பச்சையாற்றங்கரை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தான் நிவேக் ஒரு தகவல் சொன்னார்.
“பச்சையாறு தருவை வழியாக ஓடியிருக்க வாய்ப்பில்லை. நதி வேறு வழியாக ஓடியிருக்க வேண்டும். அந்த இடத்தில் பச்சை மாடன் என்ற தெய்வம் உள்ளது” என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏன் என்றால் நதிகளை பெண் தெய்வமாக வழிபடுவது தான் வழக்கம். குறிப்பாக காவிரியை ,தாமிரபரணியை பெண் தெய்வமாகத் தான் வழிபடுகிறார்கள். அதற்காக உருவ வழிபாடும் உள்ளது. தாமிர பரணி பெண் தெய்வமாக வழிபடும் உற்சவர் நெல்லைப்பர் கோயிலில் வணங்கப்பட்டு வருகிறது.
2018 ஆம் ஆண்டு மகா புஷ்கரம் நடைபெறும் போது வேளாக்குறிச்சி ஆதினதக்கர்த்தா அவர்கள் ஏற்பாடு பெயரில் தாமிரபரணி தாயின் உருவத்தினை நதிக்கரையில் வீதி உலா வரசெய்து, நெல்லை தை பூச மண்டபத்தில் வழி பட வைத்திருந்தார்கள். என்னுடைய நவீன தாமிரபரணி மகாத்மியம் , வேளாக்குறிச்சி ஆதினகர்த்தாவின் பொருட்செலவில் வெளியிடப் பட்டது. அதன் அட்டை படத்தில் அந்த உற்சவர் தாமிரபரணியை காணலாம்.
அதுபோலவே அகில பாரத துறவிகள் சங்கம் சார்பில் அதே புஷ்கரத் திருவிழாவில் ரதயாத்திரை நடந்தது. அப்போதும் தாமிரபரணி உற்சவர் பெண் தெய்வமாக போற்றப்பட்டு வலம் வந்தது.
ஆனால் பச்சையாற்றங்கரையில் பச்சையாற்று மாடன் இருக்கிறா? அதுவும் இங்கே நதி ஆண் தெய்வமாக வணங்கப்படுகிறா? என பல கேள்விகள் எனது மனதில் உருவானது. எனவே உடனே அந்த மாடனை சந்திக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த இடத்தினை பார்க்கலாமா? என நிவேக்கிடம் கேட்டேன்.
“வாருங்கள் பச்சை மாடனை காட்டுகிறேன்” என்றார் நிவேக். உடனே நாங்கள் அங்கே கிளம்பி னோம்.
இந்த இடத்தினை காண நாங்கள் கோபாசமுத்திரம் பேரூராட்சி கொத்தன் குளம் பகுதிக்கு வந்தோம். அங்கே எங்களை நோக்கி நிவேக் காத்துக்கொண்டிருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் கொத்தன் குளத்தினை சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் என்ற கருத்தப் பாண்டி, பகவதி ராஜ், முப்பிடாதி ஆகியோர் உள்பட ஊர் மக்கள் எங்களை வரவேற்றனர்.
இந்த ஊரை பற்றி எங்களிடம் ஆறுமுகப்பெருமாள் என்ற கருத்தபாண்டி தகவல் தெரிவித்தார்.
அவர் கூறுவதை கேட்க நாங்கள் வேலன் குளத்து கரையில் இருந்தோம். இந்த குளத்துக்கு தண்ணீர் கன்னடியன் கால்வாயில் இருந்து தான் வருகிறது. இதற்காக மேலச்செவலில் தனி கால்வாய் அமைத்து அங்கிருந்து தண்ணீரை கொண்டு வந்து, நம்பி நேரி குளத்தில் விழுந்து அதன் பின் வேலன் குளத்தில் விழுகிறது. இவ்வூரில் கொத்தன் குளமும் உள்ளது. இந்த குளத்தின் பெயர் தான் இந்த ஊருக்கு வைத்து இருக்கிறார்கள். இந்த இரு குளத்து பாசனமாக சுமார் 800 ஏக்கர் நிலம் இவ்வூரைசுற்றி இருக்கிறது. இவ்வூரில் வாழும் மக்கள் பெரும் பாலும் தேவேந்திர குல மக்கள்.இவர்களில் 250 வரி இந்த ஊரில் உள்ளது.
