தூத்துக்குடியில் மரங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி, ரோட்டரி ட்ரையல் பிளேஸர்ஸ் சார்பில் ‘பசுமைப் பயணம்’ விழிப்புணர்வு கார் பேரணியை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் ரோட்டரி ட்ரையல் பிளேஸர்ஸ் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு இயற்கைப் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தாமிரபரணி ஆற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தி ‘பசுமை கார் பயணம்’ மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி பெண்கள் பூங்கா முன்பிருந்து புறப்பட்ட இந்தப் பேரணியை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட இக் கார் பேரணி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, குற்றாலம் மற்றும் நெல்லை பொருநை அருங்காட்சியகம் வழியாகச் சென்று மீண்டும் தூத்துக்குடியை வந்தடைகிறது.
முன்னதாக, தொடக்க நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்குப் பல்வேறு வகை தாவரங்களின் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இக்கார் பயணம் பெரிதும் பயன்படும் என இதில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.


