



மாலை சுமார் 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சித்தான் இரண்டு நாளாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி. பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றுதான் போனில் கேட்டுக்கொண்டே இருந்தார்களே அந்த நிகழ்ச்சி.
கிட்டத்தட்ட 200 பேர் பங்கு பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை மேலும் சுமார் 100க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என ஆர்வத்தினை கொண்டிருந்தார்கள். அவர்கள் தான் போனுக்கு மேல் போன் செய்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போதிய இடமில்லை. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி பெண்களுக்கானது. எனவே இரண்டு பெண்கள் இந்த நிகழ்ச்சியில் பேசினர்கள். சகோதரி வனிதா பாலா வரவேற்று பேசினார். இந்த சகோதரி நேற்றில் இருந்தே நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தார். இன்றும் பெண்கள் நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக தொகுத்து பேசினார். முதலில் உடல்நலம் பற்றி சலிகா சாகுல் என்ற சகோதரி பேசினார். பயனுள்ள நல்ல துடிப்பான சொற்பொழிவாகவே இருந்தது. மிகச்சிறப்பாக பேசினார். அதோடு மட்டுமல்லாமல் பெண்களிடம் உற்சாகமூட்டும் சிரிப்பை உருவாக்கி பேசினார்.
“அடுத்து கையிருப்பு பணத்தை எப்படி மியூச்சுவல் பண்ட் மூலம் இரட்டிப்பாகுவது?” என்ற தலைப்பில் தொழில் அதிபர் பலவேசம் அய்யாவின் மனைவி லலிதா தாமரைப் பாண்டியன் உரையாற்றினார். இந்த உரை முதலீட்டை விரும்பிகளுக்குப் பயனுள்ள உரையாக அமைந்தது. குவைத்தில் வாழும் தமிழர்கள் எப்படி பொருள் ஈட்டலாம் என மிகச்சிறப்பாக தகவல்களை திரட்டி பேசினார். இவர்களின் பேச்சு எனக்கு வியப்பாக இருந்தது. நான் தாமிரபரணி கரையையும், கிராமத்து கதைகளையும், தொல்லியல் எச்சங்களை பேசுபவன். இவர்கள் பேசும் பேச்சு எனக்கு பல தகவல்களை தந்தது. ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
நான் இறுதியாக “ஆச்சி சொன்ன ஆத்தோரக்கதைகளை” பேசினேன். கிட்டத்தட்ட 1 மணிநேரம் குவைத் சகோதரிகள் எனது பேச்சை ரசித்து கேட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் கிராமங்களில் வழங்கும் வழக்குகள். பேக்லாண்ட் கதை, மடையன் கதை, எட்டயபுரம் ஜமீன் கதை என பழமையான கதைகளை கூறும் போது அவர்கள் முக மலர்ச்சியுடன் கேட்டார்கள். ஒரு வேளை கூடுதலாக 1 மணிநேரம் பேசினாலும் கூட அவர்கள் கேட்க தயாராக இருந்தார்கள். ஆனால் நாங்கள் இந்தியா செல்லவேண்டும். எங்கள் விமானத்துக்கு நாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பதிவு செய்ய வேண்டும் எனவே எனது உரையை அவசரஅவசரமாக முடித்துக் கொண்டேன். பேச்சு முடிந்தவுடன் குவைத் வாழும் தமிழ் சகோதரிகள் நிறைய கேள்விகள் கேட்டார்கள். அதற்கெல்லாம் நான் சந்தோசமாக பதில் கூறினேன். அகழாய்வு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர் சுதாகர் பதில் சென்னார்.
என்னை தலைவர் ஜெகன் அவர்களின் துணைவியார் மற்றும் மற்றொரு சகோதரி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் சுவையான விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். குவைத் சகோரிகள் எங்களிடம் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட பல கேள்விகளை கேட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். இதில் பலர் என்னுடைய யூடியூப் பேச்சை கேட்டிருப்பதாக கூறினார்கள். எனவே அவர்களிடம் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தேன்.
எங்களால் உணவு உண்ண நேரமில்லை. எனவே பார்சலை செய்து, “விமானத்தில் செல்லும் போது சாப்பிட்டுக்கொள்ளுங்கள்” என கொடுத்தனர் நண்பர்கள்.
