தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்னத்தூர் பொத்தை என போற்றப்படும் இடம் உள்ளது. இங்குள்ள மலை உச்சியில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பிரதிட்சை செய்த விளக்கு தூணில் ஜோதி வழிபாடு நடந்து வருகிறது.
தமிழகத்தின் எத்தனையோ அருளாளர்கள் இறைவனை ஜோதி வடிவில் வணங்கி மகிழ்ந்தனர். அவர்கள் எவ்வாறு இறைவனை ஜோதி வடிவில் குறிப்பிட்டார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம்.
வள்ளல் பெருமான் இறைவனை ஜோதியாகவே வழிபட்டு வந்தார்கள். அருட்பெருஞ்ஜோதி. அருட் பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி என்ற தாரகமந்திரத்தை உலகினுக்குத் தந்தார்கள்.
வள்ளலார் வழியிலே வல்லநாட்டு சுவாமிகளும் இறைவன் ஒருவனே அவன் ஒளி வடிவமானவன். ஒளியே சிவமானும் என்ற எண்ணத்தில் இறைவனை அருட்பெருஞ் ஜோதியாக அமைத்து வணங்கி வந்தார்கள்.
சுவாமிகள் திருமணம், புதுமனை புகுவிழா விழாக்களிலும் நோய்வாய்ப்பட்டு துயருற்றோர் இல்லங்களிலும் புத்திர சந்ததி இல்லாத வீடுகளிலும் 108, 1008 ஜோதி வழிபாடுகள் நடத்தி, தெய்வ பாவனையை தீபத்தில் காண் என்ற தாரக மந்திரத்தை உலகோர் அறிந்து ஆறுதல் ஏற்பட வழிவகுத்தார்கள்.
திருமூலரின் வழித்தோன்றல் காலங்கி நாதரின் பிரதமச் சீடர் போகர் என்பவர் ஆவார். போகர் போன்ற சித்தர்கள் கண்ட ஆதாரங்கள் ஆறு. இந்த ஆதாரங்களை முருகனுக்கு அறுபடை வீடுகளாகக் கட்டி ஏழாவது நிலையை ஒப்பற்ற எல்லை நிலையாகக் காட்டினார்கள். வள்ளலார் சுவாமிகளும் இந்த ஏழாவது நிலையைத் தனது அருட்பா அகவலில்
எழுநிலை மிசையே இன்புறுவாகி
வழுநிலை நீக்கி வயங்கு மெய்ப்
பொருளே – அகவல் 888
ஏழாவது நிலையே தகர மெய். ஆறு ஆதாரம் கடந்த ஏழாவது நிலை இந்த மனித நிலையின்றின்றும் அதீத நிலைக்கு கொண்டு செல்லும். இந்த நிலை இன்பமே உருவான நிலை. இந்நிலையே குற்றமெல்லாம் நீக்கும் மெய்ப்பொருள் நிலை. வல்லநாட்டு சுவாமிகளும் ஆறு ஆதார சோதி நிலையங்களை அமைத்து ஆதாரங் கடந்த ஒரு எல்லை நிலைக்கும் இடம் அமைத்து உருவத்திற்குப் பதிலாக அருவத்தில் விளக்கமைத்து வழிபாடு நடத்தி வந்தார்கள்.
ஒவ்வொரு ஆதார விளக்கிற்கும் ஆண்டில் இரண்டு அமாவாசைகளில் சோதி வழிபாடுகள் நடத்தி அன்னதானமும் செய்ய வழிவகுத்தார்கள். வருடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால் இரண்டாவது அமாவாசையை ஏழாவது நிலைக்கு உரிதாக்கி ஏழாவது நிலையில் ஜோதி ஏற்றி வழிபாடு நடத்தி அன்னதானம் நடைபெற வழிவகுத்துள்ளார்கள். சுவாமிகள் துவக்கியருளிய அமாவாசை ஜோதி வழிபாடு நடைபெறும் இடங்கள்.
அருள் அன்பு மலை மூலைக்கரைப்பட்டி( நெல்லையில்இருந்து தெற்கே 16 கிலோ மீட்டர்தொலைவில் உள்ளது. இங்கு ஆடி , மற்றும் தை மாதங்களில் அமாவாசை ஜோதி வழிபாடு நடைபெறும்.
