சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர்மணி. பொதுச்சேவை செய்வதில் வல்லவர். சென்னையில் வசித்தாலும் நெல்லை மண் மீது பக்தி கொண்டவர். இவர் தனது குடும்பத்தினையும் நேசிப்பவர். இவரது நண்பர் சங்கத்தின் தலைவர் சைமன் ஜெயக்குமாருடன் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருபவர்கள். சென்னையில் எங்கேயாவது நெல்லை பதிவு எண் கொண்ட வாகனங்களை கண்டால் பின்னாலே ஓடி எந்த ஊரு. யாரு? என விசாரிப்பார்கள். அந்த அளவுக்கு நெல்லை மீது பற்று. என்னோடு இணைந்து தாமிரபரணி சுத்தப்படுத்தும் பணியை செய்து வருகிறார்கள். சாக்கடை கலக்காத தாமிரபரணியை காண பல்வேறு உதவிகளை எனக்கு செய்து வருகிறார்கள் இருவரும். இதற்கிடையில் ஒரு நாள் நண்பர் சங்கர்மணி, “தனது தந்தை சப் இன்ஸ்பெக்டர் தெய்வத்திரு செல்லத்துரை அய்யா, தனது அத்தான்கள் நெல்லை தொழிலதிபர்கள் சங்கரபாண்டியன், சரவணன் ஆகியோர் தந்தை கிருஷ்ணமூர்த்தி அய்யா, தாயார் பஞ்சவர்ணம் அம்மா ஆகிய மூவர்களின் திருஉருவசிலையை திறக்கப்போகிறோம்”. வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.
நானும் கடந்த 29 ந்தேதி நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் இருந்து பத்தினிபாறை செல்லும் சாலையில் உள்ள பஞ்சவர்ண தோட்டத்திற்கு சென்றேன். அங்கே தான் அந்த மூவர் சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. என்னால் நம்பவே இயலவில்லை. அந்த காட்டுக்குள் மிகப்பெரிய கூட்டம் இருந்தது. அந்த கூட்டத்தில் கட்சி சார்பற்று அரசியல் வாதிகளும், சாதிமத பேதமில்லாமல் அந்த குடும்பத்தின் நண்பர்களும் பலரும் கூடியிருந்தார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சங்கர்மணி அவர்களின் குடும்பத்தின் பாசத்துக்கு கட்டுப்பட்டே இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது. மிகப்பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செய்து இருந்தார்கள். இவரது குடும்ப அன்பர்களின் மக்கள்சேவை மனப்பான்மையே நண்பர் சங்கர்மணியை மிகப்பெரிய சமூக செயல்பாட்டாளர் ஆக்கி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.
நண்பர் சங்கர் மணி அவர்களும், அவரது மைத்துனர்கள் சங்கரபாண்டியன் , சரவணன் ஆகியோருடன் அந்த மூன்று மகான்களின் சிலைகள் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் கொண்டு சென்ற பொன்னாடையை சங்கர்மணி அவர்களுக்கும் சங்கரபாண்டியன் அவர்களுக்கும் ஒன்றாக போற்றி மகிழ்ந்தேன். அங்கே 100க்கு மேற்பட்ட வி.ஐ.பிகள் இருக்கிறபட்சத்தில் என்னை மதித்து என்றோடு ஒன்றாக வந்து புகைப்படம் எடுத்த அவர்கள் மூவரையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது.

நண்பர் சங்கர் மணி அவரது குடும்ப நண்பர்களிடமும் என்னை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என அறிமுகப்படுத்தி பெருமிதம் கொண்டார். மிகப்பெரிய வி.ஐ.பிகள் நிறைந்த அந்த கூட்டத்தில் என்னை மதித்து அறிமுகம் செய்த சங்கர் மணிக்கு நான் எப்படி நன்றி கூறுவோம். சென்னை வாழ் மக்கள் நலச்சங்கத்தில் சென்னையில் நடந்த விழாவில் நெல்லை ரத்னா விருதை எனக்கு தந்து, எல்லோருக்கும் இறுதியில் என்னை பேச வைத்து என் பேச்சுக்கு மணிமகுடம் சூட்டிவர் அல்லவா இவர். கடந்த 10 நாள்களுக்கு முன்பு கூட புத்தக கண்காட்சிக்கு சென்ற போது என்னுடைய புதிய நாவலான கிளாச்சிட்டை வெளியிட உடன் இருந்து தாமிரபரணி சம்பந்தமாக முக்கிய நபர்களை சந்திக்க என்னோடு அவரின் சங்கத்தலைவர்சைமன்அவர்களை உடன் அனுப்பியதோடு, தாமிரபரணி சம்பந்தப்பட்ட ஆவணங்களை டாக்டர் சுதாசேசய்யன் அவர்களிடம் ஒப்படைக்க உதவியாக இருந்தவர் அல்லவா?
தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் நண்பரின் குடும்பத்தினை கண்டு மெய்சிலிர்த்து போய் விட்டேன். இதுபோன்ற விழா அத்தி பூத்தாற்போல் எப்போதாவது ஒரு முறைதான் வரும். என்வாழ்வில் அந்த விழாவை கண்டுள்ளேன். வாய்ப்பு தந்த சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கத்துக்கு எனது நன்றிகள் -முத்தாலங்குறிச்சிகாமராசு