அந்த விழா நடக்கும் இடத்தில் இருந்து லிப்டில் கீழே இறங்கி வரும் போது நிறைய நண்பர்கள் எங்களோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதில் சிலர் என்னுடைய நூலை படித்து இருப்பதாகவும், என் பேச்சை கேட்டபிறகு இந்தியாவுக்கு வந்தால், தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூரை காணவேண்டும் என்ற ஆசைப்பிறந்தது. எனவே இந்தியா வந்தால் நிச்சயம் ஆதிச்சநல்லூரை காண வருவோம் என கூறினார்கள்.
யார் வந்தாலும் ஆதிச்சநல்லூரை சுற்றிக்காட்டுகிறேன் என முக மலர்ச்சியோடு கூறிவிட்டு இருவரும் கிளம்பினோம்.
( மறு மாதத்தில் 22.06.2024 பொருளாளர் சுப்பிரமணியன் அவரது குடும்பத்துடன் ஆதிச்சநல்லூர் வருகை தந்தார். அவரை நான் ஆதிச்சநல்லூர் கூட்டிச்சென்றேன். அவருக்கு இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த சைட் மியூசியத்தையும், கிருஷ்ணாபுரம் கலை சிற்பம் கோயிலையும் கொண்டு சென்று காட்டினேன். அவரின் வருகை எனக்கு மகிழ்ச்சியை அளித்தது)
எங்களை அசோக் அய்யா அவசர அவசரமாக அவரின் காருக்கு அழைத்துச் சென்றார். கார் விடுதியை நோக்கி விரைந்தது. அவர் டெயோட்டா ப்ராடோ- லேன்ட் குருயிசர்(PRADO-LAND CRUISER) என்ற காரை வைத்திருந்தார் அதில் தான் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்துப்பொருள்களும் இருந்தது.
“அசோக் சார் இந்தியாவிலிருந்து கொண்டு வந்த புத்தகப் பெட்டி எங்கே இருக்கிறது?” எனக் கேட்டேன்.
“சார் இந்த அவர் காரின் பின்னால்தான் இருக்கிறது” என்றார்.
புத்தகம் விற்று இருக்குமா? என கேட்டேன். பாதி விற்று விட்டது. பாதி புத்தகத்தினை பலவேச முத்து அய்யா தனது பொருப்பில் வைத்து கொள்வதாக கூறியுள்ளார். அவர் இங்கே நடைபெறும் நிகழ்ச்சியில் வரும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உங்களது நூல்களை பரிசாக கொடுக்க உள்ளார் என்றார். ஒரு எழுத்தாளனுக்கு கிட்டத்தட்ட தான் கொண்டு வந்த 20 ஆயிரம் மதிப்பிலான புத்தகம் முழுவதும் விற்று விட்டது என்றால் எவ்வளவு பெரிய சந்தோசம். அதுவும் தமிழகத்தின் கடைகோடியில் உள்ள எழுத்தாளன், கிராமத்து எழுத்தாளன் ஒருவனுக்கு குவைத்தில் தமிழர்கள் மத்தியில் இப்படியொரு சந்தர்பம் கிடைத்து இருக்கிறது என்றால் எவ்வளவு பெரிய சந்தோசம். இதையெல்லாம் பெற்றுத்தந்த டாக்டர் சுதாகர் அவர்களை நன்றியோடு பார்த்தேன். ஆனால் அவர் என்னிடம் நன்றியெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் பரபரப்பாகி விட்டார். சரியான நேரத்துக்கு விமான நிலையத்துக்கு செல்லவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
கார் விடுதி முன் வந்து நின்றது.
அசோக் அய்யா காரின் பின் கதவைத் திறந்தார்.
மிரண்டு விட்டேன். இந்தக் காரில் ஒரு குட்டி யானை வகை சிறிய லாரிபோல் நிறைய பொருட்கள் இருந்தது. அவைகள் அனைத்தும் விழாவைச் சிறப்பாக நடத்தத் தேவையானவை. தாம்பாளத் தட்டு, மேசை விரிப்புகள், தண்ணீர் பாட்டில், எங்களின் பெட்டிகள் போன்றவையே அவை.