அருள் ஆனந்த மலை. செங்«£ட்டை புகை வண்டி நிலையத்திற்கு வடபுறம் உள்ளது. இங்கு ஆவணி மற்றம் மாசி மாத அமாவாசை ஜோதி வழிபாடு நடைபெறும்.
அருள் இன்ப மலை & தென்காசி மாவட்டம் புளியங்குடி தெற்கில் 4 கிலோ மீட்டர் தொலைவில் புன்னையா புரத்தில் அருகில் உள்ள முந்தன் மலைக்கு மேலே அமைந்துள்ளது.
அருள் ஈன்ற மலை & நெல்லையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் குப்பக்குறிச்சியில் இந்த மலை உள்ளது. இஙகு சித்திரை மற்றும் ஐப்பசி அமாவாசையில் நடைபெறும்.
அருள் நீ உண்மை மலை & திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. பழனியிலிருந்து மேற்கில் 22 கிலோமீட்டர் பாப்பம்பட்டி அருகில் இந்த மலை உள்ளது. இங்கு வைகாசி ற்றும் கார்த்திகை மாதம் அமாவாசை ஜோதி வழிபாடு நடைபெறும். தற்போது எல்லா மாதமும் அமாவாசை ஜோதி வழிபாடு நடந்து வருகிறது.
அருள் ஊற்று மலை & நெல்லை மாவட்டம் அழகிய பாண்டிய புரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தெலைவில், உக்கிரன் கோட்டை அருகில் காடுவெட்டி உள்ளது. இங்கு ஆனி மற்றும் மார்கழி மாதம் அமாவாசை ஜோதி வழிபா டு நடந்து வருகிறது.
அருள் எல்லை மலை- & குன்னத்தூர் குன்று நெல்லை டவுனில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால் இரண்டாவது அமாவாசை அன்று குன்னத்தூரில் தீப வழிபாடு நடைபெறும். தற்போது இங்கு பௌர்ணமி ஜோதி வழிபாடும், கிரிவலமும் நடைபெறுகிறது.
இந்த ஏழு இடங்களிலும் குறிப்பிட்ட அமாவாசை நாட்களில் ஜோதி வழிபாடு நடத்தி அன்னதானம் செய்ய சில குடும்பத்தினரையும் அவ்வூரிலுள்ள பெரியவர்களையும் பொறுப்பேற்கச் செய்துள்ளார்கள் வல்லநாட்டு சுவாமிகள். அவர்களுடைய வழித்தோன்றல்களும் இந்த அரிய பணியைச் செய்து ஆன்ம லாபம் அடைந்து வருகிறார்கள்.
அருள் அன்புமலை எனும் மூலைக்கரைப்பட்டி நெல்லையில் இருந்து திசையன்விலை செல்லும் பாதையில் பாளை புதிய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நிறைய தகவல்களை பேராசிரியர் வெ. சங்கரபாண்டியன் எழுதி மேடை மணி வெளியிட்ட வல்லநாட்டுச் சித்தர சாது சிதம்பர சுவாமிகள் வரலாறு என்னும் நூலில் காணலாம். அந்த நூல் சுற்று பயணம் செய்து வந்தாலும் கூட அதை பற்றி அறியமுடிகிறது. நூலாசிரியர் வெ.சங்கரபாண்டியன் கடந்த 2010ஆண்டுக்கு முன்பே அனைத்து இடங்களுக்கும் சென்று பதிவிட்டுள்ளார். நாமும் அவர் வழியில் எல்லா இடத்துக்கும் சென்று ஜோதி வழிபாடு காண வேண்டும் என்று ஆவலுற்றோம். அதற்காக ஏழு அமாவாசை ஜோதி தலங்களுக்கு செல்ல ஆயத்தமானோம். அதே வேளையில் எங்களுக்கு வழிகாட்ட ஒருவர் தேவைப்பட்டது. இதற்காக நாங்கள் சந்தித்தது, வல்லநாடு சுவாமிகளுடன் பயணித்த பெரியவர் ஒருவரை.
