தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 185 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (நவம்பர் 19) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 185 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினர்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்துக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: கஸ்பா குளம் 9-ஆம் எண் மடை பாசனக் கால்வாய்கள் மற்றும் மேலமங்கலக்குறிச்சி வடிகால் மடையைத் தூர்வாருதல், கடம்பா குளத்திலிருந்து 12 குளங்களுக்குச் செல்லும் தனி கால்வாயைச் சீரமைத்தல், மருதூர் மேலக்கால்வாய் மற்றும் ஆழ்வார்திருநகரி பம்ப் ஹவுஸ் அருகிலுள்ள மடைகளைப் பழுதுபார்த்தல்.
கருமேனியாற்றில் தண்ணீர் திறந்து அன்பின் நகரம், அம்மான்புரம், பிச்சிவிளை, அமராபுரம் ஆகிய கடைமடைப் பகுதிகள் வரை நீர் கொண்டு சேர்த்தல், சடையனேரி மற்றும் தாங்கைக்குளங்களுக்குத் தண்ணீர் திறத்தல், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் மூலம் உடன்குடி, சாத்தான்குளம் பகுதி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல்.
காயல்பட்டினம் வடபாக கிராமம் உப்பாற்று ஓடை வெள்ளநீர் வடிகால் ஆக்கிரமிப்பை அகற்றுதல், தனியார் இரசாயனத் தொழிற்சாலைக்குத் தாமிரபரணி ஆற்றிலிருந்து குடிநீர் என்ற பெயரில் தண்ணீர் எடுப்பதைத் தடுத்தல், ஏரல் வட்டம் வெள்ளமடம் பகுதியில் விவசாய நிலங்களை விண்வெளி பூங்காவிற்காகக் கையகப்படுத்துவதைத் தடுத்தல்.
விளாத்திகுளம் வட்டம், புதூர் மற்றும் காடல்குடி பிர்காவில் 2025-2026 ராபி பருவ மிளகாய், உள்ளி மற்றும் கொத்தமல்லி பயிர்களுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குதல், பி.எம். கிசான் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்தல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவிப்புப் பலகையில் ஒட்டுதல்.
வயல்வெளிகளில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளைச் சீரமைத்தல், ஓட்டப்பிடாரத்தில் வேளாண்மைத் துறைக்குக் கட்டடம் கட்டுதல், மங்கலக்குறிச்சி – மேலமங்கலக்குறிச்சி இணைப்புச் சாலையை மேம்படுத்துதல் மற்றும் புதிய கட்டடங்களுக்கு மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டாயமாக்கும் அரசாணையைத் தீவிரமாகச் செயல்படுத்துதல்.
விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாகப் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் காந்திநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவரகன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.