நான் கவனித்த வரை அசோக் அய்யாவுடன் இணைந்து சுமார் 20 பேர்கள் இரண்டு நாட்கள் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உளமார்ந்த வேலை செய்திருக்கிறார்கள்.
இவர்களின் கடின உழைப்பால் தமிழ் நாடு பொறியாளர் சங்கம் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக அமைந்து விட்டது. இதனால் தமிழ் நாடு பொறியாளர் சங்கம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 1500க்கும் மேற்பட்ட தமிழ் சொந்தங்கள் மகிழ்ச்சியாக விழாவை அனுபவிக்கின்றனர்.
இந்த அமைப்பின் விழாக்களில் நிர்வாகிகளின் உழைப்பு முக்கியமானது. மற்றும் தவிர்க்க முடியாதது. இந்த வருடம் தமிழ் நாடு பொறியாளர் சங்கம் தன் 25வது ஆண்டுவிழாவைக் கொண்டாடினர். இதனை முன்னிட்டு தமிழ் நாடு பொறியாளர் சங்கம் இந்த ஆண்டில் மட்டும் 25 விழாக்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனர் என கேள்விபட்டோம்.
தமிழ் நாடு பொறியாளர் சங்க விழாக்கள் பிரமாண்டமானவை.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாடு பொறியாளர் சங்கம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
நிர்வாகிகள் தேர்வில் போட்டி இருந்தால் தேர்தல் நடத்துகின்றனர்.
“தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் ஒரு ஆண்டில் எத்தனை நிகழ்ச்சிகள் நடத்தலாம்?” எனத் திட்டமிடுகிறார்.
அதற்கு மொத்தம் எவ்வளவு பணம் வேண்டும்? எனக் கணக்கிடுகின்றனர்.
அடுத்து அந்த நிகழ்ச்சிகளை நடத்தப் பணம் திரட்ட வேண்டும். பணம் தமிழ் நாடு பொறியாளர் சங்கம் உறுப்பினர்களின் மாதச் சந்தாவிலிருந்தும் குவைத்தில் தொழில் செய்யும் தமிழ் தொழிலதிபர்களிடமிருந்து நன்கொடை யாகவும் பெறுகின்றனர்.
ஒவ்வொரு விழாக்களுக்கும் இவர்கள் இந்தியாவிலிருந்து இரண்டு அல்லது மூன்று விருந்தினர்களை அழைத்து வருகின்றனர். இந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சிக்கு நானும் டாக்டர் சுதாகர் அழைத்துவரப் பட்டோம்.
இது சாதாரண வேலை இல்லை.
விருந்தினருக்கு வீசா எடுக்க வேண்டும். விமான பயணச்சீட்டு வாங்க வேண்டும். வந்தவர்களை விமான நிலையம் சென்று அழைத்து வர வேண்டும். பின்னர் அவர்கள் தங்கள் வசதியாக ஒரு விடுதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.? வந்தவர்களை மூன்று நாட்களுக்குக் குவைத்தைச் சுற்றிக் காட்ட வேண்டும். திட்டமிட்ட நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியையெல்லாம் மிகத்திறம்பட நடத்தியுள்ளார்கள். செயலாளர் அசோக் அய்யாவை பெருமையோடு பார்த்தேன். அவர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எங்களை வழியனுப்ப பரபரப்பாக இருந்தார்.
நிர்வாகிகள் தாங்கள் திரட்டிய பணத்தை அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே செலவு செய்து முடித்து விடுகின்றனர்.
தமிழ் நாடு பொறியாளர் சங்கம் கையிருப்பு பணம் வைப்பதில்லை.
“இதனால் தமிழ் நாடு பொறியாளர் சங்கம் சிறப்பாகச் செயல் படுகிறது என அறிந்தேன். மேலும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க முடிகிறது” எனக் கூறினார்கள்.
“இவ்வளவு வேலைகளை எளிதாக உங்களால் எப்படிச் செய்ய முடிகிறது?” என அசோக் அய்யா அவர்களிடம் கேட்டேன்.