இந்த ஊரில் பெரும் பாலும் நெல்பயிர்தான் இரண்டு போகம் விளைய வைக்கிறார்கள். கோடைக் காலத்தில் உளுந்து பயிரிடும் வழக்கம் உள்ளது.
இவ்வூரில் பிரதான கோயில் அம்மன் கோயில். இந்த ஊர் அம்மன் கோயிலில் முப்பிடாதி, சந்தன மாரி, காளியம்மன் ஆகியோர் உள்ளனர். ஊருக்குள் நாரயண சுவாமி கோயிலும் உண்டு. இந்த கோயிலில் ஞாயிற்று கிழமை சிறப்பு பூஜை நடந்து வருகிறது. ஒரு காலத்தில் இங்கே குறிசொல்லி வந்தார்கள். தற்போது குறிசொல்லும் வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது.
வருடந்தோறும் சித்திரைமாதம் இவ்வூரில் கோயில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். செவ்வாய் கிழமை இரவு நிறைகொடையாக அம்மன் கோயில் கொடை விழா கொண்டாடுவார்கள்.
புதன் கிழமை மதியம் கொடை விழா கரையடி மாடனுக்கு நடை பெறும். இங்கு கிடாய் வெட்டு உள்பட சடங்குகள் சிறப்பாக நடைபெறும். என்றார்அவர்.
அதன் பின் அங்கிருந்த நண்பர்களோடு நாங்கள் குழுப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டு பச்சை யாற்று மாடனை காண கிளம்பி னோம்.
எங்கள் காரை குளத்துக்கரையில் விட்டு விட்டு நடக்க துவங்கினோம். அருகில்உள்ள கொத்தன் குளத்து கரையில் இருந்து வயல்வெளிக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கே நடவு பணி நடந்து கொண்டிருந்தது.
ஓரிடத்தில் டிராக்டர் மூலம் வயல்வெளிகளை பண்படுத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. அந்த டிராக்டரை சுற்றி 100க்கணக்கான கொக்குகள் நின்றுகொண்டிருந்தது. டிராக்டர் பின்னாலே பறந்து சென்று அங்குள்ள புழு பூச்சிகளை பொறுக்கி தின்ன காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. சகதி வண்ணத்தில் டிராக்டர் முன்னால் செல்ல பின்னால் பறந்துசெல்லும் வெள்ளை நிறக்கொக்குகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதைத்தாண்டி வரப்பு வழியாக நடந்து சென்றோம். சகதி அதிகமாக இருந்த காரணத்தினால் வழுக்கிக் கொண்டே சென்றது. ஆனாலும் எங்களது பெரும் விரலை ஊனிக்கொண்டு நடந்தால் வழுக்கல் இருக்காது என்று திருப்பதி அண்ணன் சொன்னார். அதன் படி எல்லோரும் பெருவிரலை ஊனிக்கொண்டு நடந்தோம்.
சில இடங்களில் வாய்க்காலுக்குள் இறங்க வேண்டிய இருந்தது. சில இடங்களில் நடவு பணிக்காக பண் படுத்தப்பட்ட வயல்வெளிக்குள் இருந்து சகதிக்குள் இறங்கினோம். அந்த சமயத்தில் எங்களது முட்டு வரை சகதி வந்தது. இதனால் எங்களுடைய பேண்ட எல்லாம் சகதியானது. சில இடங்களில் காய்ந்து போன பகுதியில் செருப்பு இல்லாமல் நடக்கும்போது, சூடு அதிகமாக இருந்தகாரணத்தினால் மிகவும் கஷ்டப்பட்டோம்.
