தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் மலைப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான பகுதிகள் உள்ளது. இந்த பகுதியில் மிளா, காட்டுநாய், மான் என ஏராளமான காட்டு வன விலங்குகள் உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பஜார் பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க மிளா ஒன்று புகுந்தது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் மற்றும் வல்லநாடு வனத்துறைக்கு செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தெரிவித்தார்.
இதற்கிடையில் மிளாவை பார்க்க பொதுமக்கள் கூடியதால் மிளா ஆங்காங்கே ஓடியது. பின்னர் அருகில் இருந்த தனியார் திருமண மண்டபத்தின் வளாகத்தில் புகுந்தது. பின்னர் அங்கிருந்த கார் ஷெட்டுக்குள் புகுந்தது. மிளாவை காண ஏராளமான பொதுமக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தார். செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை, உதவி ஆய்வாளர்கள் சதீஷ், கண்ணையா, அனந்தமுத்துராமன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வல்லநாடு வன அலுவலர் பிருந்தா, வனவர் அப்பாசாமி, ஜெயக்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் கந்தசாமி, காசிராஜா, சண்முகம், பேச்சி உள்பட பலர் வருகை தந்து மிளாவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மிளாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் திருநெல்வேலி வனக்கால்நடை மருத்துவ பிரிவு வனக்கால்நடை மருத்துவர் மனோகரன், பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன், வனக்கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, செய்துங்கநல்லூர் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சரண்ராஜ் உள்பட வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 5 மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டு மிளாவை வனத்துறையினர் பிடித்தனர். பின்னர் அதனை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக வல்லநாடு வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் மிளாவை வல்லநாடு வனப்பகுதியில் விடப்படும் என்று வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


