ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அலுவலகத்தில் இந்து அறநிலைத்துறை கோயில்களுக்கு பரம்பரை வழிசாரா அறங்காவலர் தேர்வு நேர்காணல் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இந்து அறநிலைதுறைக்கு உட்பட்ட 153 கோயில்கள் பரம்பரை வழிசாரா அறங்காவலர் குழுவிற்கு உள்பட கோயில்களாக உள்ளன. இக்கோயில்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது.
இதையட்டி அறங்காவலர் குழு தலைவர் நேர்காணல் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் உள்ள அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. 153 கோயில்களில் முதற்கட்டமாக 40 கோயில்களுக்கு நடைபெற்ற அறங்காவலர் குழுவிற்கான நேர்காணலில் 60 பேர் கலந்து கொண்டனர்.
நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் ஆய்வாளர் நம்பி, சுமார் 18 கேள்விகளை கேட்டு உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். இந்த நேர்காணலில் 60 சதவீத பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்பட்டது.
நேர்காணல் குறித்து ஆய்வாளர் நம்பி கூறுகையில், நேர்காணலில் கலந்து கொள்பவர்களுக்கு குற்ற வழக்குகள் உள்ளதா? அவர்களுக்கு மது அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா? கோயில் நிலங்களை இவர்கள் வைத்திருக்கிறார்களா? என்பது உள்ளிட்ட 18 கேள்விகளின் அடிப்படையில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் மே மாதம் நடைபெறுகிறது. தேர்தலுக்கு பிறகு முறைப்படி அறங்காவலர்கள் பதவி யேற்று கோவில் திருப்பணியில் ஈடுபடுவார்கள் என அவர் கூறினார்.
இந்த நேர்காணலில் அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் முருகானந்த தாஸ், விஸ்வநாதன், மாரியம்மாள் உள்பட பலர் பணியாற்றினர்.
தற்போது 40 கோயில்களில் மட்டுமே நேர்காணல் நடந்து வருகிறது. காலை 10 மணி முதல் 4.30 மணி வரை இந்த நேர்காணல் நடந்தது. வருகிற 7 ந்தேதி இரண்டாம் கட்ட நேர்காணல் நடைபெறும்.


