செய்துங்கநல்லூரில் இயங்கிவரும் கருங்குளம் ஒன்றியஅலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணிககான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு மீன் வளம் மீனவர்கள் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புதிய தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுபம் ஞானதேவ் ராவ் வருகை புரிந்தார்.
இவர் செய்துங்கநல்லூர் முஸ்லீம் புதுத் தெருவில் புதிதாக போடப்பட்ட பேவர் பிளாக் சாலை, வசவப்பபுரம் ரோட்டில் சாக்கடை கலக்கும் இடங்கள், தென்னஞ்சோலை, மேலத்தூதுகுழி, அய்யனார்குளம் பட்டி, பஞ்சாயத்து கட்டிடம் பின்புறம் உள்ள அங்கன்வாடி ஆகிய பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவரை சந்தித்த செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், “செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இந்த ஊரில் ஜனத்தொகைக்கு ஏற்றப்படி அரசு திட்டங்களை செயல் படுத்த இயலவில்லை. போதிய சுதாதர ஊழியர்கள் இல்லை. எனவே இருப்பவர்களை வைத்து செய்துங்கநல்லூர் பஜாரை சுத்தப்படுத்துவது கடினமாக உள்ளது. மேலும் தற்போது செய்துங்கநல்லூர் கிராமம் முழுவதும் சாக்கடைகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதை அகற்றி சாக்கடையை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்யவும், உடைந்த வாறுகால் மற்றும் சாலைகளை சீரமைக்க கூடுதல் நிதியும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதைக்கேட்டுக்கொண்ட மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஆவண செய்வதாக வாக்களித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் செல்வி, கூடுதல் ஆணையாளர் பாக்கிய லீலா, ஒன்றிய பொறியாளர் சித்திரை சேகர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்கத்தலைவர் குமார், பஞ்சாயத்து உறுப்பினர் அபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


