நாங்கள் தற்போது குவைத்தில் பார்க்க நினைத்த இடம் அஹ்மத் அல்-ஜாபர் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்காட்சி நடக்கும் இடமாகும். இந்த இடம் குவைத்தில் மிக முக்கியமான இடமாகும்.
இந்த இடத்துக்கு கடந்த முறை முனைவர் சுதாகர் வந்த போதும் கூட்டி வந்திருந்தார்களாம். எனவே இந்த இடத்தினை பற்றி பெரு¬மையாக அவர் என்னிடம் கூறினார்.
பாகில் இருந்து அகமதி நோக்கி கிளம்பினோம். அதில் முதலில் 30 எண் ரோட்டில் பயணம் செய்தோம். சாலைகள் மிக பிரமாண்டமாக இருந்தது. பல இடங்களில் பாலங்களையும் கடந்துசெல்லவேண்டியது இருந்தது . குவைத் சிட்டியில் இருந்து சவுதி அரோபியா செல்லும் 40 எண் சாலையில் எங்கள் கார் ஏறியது. இந்தசாலையே குவைத் மன்னரின் பெயரில் தான் உள்ளது. இங்குத்தான் குவைத் எண்ணெய் கம்பேனியின் தலைமை இடம் மற்றும் முக்கிய இடங்கள் எல்லாம் உள்ளன. இங்குத்தான் குவைத் ஆயில் கம்பேனியின் கண்காட்சி உள்ள அருங்காட்சியகம் உள்ளது. இந்த இடத்தினை நோக்கி சாமுவேல் எங்களை கூட்டிச்சென்றார். எங்கள் வாகனம் செல்லும் போதே நான் இங்குள்ள அருங்காட்சியங்கள் குறித்து அசைப்போட ஆரம்பித்தேன்.
குவைத் சிறிய நாடுதான். இந்த நாட்டில்தான் எத்தனை எத்தனை அருங்காட்சியங்கள். அவர்களது முன்னோர்கள் புகழ்பாடும் அருங்காட்சியகம் உள்பட பல அருங்காட்சி யகத்தினை அரசு நடத்துகிறது. கட்டணம் இல்லை. உள்ளே சென்றால் அதை விளக்கி சொல்வதற்கு ஊழியர்கள் உள்ளனர். நமது ஊரில் பெருமையான விசயங்கள் பல உள்ளன. தற்போது கூட ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதல் சைட் மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் மாணவ மாணவிகளுக்கு விளக்கி சொல்ல ஆள் இல்லையே. என்பது எனக்கு குறைபாடாகத்தான் இருந்தது.
கிட்டத்தட்ட எண்ணெய் கிணறு மட்டுமே வரலாறு கொண்ட குவைத் மாநகரில் எத்தனை எத்தனை அருங்காட்சியங்கள். ஆனால் இந்தியாவில் தடுக்கி விழுந்தால் பல வரலாற்றுகளை மண்ணுக்கு புதைத்து வைத்திருக்கும் இடங்கள் உள்ளன. இந்த இடங்களை அகழாய்வு செய்து, அதற்காக உருவாக்கப்பட்ட அருங்காட்சியங்களில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் ஒன்றாகும். இங்குதான் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு அடிக்கல் நாட்டியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஆதிச்சநல்லூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நட்டினார். அந்த பணி அப்படியே கிடப்பில் கிடக்கிறது. ஆனால் ஒரே ஒரு சந்தோசம் , இந்தியாவிலேயே முதல் முதல் சைட் மியூசியம் அப்போதுதான் ஆதிச்சநல்லூரில் திறக்கப்பட்டது. ஆனால் அதை பேணி பாதுகாக்க நமது மத்திய அரசு படாத பாடு அல்லவா படுகிறது. அதற்காக நீதிமன்றம் ஏறி இறங்கி அல்லவா நாம் பெறவேண்டியது உள்ளது.
நாங்கள் நினைத்துக்கொண்டு இருக்கும்போதே எங்கள் கார் எண்ணெய் கண்காட்சி அருகில் சென்றது. அந்த கண்காட்சி உள்ள இடத்தில் பார்கிங் மட்டும் மிகப்பெரியதாக இருந்தது. அங்கே காரை நிறுத்தி விட்டு நுழைவு வாயில் உள்ளே வந்தோம்.
