தமிழகத்தில் புதிய அரசுப் பேருந்துகளில் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தூத்துக்குடி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அரசுப் பேருந்துகளில் இருந்த “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்ற பெயரிலிருந்து ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு, “அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்று பெயர் மாற்றப்பட்டது. இம்மாற்றத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன், பேருந்துகளில் மீண்டும் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கொள்கை முடிவு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முதற்கட்டமாகச் சென்னையில் உள்ள பேருந்துகளில் பெயர் மாற்றும் பணிகள் தொடங்கின.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவையைத் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த புதிய பேருந்துகள் அனைத்திலும் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்” என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இதில் திருநெல்வேலி மண்டலப் பயன்பாட்டிற்காக 50-க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்துள்ளன. இந்த ஒதுக்கீட்டின் கீழ், தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துப் பணிமனைக்கு புதிய நகரப் பேருந்துகள் (டவுன் பஸ்கள்) வந்து சேர்ந்துள்ளன. இப்பேருந்துகளில் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் – திருநெல்வேலி” என்று தமிழ்நாடு பெயர் தெளிவாக இடம் பெற்றுள்ளது.
புதிய பேருந்துகளில் தமிழ்நாடு என்ற மாநிலப் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், தற்போது இயக்கப்பட்டு வரும் பழைய அரசுப் பேருந்துகள் அனைத்திலும் விடுபட்டுள்ள “தமிழ்நாடு” என்ற வாசகத்தை உடனடியாக இணைக்கத் தேவையான நடவடிக்கைகளைப் போக்குவரத்துத் துறை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


