இராமனுஜம்புதூரில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமனுஜபுதூர் சந்திப்பில் 6 சி.சி.டி.வி கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. இந்த சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இராமனுஜம்புதூர் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ரெங்கன் தலைமை வகித்தார். சேரகுளம் பஞ்சாயத்து தலைவர் செந்தில் நாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், 24 மணிநேரமும் கண்களை திறந்து வைத்திருக்கும் மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமிரா நடக்கக்கூடிய நிகழ்வுகளை பதிவு செய்யக்கூடிய ஒரு கருவியாகும். இந்த கேமிரா மூலம் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது, காவல்துறையில் இந்த சி.சி.டி.வி கேமிரா மூலம் 90 சதவீதம் குற்றங்கள் உண்மையானதாகவும் அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்க ஏதுவாக உள்ளது இது போன்ற பல இடங்களில் சி.சி.டி.வி கேமிராவை நிறுவி குற்றங்கள் நடக்காமல் தடுக்க முன்வர வேண்டும் என்று பேசினார்.
ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, செய்துங்க நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ சுந்தரம், சேரகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லி அரசன் இராமனுஜபுதூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் சுடலைமுத்து, கருங்குளம் திமுக தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நல்லமுத்து, தெற்கு காரசேரி பஞ்சாயத்து தலைவர் பேபி, ஒன்றிய கவுன்சிலர் எண்ணாயிரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.