உள்ளே தானியங்கி கண்ணாடி கதவு வழி எங்களுக்காக திறந்தது. உள்ளே நுழைந்தோம். அங்கு மிகப்பெரிய பிரமண்டமான எல். ஈ .டி ஒன்று ஒடிக்கொண்டிருந்தது. நாங்கள் சென்றவுடன் அங்குள்ள பணியாளர் ஒருவர் எங்களிடம் வந்தார்.
கண்காட்சி திறக்க 1 மணி நேரம் ஆகும். அது வரை அமருங்கள் என்று கூறினார். நாங்கள் அங்கு போடப்பட்டிருந்த இருக்கையில்அமர்ந்தோம். அருகில் எல்.இ. டிவி ஓடிக்கொண்டிருந்தது.
அந்த மிகப்பிரமாண்டமான டிவியில் எண்ணெய் கிணறு இருக்கும் இடத்தினை எப்படி கண்டு பிடித்தார்கள். அதன் பின் எண்ணெய்யை எப்படி எடுத்தார்கள். அதற்காக பல மீட்டர் ஆழ் துளை கிணறு அமைத்தது. அதன் பின் எண்ணெய்யை எடுத்து சுத்திகரிப்பு செய்தது உள்பட பல காட்சிகள் மிகப்பிரமாண்டமாக விரிந்தது.
நமது மாநில அரசு பாளையங்கோட்டை ரெட்டியார் பட்டி மலையில் அமைத்துக்கொண்டிருக்கும் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அருங்காட்சியகத்திலும் இதுபோல ஒரு எல். இ. டி டிவி வைத்து தமிழர்களின் பெருமையை பறை சாற்றாப் போவதாக கேள்விப்பட்டேன். எனக்கு குவைத் பெருமை ஓடும் அந்த டிவியில் தமிழரின் பெருமை பொருநை அருங்காட்சியத்தில் இது போன்று ஓடினால் எப்படி இருக்கும் என்று நினைத்துபெருமை பட்டுக்கொண்டேன்.
சரி கண்காட்சி திறக்கட்டும். அதற்குள் குவைத்தில் என்ன அருங்காட்சியகம் இருக்கிறது என்ற தகவலை காண்போம்.
நாம் இப்போது பார்க்க போகும் கண்காட்சியை கே.ஓ.ஜி என்று கூறுகிறோம். குவைத் மற்றும் உலகம் முழுவதும் எண்ணெய் வரலாற்றைக் கூறுவதன் மூலம் குவைத் ஆயில் கம்பேனி (ரிளிசி) முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் உருவானது முதல் அதன் கண்டுபிடிப்பு வரை மற்றும் எண்ணெய் பொருட்கள் உதவும் அனைத்து வழிகளும், நம் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன என்பதை இந்த கண்காட்சி பார்ப்பவர்களுக்கு உணர்த்துக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் நமது நவீன வாழ்வில் அவை ஆற்றும் முக்கிய செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் கேள்விகள் எழும்புவதற்கு இந்தக் கண்காட்சி உதவுகிறது. அதைத்தான் நாம் ஒரு மணி நேரத்தில் நேரில் காணப்போகிறோம்.
அடுத்தது அல் காசிர் அல் அஹ்மர் அருங்காட்சியகம். அல்காசிர் அல்அஹ்மர் என்றால் சிவப்பு அரண்மனை. 1914–&-1915 இல் மறைந்த ஷேக் முபாரக் அல்-சபாவின் ஆட்சியின் போது அதைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சிவப்பு களிமண்ணால் ஆனா அரண்மனை . இதனால் இது சிவப்பு அருண்மனை என பெயர் பெற்றது. இது குவைத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளமாக கருதப்படுகிறது. இது குவைத் மக்களை ஒருங்கிணைத்த தலைவிதியான போரின் நினைவூட்டலாக அமைந்துள்ளது . இந்த அரண்மனை அல் ஜஹ்ரா – தீயணைப்பு நிலைய தெரு வில் அமைந்துள்ளது.
