மாஞ்சோலை செல்வக்குமார்.
சிறந்த புகைப்பட கலைஞர்.
தென்காசி லைப் என்னும் குழுவில் இவரும் ஒருவர். மாஞ்சோலையை நன்கு நேசிப்பவர். அங்கு வரும் அரசு பேருந்தை தனது காதலியாகவே நினைப்பவர். இவர் மாஞ்சோலையை பற்றி எடுத்த புகைப்படங்கள் அனைத்துமே நம்மிடம் ஏதோ ஒரு கதையை சொல்லும். மாஞ்சோலை தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வரப்போகிறது. அதன் பிறகு இந்த எஸ்டேட் அரசே எடுத்து நடத்துமா?. அல்லது அப்படியே விட்டு விடுவார்களா?. பல கேள்விகளுக்கிடையே மாஞ்சோலை எஸ்டேட் பயணித்துக்கொண்டிருக்கிறது.
மாஞ்சோலை வளர்ந்த, பிறந்த, வாழ்ந்துக்கொண்டிருக்கும் இன்றைய மனிதர்கள் மாஞ்சோலையை விட்டு விட்டு பூமிக்கு வர யோசிக்கும் காலமாக மாஞ்சோலை சொர்க்கப்பூமியாகவே இருக்கிறது.
மாஞ்சோலை வாசிகள் பேசும் பேச்சாக கீழ்கண்ட வாசகங்கள் பேசப்படுகிறது.
இப்பூமியில் மானிடராய் நாம் பயணிக்கும் இந்த நீண்ட நெடுந்தொடரில் சற்று இளைப்பாற இயற்கை தாயவள் மடியினில் தவழ்துறங்க கொஞ்சம் குருவிகளின் கீச்சுக்குரல்கள் செவிதனில் தேனிசை நிகழ்த்த. தோலினை கிழித்து குருதினில் கலந்துரையாடும் பனிதுகள்களுக்கும். அக்குளிரினை விரட்ட வெந்நீரில் வெந்து குருதியினில் கலந்துவிட்ட தேயிலை வாசமும் , மதிய வெயிலும் கூட புத்துணர்ச்சி அளித்திட, கால்களுக்கு விலங்கிடப்படாமல் கானக வழியெங்கும் தன் பாதசுவட்டினை பதித்துவிட, யானையின் லத்தி கானகம் முழுவதும் லயித்திருக்க. நெடுந்தொடர் மரத்தில் முடிவில் பாதையில் மலைஇருவாச்சிகள் தன் குடும்பத்தினருடன் வசிக்க, ராஜநாகமும் நல்லபாம்பும் நம் நட்பில் தொடர, புலிகளும் கருஞ்சிறுத்தைகளும் மரத்தில் மேலிருந்து காடுகளை வேவுபார்க்க, கருமந்தியும் / சிங்கவால் குரங்குகளும் எதிரெதிர் மரங்களில் ஒன்றையன்றை முறைத்துப்பார்க்க, கதிரவனை கூடதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொன்டு உதிக்க விடாமல் தடுக்கும் பனிப்போர்கள் அடிக்கடி நடைபெற, சீகார பூங்குருவியும் – மலை மைனாவும் காட்டிற்குள் இசை கச்சேரி நடத்திட, சில்வண்டுகள் பாடலுக்கு ரீங்காரம் இட, வால்காக்கையும் – செம்மீசை சின்னாளமும் மெட்டிசைக்க, கையளவு சிலந்திகள் தனது மாளிகையினை நேர்தியாக்க , இவைகளை எல்லாம் முன்றாம் கண் வழியாக பதிவு செய்தாலும், கோடி கண்களுக்கு முன்னால் எனக்கு இயற்கை தாயவள் எனக்களித்த அருட்கொடையே.
பாட்டனும் பூட்டனும் செப்பனிட்ட இப்பூமியை, தாத்தனும் தந்தையும் பழுதிட்ட இத்திண்ணையில்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இச்சொர்க்கத்தில் நான் ஒன்றை மட்டும் கற்றரிந்தேன். ஆம் எத்தனை தலைமுறைகள் மாறி மாறி இயற்கை அன்னையுடன் பயணித்தாலும், இக்கானகத்தில் நினைவுகளாக வலம் வந்துகொண்டு தான் உள்ளார்கள்.
