயக்கப்பட்டது. ஆனால் இப்போது செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு விரைவு வண்டி நிற்காததால் செய்துங்கநல்லூர் பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் ஏப்ரல் ஒன்று முதல் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு புதிய கால அட்டவணை மாறுவதால் செய்துங்கநல்லூரில் இவ்வண்டியை நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பாலக்காடு விரைவு ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வலியுறுத்தும் விதமாக நேற்றைய தினம் கல்லூரி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் போனில் பாலக்காடு விரைவு ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டும் என்று ஸ்டேட்டஸ் வைத்து ரயில்வே துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
மேலும் வருகின்ற 1ம் தேதி முதல் புதிய கால அட்டவணையில் இந்த வழியாக ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த சமயத்தில் இந்த பாலக்காடு விரைவு ரயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