அடுத்தது கடல்சார் அருங்காட்சியமாகும். அல்ஷர்கியா பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடல்சார் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. குவைத்தின் வரலாற்றில் கடல் வாழ்வின் முக்கியத்துவம் மற்றும் கடந்த காலத்தில் வர்த்தகத்தை நம்பியிருந்தான் இருந்தது. தேசிய கலாச்சாரம், கலை, கடிதங்கள் மற்றும் கலைகளுக்கான தேசிய கவுன்சில், கடல் வாழ்வின் வரலாற்றைக் காட்சிப்படுத்தும் கட்டிடத்தை ஒரு அருங்காட்சியகமாக மாற்றியது. பல்வேறு கப்பல்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் தொடர்பான அனைத்தும் இங்குள்ளது.: அரேபிய வளைகுடா செயின்ட் – ஷார்க் மாலில் இந்த அருங்காட்சியகம் உள்ளது.
அல் குரைன் தியாகிகள் அருங்காட்சியகம் குவைத்தில் உள்ளது. 26 பிப்ரவரி 1991 இல், மறைந்த ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா, குவைத் தேசத்தின் சகிப்புத்தன்மையை நினைவூட்டும் வகையில் வீட்டை அருங்காட்சியகமாக மாற்ற உத்தரவிட்டார். அல்குரைன், பிளாக் 4, செயின்ட் இல் 3, வீடுகள் இதற்காக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பூம் அல் முஹல்லப் என்ற அருங்காட்சியம் குவைத்தில் உள்ளது. 1937 இல் கப்பல் கட்டுபவர்களால் 70 நாட்களில் கட்டப்பட்ட ஒரு பாய்மரக் கப்பலை கட்டினர். 1991 ஆம் ஆண்டில், பூம் அல் முஹல்லாப்யு ஈராக்கியப் படைகளால் எரிக்கப்பட்டு, உலோகம் மற்றும் சாம்பல் குவியலாக மாற்றப்பட்டது. 1995 ஆம் ஆண்டில், மறைந்த ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா அல் முஹல்லாப் மீண்டும் அந்த கப்பலை கட்டப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த 70 நாட்களில் கட்டிய கப்பல் உள்ள அருங்காட்சியகம் இதுவாகும்.
ஷேக் முபாரக் கியோஸ்க் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. இது ஷேக் முபாரக் அல்-சபாவின் தலைமையகம் மற்றும் அவர் வர்த்தகத்தை மேற்பார்வையிட்ட இடம். குடிமக்களின் பிரச்சினைகளைப் பின்தொடர்வது, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது. இது குவைத் சிட்டியில் சௌக் அல்முபர்கியா என்ற இடத்தில் உள்ளது.
அல்முபர்கியா பள்ளி குவைத்தின் முதல் பள்ளியாக கருதப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக டிசம்பர் 22, 1911 இல் திறக்கப்பட்டது. கலாச்சாரம், கலை மற்றும் கடிதங்களுக்கான தேசிய கவுன்சில் இதை குவைத்தில் கல்வி வரலாற்றின் அருங்காட்சியகமாக மாற்றியது. இந்த இடத்தினை பார்வையிடும் நேரம் கோடை காலங்களில் காலை 9:00 – 12:00 மணி. மாலை 4:30 மணி – இரவு 8:30 மணி. குளிர்காலங்களில் காலை 9:00 – 12:00 மாலை 4:00 மணி – 8:00. ரமலான் காலங்களில் காலை 9:00 மணி 12:00 மணி. இரவு 8:30 மணி – 11:00 மணி என ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, சனிக்கிழமை காலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை மூடப்படும்
குவைத் தேசிய அருங்காட்சியகம் என்பது குவைத்தில் மிக முக்கிய அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் 1983 இல் திறக்கப்பட்டது. பழைய தொல்பொருள், இஸ்லாமிய மற்றும் கலாச்சார கண்டுபிடிப்புகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டது. பாரம்பரியத்தைப் பற்றிய அறிவைப் பாதுகாத்தல் மற்றும் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட கலாச்சார மையமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது.
இங்குள்ள பாரம்பரிய கண்காட்சி 2003 இல் திறக்கப்பட்டது. இது பழைய குவைத் மற்றும் பழைய குவைத் கைவினைப்பொருட்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இது பழைய குவைத் வீட்டின் அனைத்து பிரிவுகள் மற்றும் சுற்றுப்புறங்களுடன் பாணியையும் காட்டுகிறது. கூடுதலாக, இது கடல் வாழ்க்கை மற்றும் கப்பல் தயாரிப்பு, குவைத் ஆடைகள், நகைகள் மற்றும் இசைக்கருவிகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்தை சித்தரிக்கிறது. குவைத் தேசிய அருங்காட்சியகத்திற்குள் தான் இந்த இடமுள்ளது.