அவர் பெயர் இரா. ஈஸ்வரன். திருநெல்வேலி அருணகிரி தியேட்டர் அருகில் வ.உ.சி தெரு 33 எண் வீட்டிலக்கத்தில் வசிக்கும் அவரை தேடி நானும் தம்பி சுடலை மணிச்செல்வனும் சென்றோம். ஈஸ்வரன் அய்யா வல்லநாட்டு சுவாமிகளை பற்றி மிக அதிகமாக தெரிந்து வைத்திருந்தார்கள். அதோடு மட்டுமல்லாமல் “எமது வாழ்வில் வாழும் வல்லநாடு சாது சிதம்பர சுவாமி” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வைத்திருந்தார்கள். மேலும் சுவாமியை பற்றி மற்றுமொரு நூல் எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
நாங்கள் சென்றவுடன் எங்களை இன்முகத்துடன் அழைப்பதற்காக பிரதான சாலைக்கே வந்து விட்டார். அதன் பிறகு வீட்டுக்குள் அழைத்து சென்றார். வீட்டில் பாய் விரித்து எங்களை அமர செய்தார். குளிர்ந்த தண்ணீர் கொடுத்து உபசரித்து விட்டு, பேரீச்சம் பழம் சாப்பிடத்தந்தார். அவரின் வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். சன்மார்கக முறையில் தான் அவர்வீடு இருந்தது. சுவாமி படத்தின் முன்பு அணையா விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
சுவாமியோடு ஈஸ்வரன் அய்யா பல வேளைகளில் ஒன்றாக பயணித்துள்ளார். எனவே சுவாமியை பற்றி நிறைய தகவல்கள் ஈஸ்வரன் அய்யாவிடம் இருந்து எங்களுக்கு கிடைத்தது. ஈஸ்வரன் அய்யா தனியாகத்தான் அந்த வீட்டில் இருந்தார். அவருக்கு 80 வயது இருக்கும் ஆனாலும் அவரின் குரல் கணீர் என ஒலித்தது. அதை கேட்கும் போது நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம் பிறந்தது. அய்யா வல்லநாட்டு சுவாமிகளின் அமாவாசை ஜோதி வழிபாட்டு தலங்களை அறிய வேண்டும் என்று கேட்டவுடன் அவர் எங்களிடம் பேச ஆரம்பித்தார். அவரிடன் பேசிய விவரங்களை வைத்துக்கொண்டு தான் நாங்கள் ஒவ்வொரு ஜோதியை நோக்கி தரிசிக்க பயணித்தோம்.
இந்த வரலாற்றை தொ-குத்து நான் வரங்களை அள்ளித்தரும் வல்லநாடு சித்தர் எனும் நூலை எழுதினேன். இந்த நூலை தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியிட்டு, தற்போது நல்ல விற்பனையில் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நான் எழுத்து துறையில் பயணிக்கும் போது முதல் முதல் எழுதிய நூல் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள். இந்த நூலை சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம் வெளியிட்டது.
வல்லநாடு சித்தர் நூல் என்னை பல்வேறு இடங்களில் அடையாளம் படுத்தியது. முதல் ஆறு ஜோதி பற்றி அறிய வளங்களை அள்ளித்தரும் வல்லநாடு சித்தர் நூலை படிக்கவும்.
ஏழாவது ஜோதி குன்னத்தூர். அருள் எல்லை மலை. நெல்லை டவுணில் இருந்து குன்னத்தூர் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது . இதை அருள் எல்லை மலை என்கிறார்கள். ஓரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால் இரண்டாவது அமாவாசை அன்று குன்னத்தூரில் உள்ள பொத்தையில் தீப வழிபாடு நடைபெறும். தற்போது ஈஸ்வரன் அய்யா ஏற்பாடில் பௌர்ணமி கிரிவலமும், பௌர்ணமி பூஜையும் நடைபெறுகிறது.
இதை பற்றி பேராசிரியர் சங்கரபாண்டியன் தனது நூலில் விரிவாக எழுதியுள்ளார்.
வல்லநாட்டு சுவாமிகள் தமிழ்நாட்டில் ஆறு இடங்களில் வருடத்தில் இரண்டு மாத அமாவாசை நாட்களில் ஜோதி வழிபாடுகள் நடத்தி அன்னதானமும் படைத்து அருளாசி பெற வழிவகுத்தார்கள். இந்த வழிபாடு பூரத்துவம் அடைவதற்கு ஏழாவது இடத்திலும் அமாவாசை ஜோதி வழிபாடு நடத்த வேண்டும் என்று நம் சுவாமிகளுக்குத் தெரியும். மனித உடம்பிலுள்ள குண்டலீக சக்தியை ஏழாவது இடமாகிய சிரசில் நிலைபெறச் செய்வதற்கு ஒப்பாகும்.
