தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு மருத்துவர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் 75 வயதான இவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி இசக்கியம்மாள் வயது 70. இவர்கள் இருவரும் வல்லநாட்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.
இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. மேலும் இசக்கியம்மாள் கடந்த மூன்று வருடங்களாக நடக்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார். கணவர் அருணாச்சலம் தான் அவரை பார்த்து வந்துள்ளார்.
இருவருக்கும் வயதாகிவிட்ட காரணத்தால் தங்களை பார்த்துக்கொள்ள வாரிசு இல்லையே என்று மன வேதனையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 27ம் தேதி இருவரும் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை இசக்கியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவரது கணவர் அருணாச்சலமும் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்களுக்கு வாரிசு இல்லாததால் வயதான தம்பதியினர் மனவேதனையில் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