அதோடு மட்டுமல்லாமல் செல்லும் வழியில் புல மாடன் கோயிலை பார்த்தோம். அந்த கோயிலை பொறுத்தவரை 21 பூடங்கள் நிறைந்த கோயில் தான். இதை வெள்ளாட்சி சுடலை என்றும் அழைக்கிறார்கள். இந்த கோயிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபம் போடுவார்கள். நாலு வருடத்துக்கு ஒருமுறை இங்கு கோயில் கொடை விழா நடைபெறும்.
அந்த சுவாமியை வணங்கி விட்டு மீண்டும் வரப்பு வழியாக நடந்தோம். எங்களது காலில் வரப்பில் இருந்த காய்ந்த களி மண் குத்தியது. இதனால் நடக்க தடையாக இருந்தது.
ஒரு காலத்தில் விவசாயம் பார்த்த எனது கால், கொஞ்ச நாளாக சொகுசாக செருப்பு காலோடு நடந்த காரணத்தினால் இப்போது செருப்பு இல்லாமல் நடக்க மிகவும் கஷ்டப்பட்டது. ஆனால் எங்களுக்கு வழிகாட்ட வந்த முப்பிடாதி அய்யா மிக வேகமாக நடந்துசென்றார்.
அடுத்த இடத்துக்கு செல்லும் போது பெரிய வாய்க்கால் ஒன்றை கடந்து , மீண்டும் சகதி வழியாக பச்சையாற்று மாடன் கோயிலுக்கு வந்து சேர்த்தோம். அங்கிருந்த அத்திமரத்து அடியில் பச்சையாற்று மாடன் இருந்தார். இந்த கோயில் சம்பந்தப்பட்ட முருகன் என்பவர் எங்களோடு வந்திருந்தார். அவர் கூறும் போது 2 வருடத்துக்கு ஒரு முறை சித்திரை மாதம் இந்தகோயிலுக்கு கொடைவிழா கொடுப்போம். கிடாவெட்டி பொங்கலிடுவோம் என்றார். இந்த கோயிலை 10 குடும்பத்தினை சேர்ந்தவர்கள் வணங்கி வருகிறோம் என்றும் தகவல் கூறினார்.
இந்த தெய்வம் காக்கும் தெய்வம். இந்த தெய்வத்தின் அருகில் உள்ள மரத்தில் கூட ஒரு இலையை வெட்டி விட முடியாது. வெட்டினால் வெட்டியவருக்கு நோய் வந்து விடும் . எனவே பயத்தில் யாரும் அருகிலேயே வரமாட்டார்கள். இயற்கையை பாதுகாக்க இப்படியொரு நம்பிக்கையை நமது முன்னோர்கள் வளர்த்து விட்டு சென்றுள்ளனர். இப்போது மரங்களை வெட்டி விற்று வரும் மக்கள் மத்தியில் சுடலை மாட சுவாமி கோயில் அருகே உள்ள மரங்களை வெட்ட தைரியம் வராது. எனவே தான் சுடலை மற்றும் பேய்க்கோயில் என்று அழைக்கப்படும் 21 பூடம் அருகில் மரங்கள் சோலையாக வளர்ந்து அனைவருக்கும் நிழல் தரும் வண்ணமாக உள்ளது.
பயபக்தியாக வணங்கும் பச்சைமாடன் வரலாறு மிகவும் விசேஷமானது. அதைப்பற்றி நிறைய பேச வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இதன் அருகில்தான் ரிங் ரோடு வருகிறது. அது என்ன ரிங் ரோடு.
இந்த ரிங் ரோடு தான் நாகர்கோயில், மதுரை, தென்காசி, சங்கரன்கோயில், அம்பாசமுத்திரம் சாலையில் வரும் வாகனங்கள், நெல்லை சிட்டிக்குள் செல்லாமல் நேரிடையாக மேற்கண்ட பெருநகரங்களுக்கு செல்ல வழி வகுக்கிறது. அது பற்றிய தகவல்களை தொடர்ந்து அறிவோம்.
( நதி வற்றாமல் ஓடும்)