“என் மகன் மகள் எல்லாம் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்குத் துணையாக என் துணைவியாரும் சென்னையில்தான் இருக்கிறார்” என்றவர் புன்சிரிப்புடன் எங்களை பார்த்தார்.
‘ தனியாகத்தான் குவைத்தில் இருக்கிறேன். இந்த வேளையை பயன்படுத்தி தமிழ்நாடு குவைத் பொறியாளர் சங்க வேலையில் முழுமையாக என்னால் ஈடுபட முடிகிறது” என்று அசோக் அய்யா எடுத்துச் சொன்னார்.
“தமிழ் நாடு பொறியாளர் சங்கத்தினை தன் குடும்பமாக நினைத்து மனிதர் இப்படி உழைக்கிறார்” என பெருமையாக சொன்னார் டாக்டர் சுதாகர்.
பின்னர் ஒரு வழியாக நாங்கள் நாடு திரும்பத் தயாரானோம்.
பேரீச்சம் பழம், பாதாம் பிஸ்த்தா என நிறைய வகைகளைச் சாமுவேல் கொண்டு வந்து தந்தார். எந்த அளவுக்கு எடையில் புத்தகம் கொண்டு வந்தோமோ, அந்த அளவுக்கு எடைக்கு எடை எங்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டது. இதுவும் தமிழ் நாடு பொறியாளர் சங்கம் நிர்வாகிகளின் ஏற்பாடுதான் இது. பலவேசமுத்து அய்யா, சுப்பிரமணியன் ஆகியோரும் எங்களுக்கு பரிசாக ஆடைகளை தந்தார்கள். சந்தோசமாக வாங்கி வைத்துக்கொண்டோம்.
பெட்டியில் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்த இடத்தை இந்தப் பேரீச்சம் பழம், மற்றும் பாதாம் பிஸ்தாவால் நிறைத்துக் கொண்டோம்.? . எங்கள் இருவருக்கும் பிரமாண்டமான கேக் ஒன்றை குவைத்தில் முக்கிய பேக்கரியில் இருந்து வாங்கி வந்து தந்தார்கள்.
சுமக்க முடியாமல் சுமந்துவந்து காரில் ஏற்றினோம். “அத்தனையும் அன்பும் பாசமும்” என என் மனம் சொல்லியது.
சாமுவேலும் அவரின் நண்பரும் எங்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விடை பெற்று விமான நிலையத்திற்குள் செல்லத் தொடங்கினோம்.
திடீர் என அசோக் அவர்கள் கொடுத்த சிம் டாக்டர் சுதாகர் அவர்களிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே அவர் அலை பேசியிலிருந்து சிம்மை கழற்றி சாமுவேலிடம் கொடுத்துவிட்டார்.
அவர் “அசோக் அவர்களிடம் சிம்மை கொடுத்து விடுகிறேன்” என உறுதியளித்தார். இப்போது எங்களுக்கு தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லை. ஆனால் விமான நிலையத்தில் வொய்பை வசதி உண்டு. நீங்கள் அங்கே போனால் ஊருக்கு வாட்ஸ் அப்பில் பேசிக்கொள்ளலாம் என கூறினார்கள்.

அவர்களிடம் விடை பெற்று விமான நிலையத்திற்குள் நுழைந்தோம்.
இன்டிகோ விமானம் இரவு 2 அரை மணிக்குப் புறப்பட வேண்டியது. விமானம் வரும் இடம் மாற்றப்பட்டது. எனவே எங்களது லக்கேஜ்யை சுமந்து கொண்டே கிளம்பினோம். பார்மாலிட் எல்லாம் முடிந்தது. வரும்போது தூத்துக்குடியில் இருந்து நேரடியாக எங்களது லக்கேஜ் எல்லாம் குவைத் வந்து சேர்ந்தது. ஆனால் தற்போது அப்படி அல்ல. சென்னையில் இறங்கி, அதன் பின் சுமந்து சென்று தூத்துக்குடி விமானத்தில் எங்களது லக்கேஜை ஏற்ற வேண்டும் என்றார்கள். ஒரு மணி நேரம் தாமதமாகவே தன் பயணத்தைத் துவங்கியது இண்டிகோ விமானம். நன்றாகத் தூங்கிவிட்டோம். விழித்துப் பார்த்தால் விமானம் சென்னையில் இறங்கத் தயாராகிக் கொண்டிருந்தது. சாப்பிடாமல் கொண்டு வந்த பார்சல் அப்படியே இருந்தது. அப்போது காலை மணி 10.30. ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டாலும் குறிப்பிட்ட நேரத்தில் சென்னை வந்து சேர்ந்து விமானம். இந்தியாவுக்குள் வந்து விட்டோம். சொந்த மண்ணில் கால் வைத்து விட்டோம். மகிழ்ச்சியாக இருந்தது.