இயற்கை கூறியது,” மானிடனே உன் முன்னோர்கள் என்னை பாதுகாத்ததால் நான் இன்று உன்னை பாதுகாக்கிறேன். இந்த காலசூழ்நிலை உன் எதிர்காலத்திற்கும் உந்தன் தலைமுறையிற்கும் இந்த சொர்க்கம் கிடைக்க வேண்டுமென்றால். இயற்கையை மாற்றநினைக்காதே. பிளாஸ்டிக்கை என்னுள் கொண்டு வராதே. என் குழந்தைகளுக்கு ( வன விலங்குகள், பறவைகள் ) நான் பசிஅமர்த்துவேன். நீ அவர்களுக்கு உணவளிக்காதே. அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும் நான் வளர்த்துக்கொள்வேன் . ( காடுகள் ) தினமும் என்னை வளப்படுத்தும் என் குழந்தைகளை நானே கவனித்துக் கொள்கிறேன்.
அவர்களை கவனித்துக்கொள்கிறேன் என்று. மனிதர்களிடம் பிச்சை எடுக்க வைத்து விடாதே. இந்தநிலை நீடித்தால் நம் எதிர்காலமும் இயற்கையிடம் பிச்சை எடுக்கத்தான் செய்ய வேண்டும் . நீருக்கும் காற்றிற்கும் காடும் காட்டுயிர்களும் அதன் வாழ்விடத்தில் சுதந்திரமாக வாழ்கிறது. நாம் தொந்தரவு செய்யாதவரை.
மானிடரே விழித்துக்கொள்வோம். ஆம் இயற்கையை நேசிப்போம் வனங்களை பாதுகாப்போம். தொலைவினில் நின்று பார்த்து ரசிப்போம்.
இந்த வாசகங்களை படிக்கும் போதே நம்மை அறியாமல் ஒரு உற்சாகமும் ஏக்கமும் பிறக்கிறது அல்லவா?. இதை படித்து பார்த்து போது உங்களுககும் புரிகிறது அல்லவா?
இது மாஞ்சோலை வாசியின் அனுபவம். அவருடைய வாசகங்கள்.
இந்த அருமையான முகநூல் பதிவைப் பார்த்தேன். மாஞ்சோலை என்ற தலைப்பிட்ட முகநூல் குழுவில் தான் அந்த பதிவு வந்திருந்தது. எத்தனை எத்தனை உண்மை.
இந்த பதிவை பார்த்த பின் மாஞ்சோலையை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என எண்ணம் « தான்றியது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். இதற்காக எனக்கு வழிகாட்டியவர் சிங்கம்பட்டி ஊடக நண்பர் முத்து பாண்டியன். இவர் எங்களுக்காக அம்பாசமுத்திரம் வன அலுவலகம் சென்று எங்களுக்காக முன்பதிவு செய்து வைத்திருந்தார். அதிகாலை 8 மணிக்கெல்லாம் நாங்கள் சிங்கம்பட்டி சென்று விட்டோம். காரை அன்பு நண்பர் சங்கர பாண்டியன் ஓட்டினார். நண்பர் முத்து , சிஷ்யன் சுடலை மணிச்செல்வன் ஆகியோருக்கு எங்களோடு இணைந்து கொள்ள எங்கள் கார் சிங்கம் பட்டியை விட்டு கிளம்பி மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்தினை தாண்டி, மணிமுத்தாறு 80 அடி கால்வாயை தாண்டினோம் அங்கு ஒரு செக்போஸ்ட் இருந்தது. அந்த செக்போஸ்டில் நாங்கள் முன்பதிவு பெற்ற ஆவணங்களை காண்பித்தோம்.
அங்குதான் அனுமதிக்கான கட்டணத்தினை கட்ட வேண்டும். அதன் பின் புகைப்பட கருவிக்கும் பணத்தினை கட்டி விட்டு அதன் பின் எங்கள் வாகனம் கிளம்பியது.
“மணிமுத்தாற்றங்கரையினிலே” என்ற தலைப்பில் நீண்ட நாள் நூல் எழுத வேண்டும் என ஆசை. சுமார் 10 வருடங்களாக அதற்காக ஆயத்தமாகி வந்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது.