தொல்லியல் கண்காட்சியும் குவைத் தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது மற்றும் குவைத் ஸ்தாபனம் வரை கற்காலம், வெண்கல வயது, மற்றும் இஸ்லாமிய யுகம் போன்ற பழைய காலகட் டங்களுக்கு முந்தைய தொல்பொருள் கண்டுபிடிப்புகளின் தொகுப்பை காட்சிப்படுத்துகிறது.
குவைத் தேசிய அருங்காட்சியகத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப சாதனையாக கோளரங்கம் கருதப்படுகிறது. இது கோள வடிவமானது. பூகோளத்தை ஒத்திருக்கிறது. இது வானியல் சுற்றுப்பாதைகள், பூமியின் சுழற்சியின் அச்சு மற்றும் விண்வெளி ஆகியவற்றைக் காட்டும் இடஞ்சார்ந்த காப்ஸ்யூல் மூலம் வானியல் பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறது.
டிக்சன் ஹவுஸ் என்ற இடமும் மிகச்சிறப்பானதாகும். குவைத்தின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் முபாரக் அல்-சபா மற்றும் பிரிட்டன் இடையே ஒரு வரலாற்று ஒப்பந்தத்திற்குப் பிறகு, 1904 ஆம் ஆண்டில், இது ஒரு பிரிட்டிஷ் அரசியல் பிரதிநிதியின் வசிப்பிடமாகவும் அலுவலகமாகவும் மாறியது. 1929 இல், இது கர்னல் ஹரோல்ட் டிக்சன் மற்றும் அவரது மனைவி வயலட்டின் தலைமையகமாக மாறியது. இப்படித்தான் டிக்-சன் கலாச்சார மையத்திற்கு பெயர் வந்தது . அரேபியன் வளைகுடா செயின்ட் – ஷார்க் மாலுக்கு கிட்டத்தட்ட எதிரே இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
பைட் அல் படர் (அல் படேர் ஹவுஸ்) என்பது குவைத்தின் பழைய வீடு ஆகும். இது ஒரு தனித்துவமான கட்டிடக்கலை மாதிரியை சித்தரிக்கிறது. இது கடந்த நூற்றாண்டில் குவைத்தின் சமூகத்தில் பொதுவான சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார தோற்றங்களை தெளிவாக சித்தரிக்கிறது. இந்த இடம் குவைத் தேசிய அருங்காட்சி யகத்துடன் அமைந்து இருக்கிறது.
குவைத் காவல்துறை பற்றிய அருங்காட்சியகமும் இங்குள்ளது. 60 களில் ஷேக் அப்துல்லா அல்-சலேம் அல்-சபாவின் ஆட்சியின் போது ஙிஸீமீவீபீ கிறீஹீணீக்ஷீ காவல் நிலையம் நிறுவப்பட்டது. இது பினீட் அல்கார், ஷார்க், கிப்லா மற்றும் அந்த பகுதியைச் சுற்றியுள்ள தூதரகங்களுக்கு சேவை செய்தது. அந்த நேரத்தில் நீதிபதியின் தலைவராக மறைந்த ஷேக் அப்துல்லா அல்-ஜாபர் அல்-சபா இருந்தார். இதுவும் அருமையான அருங்காட்சியகமாக போற்றப்படுகிறது.
இந்த தகவலையெல்லாம் குவைத் சுற்றுலா என்ற குறிப்பு விளப்பர நோட்டீஸ் ஒன்றில் இருந்து தெரிந்து கொண்டேன். இதில் குறிப்பிட்ட குவைத் தேசிய அருங்காட்சியகத்தினை எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள் பார்க்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம்.
நமக்கு இருப்பதோ மூன்று நாள்கள்தான் இருக்கிறது. சிறிய நாடு என்றாலும் கூட நாம் இந்த அருங்காட்சியகம் முக்கிய வீதிகளை பார்க்க வேண்டும் என்று திட்டமிட்டு பயணித்தால் கூட 10 நாள்கள் வேண்டும்.