அங்கே காலை கடனை முடிக்க இயலவில்லை. அதற்குள் தூத்துக்குடி விமானம் தயாராக இருந்தது. எனவே சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லக்கேஜை எடுத்துக்கொண்டு உள்நாட்டு விமான நிலையத்துக்குள் வந்தோம். குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு எங்கள் விமானம் கிளம்பியது. குவைத்தில் இருந்து வந்த விமானத்தினை விட மிகச்சிறியது தான் தூத்துக்குடி விமானம்.
தூத்துக்குடியில் வந்து நான்காவது நாள், எங்கு ஏறினோமோ, அந்த இடத்தில் மீண்டும் காலடியை வைத்தோம். எங்களை சரியான நேரத்தில் கூட்டிச்செல்ல வர இருந்த எனது சிஷ்யன் சுடலைமணிச்செல்வன் எதிர்பாரத விதமாக 1 மணிநேரம் தாமதாமாக பேரன் நாட்டார்குளம் திருப்பதியோடு வந்து சேர்ந்தான். அதன் பின் நாங்கள் செய்துங்கநல்லூரை வந்தடைந்தோம்.
செய்துங்கநல்லூர் பஜாரில் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் எனது நண்பர்கள் சார்பிலும் இரண்டு விளம்பர பாதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் குவைத்தில் எனக்கு தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கிய படம் வைக்கப்பட்டிருந்தது.
உள்ளூர் நண்பர்களுக்கு எப்படி நன்றி சொல்ல என நினைத்த போது கண்கலங்கி விட்டேன்.
டாக்டர் சுதாகர் என்னிடம் கூறினார்.
சூரியன் தன்னைச் சுற்றிக் கொண்டிருக்கும் கோள்களை இழுத்துக் கொண்டு வினாடிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. இந்த வேகத்தில் நம் நட்சத்திர கூட்டத்தை ஒரு சுற்றுச் சுற்ற சுமார் 22.6 கோடி ஒளியாண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
இது விளக்குவது என்னவென்றால் நம் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு விடியலும் புதுப்புது இடங்களைக் கடந்து சென்றவாறே நம் காலம் நகர்கிறது.
நாம் கடந்து சென்ற இடத்தை மீண்டும் பார்க்க வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு இடம் என்ற படியே நம் வாழ்க்கை நகர்கிறது.
அதனால்தானோ என்னவோ பயணம் செய்ய அனைவரும் விரும்புகின்றனர். நான் என்ன விதிவிலக்கா?
எனக்கும் புதுப் புது இடங்களுக்குப் பயணித்துச் சுற்றிப் பார்க்க ஆசைதான். ஆனால் அதற்கு போதிய வாய்ப்பு கிடைக்க வேண்டுமே. குவைத்தில் கிடைத்த வாய்ப்பு போல் மேலும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமே.


தமிழ் நாடு பொறியாளர் சங்கம்தான் எங்களைக் குவைத்திற்கு அழைத்துச் சென்றது. இந்தச் சங்க நிர்வாகிகளுக்கும், இதன் உறுப்பினர்களுக்கும் மற்றும் நண்பர் பலவேசமுத்துவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று என்னிடம் கூறினார்.
நான் அவரிடம் சொன்னேன். எனக்கு யாரையுமே தெரியாது உங்களை தவிர. எனவே உங்களுக்கு எனது நன்றி என கூறி கையை குலுக்கினேன். கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.
(முற்றும்)