மணிமுத்தாறு நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆறு ஆகும். இயற்கையாகவே மணிமுத்தாறு தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக இருப்பதாலும் அணைக்கட்டு அதன் குறுக்கே கட்டப்பட்டிருப்பதாலும் மணிமுத்தாறு அணைக்கட்டு என வழங்கப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் இன்னொரு கிளை ஆறு கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கிறது. இந்த நதியை தேங்காய் பட்டணம் அருகே வரும் போது தாமிரபரணி என்றே அழைககிறார்கள்.
நெல்லை மாவட்டம் களக்காடு மலைப் பகுதியில் செங்கந்தேரி அருகே பச்சையாறின் பிறப்பிடத்திலிருந்து தனியாக பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. மற்றொரு பிரிவு சாதாரண காலங்களில் இந்த நீரின் அளவை தாமிரபரணியுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவு என்பதால் இது வெறும் மழைக்கால வெள்ளநீர் வெளியேற்று ஆறாகவே இருந்து வந்தது. எனவே மழைக்காலங்களில் இந்த வெள்ளநீர் தாமிரபரணியில் கலந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க காமராசரால் கொண்டு வரப்பட்ட திட்டமே மணிமுத்தாறு அணைக்கட்டுத் திட்டம். இதன் மூலம் சேமிக்கப்படும் நீர் நெல்லை மாவட்டத்தின் வறட்சிப் பகுதிகளான தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள் வழியாக மிகவும் வறட்சிப் பகுதிகளான திசையன்விளை, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு குடிநீராகவும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது.
அணைக்கட்டு மற்றும் அருவி நல்ல சுற்றுலாத் தலங்களாக அமைகிறது. மேலும் தமிழ்நாடு காவல்துறையின் இரண்டு காவலர் பயிற்சி பள்ளிகள் இங்கு செயல்படுகின்றன. பொதுமக்கள் இங்கு சிறிதளவே வாழ்கின்றனர். மலைப் பகுதியான மாஞ்சோலை மற்றும் கோதையாறுக்கு மணிமுத்தாறே நுழைவு வாயில் என்பதால் மணிமுத்தாறு, மாஞ்சோலை, கோதையாறு பகுதிகளை இணைத்து மணிமுத்தாறு சிறப்புநிலை பேரூராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அருவிக்கு பச்சையாற்றில் இருந்து தண்ணீர் வந்தாலும் மாஞ்சோலை வழியாக வரும் அருவிக
ளும் உண்டு. 18 ஆம் காடு அருவி என்றழைக்கப்படும் அருவி தண்ணீர் மணிமுத்தாறு அருவிக்கே வந்து சேருகிறது.
6 ஆம் காடு அருவி மணிமுத்தாறு தலையணை வழியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து சேருகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் விழும் அருவிகளை ஒன்றுசேர்த்துக்கொண்டு மணிமுத்தாறு அணைக்கு இரண்டு பிரிவாக மணிமுத்தாறு வந்து சேருகிறது.
மணிமுத்தாறு அருவியை சிறிது நேரத்தில் தாண்டுகிறோம். இந்த இடத்தில் 1992 ல் புயல் வெள்ளத்தில் பாலம் உடைந்து விட்டது. அந்த உடைந்த பாலத்தினை இந்த பக்கத்தில் பதிவிட்டுள்ளேன்.
தற்போது புதிய பாலம் கட்டியிருந்தார்கள். அதன் பின் நல்ல முட்டு ஏத்தம் வாகனம் மேலே ஏறியது. சிறிது தூரத்தில் தலையணை செல்லும் பாதை வந்தது.
இந்த பாதை வழியாகத்தான் மணிமுத்தாறு தலையருவி சென்றோம். அந்தபயணத்தினை பற்றி நாம் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியிருக்கிறோம். தொடர்ந்து வானம் மேலே நோக்கி ஏறியது. மாஞ்சோலை எல்லை உங்களை அன்போடு வரவேற்கிறது என்று விளம் பர பலகை வைத்திருந்தார்கள். எனவே மாஞ்சோலை அருகில் இருககிறது என்று நினைத்தோம். ஆனால் ஊசி வளைவாக வாகனம் ஏறிககொண்டேஇருந்தது.
ஓருபுறம் பள்ளத்தாக்கு, மறுபுறம் சுவர் என வாகனம் வேகமான முன்னேறிக்கொண்டிருந்தது. “எதிரே பேருந்து வரும். எனவே பார்த்து கவனமாக செல்லுங்கள்” என முத்து பாண்டி அறிவுருத்தல் இருந்தது. எனவே கவனமாக சங்கரபாண்டியன் வாகனத்தினை ஓட்டினார்.