ஆனாலும் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பில் கூடிய மட்டும் நாம் இடங்களை பார்த்து விட வேண்டுடம் என்றுமுடிவு செய்தோம்.
எண்ணெய் கண்காட்சி திறக்கும் நேரம் வந்தது. ஊழியர் எங்களை வந்து அழைத்துச்சென்றார். இந்த கண்காட்சியை பார்க்க கட்டணம் எதுவும் இல்லை என்பது மிகச்சிறப்பானதாகும்.
மொத்தம் கண்காட்சியை காண ஆறு பேர்தான் இருந்தோம். நாங்கள் மூன்றுபேர் இந்தியர்கள். மற்ற இருவர் மேலை நாட்டவர். ஒருவர் குவைத்தை சேர்ந்தவர். எங்களை ஊழியர் அழைத்துச்சென்றார்.
முதலில் ஒரு தானியங்கி படி வழியாக எங்களை முதல் அறைக்கு அழைத்துச்சென்றார்.
அஹ்மதியில் உள்ள காட்சி மையம் குவைத் எண்ணெய் நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. பல சகாப்தங்களாக, உலகெங்கிலும் உள்ள பிரதிநிதிகள் ரிளிசி க்கு வருகையின் ஒரு பகுதியாக காட்சி மையத்திற்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். எண்ணெய் தொழில் தொடர்பான விஷயங்களுக்கு ஒரு சிறந்த தகவல் ஆதாரமாக இவ்விடம் இருக்கிறது.
புதிய ஷேக் அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா எண்ணெய் மற்றும் எரிவாயு கண்காட்சி காட்சி மையம் குவைத் வரலாற்றில் மிக முக்கிய பங்கை நமக்கு பறை சாற்றுகிறது.
உள்ளே நுழைந்தவுடனே முழுவதும் குளிரூட்டப்பட்ட இடம்தான். ஏற்கனவே குவைத் நாடு, வீடுகளிலேயே குளிரூட்டப்பட்டு உள்ள நிலையில் , அருங்காட்சியத்தினை பற்றி கேட்கவே வேண்டாம். அந்த அளவுக்கு குளிராக இருந்தது. இந்த நேரத்தில் விடுபட்ட தகவல் ஒன்றை கூற வேண்டும்.
அசோக் குமார் அய்யா ஒரு சிம்கார்டு ஒன்றை டாக்டர் சுதாகர் அய்யாவிடம் கொடுத்தார். அதனை அவரது அலைபேசியில் போடச் சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார். இதன் மூலம் நாங்கள் இருவரும் இணையதளத்தைத் தங்குதடையின்றி பயன்படுத்தலாம்.? மேலும் குவைத்தில் யாரிடமும் பேசிக் கொள்ளலாம்.? இணையதள வசதியைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் மூலம் தமிழகத்தில் உள்ள குடும்பத்தினருடன் பேசிக் கொள்ளலாம். இதனால் குவைத் எங்களுக்கு அன்னியமாக படவில்லை. தமிழகத்தில் இருந்து எல்லோரும் எங்களிடம் வாட்ச் அப்பில் பேசிக் கொண்டிருந்தனர். எனக்கு வொய் பை மூலம் இணைப்பை டாக்டர் சுதாகர் தந்து விட்டார். ஆகவே நானும் என் வீட்டுக்கும், ஸ்டுடியோவுக்கு பேச வாய்ப்பாக இருந்தது. நண்பர்களிடம் நான் இருக்கும் இடத்தில் இருந்து வீடியோ காலில் பேசினேன். நண்பர்கள் குவைத் பிரமாண்டத்தினை அதில் கண்டு களித்தனர். ஆகவே குவைத் என்பது நமது நாடு போலவே இருந்தது. ஆனால் மொழி மட்டும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டியது இருந்தது.
அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறோம்.
இந்த அருங்காட்சியகத்திற்கு டாக்டர் சுதாகர் வருவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு வரும் போதும் இங்கே வந்தார்.
அவர் என்னிடம் பேசும் போது, இந்த அருங்காட்சியகம் இந்தப் பூமி மற்றும் இங்குப் பல்வேறு உயிரினங்கள் தோன்றிய காலத்தையும் அழகாகக் காட்டும் என்றார். அது உண்மை என்பது போலவே உணர்த்தியது.