அருளாளர்கள் தன் உடலினுள் இருக்கும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை முதலிய ஆறு இடங்களில் ஆன்ம ஜோதியை தரிசித்து ஏழாவது இடமாகிய சகஸ்தரஸதானமாகிய சிவனோடு சிற்றம்பலத்தில் ஜோதி தரிசனம் கண்டு அருள் அனுபவம் கை கூடப்பெறுவார்கள்.
இந்த அக அனுபவத்தை பக்தர்கள் புரிந்து கொள்ள புற அனுபவமாக தமிழகத்தின் ஏழு இடங்களில் ஆதார விளக்குகள் அமைத்து அமாவாசை ஜோதி வழிபாடுகள் நடத்தி அன்னதானமும் அளித்துள்ளார்கள் வல்லநாட்டு சுவாமிகள். இதன் மூலம் மக்களை நல் வழிப்படுத்தி உள்ளார்கள்.
ஏழாவது இடத்திற்கு அமாவாசை ஜோதி தரிசனம் நடத்த குன்னத்தூர் பொத்தையை வல்லநாட்டு சுவாமிகள் தேர்ந்தெடுத்தார்கள். வருடத்தில் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகள் அமைந்தால் இரண்டாவது அமாவாசை குன்னத்தூர் பொத்தையில் அமாவாசை ஜோதி தரிசனம் நடத்துவதற்கு சுவாமிகள் தெரிவு செய்துள்ளார்கள்.
குன்னத்தூர் பொத்தை என்பது திருநெல்வேலி டவுணிலிருந்து பேட்டை கல்லூரி, சேர்மாதேவி செல்லும் சாலையின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. பேருந்தில் பயணம் செல்லும் போது இடப்புறமாகப் பார்த்தால் செம்மண் நிறைந்த ஒன்றிரண்டு மரங்களோடு கூடிய சிறிய குன்றாகத் தெரியும்.
குன்றின் உச்சியில் தீப ஜோதி வழிபாடு நடத்த நம் சுவாமி பெயரில் 5 செண்டு நிலமும் பெறப்பட்டது. தற்போதும் அது அரசு பதிவில் உள்ளது.
ஒவ்வொரு அமாவாசைத் தீபம் நடத்தும் ஒவ்வொரு இடத்துக்கும் போற்றுதற்குரிய முக்கியத்துவம் உண்டு. குன்னத்தூர் பொத்தையைப் பற்றியும் சரித்திர சான்றுகள் உண்டு. குன்னத்தூர் பொத்தைக்கருகில் மேல முன்னீர் பள்ளத்தைச் சார்ந்தவர்கள் மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன் ஒருவனிடம் அரசவைப் பணியாளர்களாக இருந்தபோது மன்னனிடம் குன்னத்தூர் பொத்தை பற்றியும் அங்கு வாழ்ந்த தவமுனிவர்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்கள்.
இப்பெருமையை உணர்ந்த மன்னன் தனது கடைசி காலத்தில் குன்னத்தூர் பொத்தையில் தவம் செய்து இறைவனடி சேர்ந்த போது முன்னீர்பள்ளத்திலேயே சமாதி செய்துள்ளார்கள். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 22ம் தேதி பாண்டிய மன்னனின் குருபூஜை சிறப்பாக நடைபெறுகிறது. தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் மக்கள் இந்த குருபூஜையில் கலந்து பாண்டிய மன்னனின் அருளை பெற்று வருகின்றனர்.
டெல்லி தயாள் பாக்ய ஸ்ரீ இராதா ஸ்வாமி இயக்கம் நாடு முழுவதும் பரவியுள்ள ஒரு ஆன்மீக அமைப்பாகும். தமிழகத்தில் இவ்வியத்தின் மகானாக விளங்கியவர் சைதன்யானந்த குருதாச சுவாமிகள். இவர் திருநெல்வேலி டவுணைச் சார்ந்தவர். அற்புத சித்திகள் வாய்க்க பெற்றவர். பாடல்கள் இயற்றுவதிலும், இனிமையாக பாடுவதிலும், சிறந்து விளங்கினார். இவர் குன்னத்தூர் பொத்தையில் சில காலம் தங்கி ஆன்மீக அனுபவங்களைப் பெற்றுள்ளார்.
இவ்வாறு ஆன்மீகச் சிறப்பு வாய்ந்த இப்பொத்தையில் பல மகான்கள் சித்தர்கள் தங்கி தவமியற்றிப் பல பேருகளைப்பெற்றுள்ளார்கள்.