மேலே என்னவெல்லாம் பார்க்க போகிறோம் என மேலோட்டமாக முத்துபாண்டியன் எங்களிடம் பேசினார். “மாஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்ட்டேட், காக்காச்சி மலை, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட், குதிரைவெட்டி ஆகிய இடங்களுக்குச் சென்று வரவேண்டும். அருகில் கோதையாறு டேம் உள்ளது. அங்கும் சென்று வரலாம். மதியச்சாப்பாடு ஊத்து என்ற இடத்தில் சொல்லியிருக்கிறேன். அங்கே சாப்பிட்டு விடலாம் என்று கூறினார்.
எங்கும் மேடும் பள்ளமுமாகச் சாலையில் பயணித்து தேயிலைத் தோட்டங்களை ரசிக்கவேண்டும். மாஞ்சோலையில் காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன். அங்கு கட்டசாயா , முட்டை ரஸ்க் மிக அருமையான இருக்கும். அதை சுவைத்துக்கொண்டே மேலே ஏற வேண்டும். என்றார்.
வித்தியாசமாக இருந்தது.
நாம் ஏற்கனவே பாபநாசம் மேலே சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பலமுறை காரில் சென்று இருக்கிறோம். அதுபோலவே இருந்தது. ஆனால் சாலை மிக மோசமாக இருந்தது. அதற்கு காரணம் கேட்டோம். அதற்கும் முத்து பாண்டி பதிலளித்தார். “இந்த தோட்டங்கள் எல்லாமே தனியாருக்கு சொந்தமானது எனவே சாலைகளை பாரமரிப்பது அவர்கள் பொறுப்புத்தான். ஆனால் அவர்கள் வாகனங்கள் அவசரத்துக்கு கீழே வராது . எனவே அவர்கள் இதை பராமரிக்க முயற்சிக்கவில்லை போலும்” என்றார்.
இதற்கிடையில் எங்களது கார் தீடீரென்று பழுதாகி விட்டது.
எஞ்சினில் இருந்து புகை கிளம்பியது. ரேடியட்டரில் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்.
சங்கரபாண்டியன் வண்டியை நல்லவேளை ஓரமாக நிறுத்தி இருந்தார் . ஆனாலும் பேருந்து வந்தால் விலக வழியில்லை. கார் மட்டுமே விலகி செல்ல முடியும்.
பெரிய கனவுகளோடு மாஞ்சோலையை பார்க்கவேண்டும் என்று வந்த எங்களுக்கு எல்லாமே காணல் நீரானது.
ஊத்து பகுதியில் அருமையான சிக்கன் சாப்பாடு. கண்ணுக்கு குளுமை. வயிற்றுக்கு நல்ல உணவு. உடலை வருடும் காற்று. உள்ளத்தினை வருடும் குளிர். குடிக்கக் குளிர்ச்சியான சுவையான தண்ணீர். என அத்தனையும் சிறப்பு என்று மாஞ்சோலை சென்று வந்தவர்கள் கூறிய வார்த்தையெல்லாம் எங்கள் காதில் வந்து சென்றது. ஆனால் இப்போது அரைகுறையாக நிற்கிறோம். சுற்றுப்பயணத்தினை முடித்துக்கொண்டு கீழே வந்து மணிமுத்தாறு அருவியில் அருமையான குளியல் போடலாம் என்று நினைத்து இருந்தோம். அந்த கனவும் கலைந்து விடும்போல இருந்தது.
மாஞ்சோலை டீ கடையில் எங்களுக்காக சீலன் என்ற நண்பர் காத்துக்கொண்டிருககிறார். ஆனால் இடையில் பயணம் தடைப்பட்டு விட்டது.
மெக்கானிக் வரவேண்டும் என்றால் கல்லிடைக்குறிச்சி. அல்லது அம்பாசமுத்திரத்தில் இருந்து வரவேண்டும். அவர்கள் வந்தாலும் மதியம் ஆகி விடுகிறோம்.
அடுத்த கட்டம் என்ன செய்யப்போகிறோம் என அறியாமல் தவித்து நின்றோம்.
(பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்)


