அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க 34 ஆவது மாநில மாநாட்டின் 2ஆவது நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் (அஞ்சல் 4) குமரன் தலைமை வகித்தார். 2ஆம் நாள் மாநாட்டை முன்னாள் மாநில உதவிச் செயலர் எஸ். கருணாநிதி தொடங்கி வைத்துப் பேசினார்.
மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட 2 ஆண்டு அறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மாநாட்டில், அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும், அஞ்சல் சேவையைத் தவிர பிற சேவைகள் செய்வதற்கு தபால் காரர்களை வலியுறுத்தக் கூடாது, மக்கள் சேவையை பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலர் சாரங் நிறைவுரையாற்றினார். மாநிலச் செயலர் கண்ணன் தொகுத்து வழங்கினார். மாநில அமைப்பு செயலரும் மேற்கு மண்டல செயலருமான கோவிந்தராஜ் வரவேற்றார். மாநில உதவி தலைவரும் தென் மண்டல செயலருமான சோலையப்பன் நன்றி கூறினார்.