முதல் கட்டத்தில் சுவரில் மாட்டப்பட்ட வண்ண விளக்கில் குவைத் பற்றிய வரலாறுகள் மின்னியது.
அங்கே எங்களுக்கு விளக்கம் அளிக்க ஒரு பெண் வந்தார். அவர் குவைத் வரைபடத்தினை காட்டி, எங்கேயெல்லாம் எண்ணெய் எடுக்கிறார்கள் என விளக்கப்படத்தினை காட்டி ஆங்கிலத்தில் விவரித்தார்.
பல நுட்பங்களைப் பயன்படுத்தி கச்சா எண்ணெய்யும், இயற்கை எரிவாயும் பூமிக்கு அடியில் உருவாகிய விதத்தை எளிமையாகப் புரியவைத்தனர். சிக்கலான இந்த அறிவியல் உண்மையை சிறந்த அந்த நுட்பங்களால் விளக்கும் விதங்கள் எங்களை வியக்க வைத்தன.
பூமிக்கடியில் கச்சா எண்ணை இருக்கும் இடத்தைக் கண்டறியும் நுட்பம்; கண்டறிந்த எண்ணெய்யை உறிஞ்சி எடுக்கத் துளையிடும் கருவிகள்; இவ்வாறு கிடைத்த கச்சா எண்ணெய்யைப் பாதுகாப்பாகத் தேக்கி வைக்கும் அமைப்புக்கள்; பின்னர் இந்தக் கச்சா எண்ணெய்யைக் கப்பலில் ஏற்றும் விதங்கள், கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் முறைகள்; அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் என அனைத்தையும் எளிமையாக விளக்கியது இந்த அருங்காட்சியகம்.
கடைசி மாடியில் நிறையத் தொலைநோக்கிகளை நிலை நிறுத்தி இருந்தனர். இவை பார்க்க அழகாக இருந்தது. இந்த தொலை நோக்கி மூலமாக பல்வேறு அற்புதங்களை கட்டறிய முடிந்தது.
இவை மூலம் தூரத்தில் ஆங்காங்கே இருக்கும் கச்சா எண்ணெய் எடுக்கும் இடங்களையும்; அதனைத் தேக்கி வைக்கும் கலன்களையும்; சுத்திகரிக்கும் தொழில் சாலைகளையும்; இவற்றைக் கப்பலில் ஏற்றும் விதத்தையும் பார்க்க முடிந்தது.
அவ்வப்போது அசோக் அலைபேசியில் எங்களை விசாரித்துக் கொண்டே இருந்தார்.?
ஒரிடத்தில் ஒரு வினாடிக்கு எவ்வளவு கச்சா எண்ணெய் குவைத்தில் கிடைக்கிறது என்பதனை ஒரு பெரிய கண்ணாடி கலனில் ஒரு மில்லியன் லிட்டர் எண்ணெய்யை ஊற்றிக் காட்டினார்கள். இந்த இடம் மிகப்பிரமாண்டமாக இருந்தது.
ஒரு வினாடியில் எத்தனை மில்லியன் லிட்டர் கச்சா எண்ணெய் எடுக்கப்படுவதைப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.
அந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களுக்குக் கச்சா எண்ணெய்பற்றிச் சங்கதிகளை முதலில் சொல்லித்தருகிறார்கள். பின்னர் அதனை நாம் உணரும் படி நம்மைச் செய்ய வைக்கின்றனர்.?. என்னை செய்யுங்கள் என டாக்டர் சுதாகர் கூற நானும் செய்து பார்த்தேன்.
டாக்டர் சுதாகர், இந்தத் திட்டப்படிதான் நாங்கள் முதுகலை மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்போம். இந்தத் திட்டத்தால் எளிதில் எந்த ஒரு சங்கதியையும் புரியவைக்க முடியும். என்று எங்களிடம் கூறினார்.
இந்த அருங்காட்சியகத்தை அமைக்க எப்படியும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பார்கள் .
இந்த அருங்காட்சியத்தில் அடுத்தக்கட்டமாக நமக்கு காட்டிய ஒரு திரைப்படம் மனதை உலுக்குவதாக இருந்தது. அந்த திரைப்படம் தான் என்ன?
(குவைத் பயணம் தொடரும்)