கோவில்பட்டியில் 2பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவிததுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையங்களில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டு வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்கின்றனர்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை பெரும்பாலும் மதுரை, தூத்துக்குடி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் மூலமாகவே நெல்லை, தென்காசி, குமரிக்கு வெளிநாட்டவர்கள் வருவார்கள் என்பதால் அங்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்பின்னர் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் விபரங்கள் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து கணவன்-மனைவி, 7 வயது மகள் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்தனர். பசுவந்தனை சாலையில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்த அவர்கள் ஏற்கனவே மலேசியாவில் கொரோனா பரிசோதனை செய்திருந்தனர். அப்போது அவர்களுக்கு நெகட்டிவ் வந்திருந்தது. இந்நிலையில் அவர்கள் 3 பேருக்கும் கடந்த 21-ம் தேதி தலைவலி, தொண்டைவலி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வீட்டில் உள்ள பெற்றோர் உள்பட 9 பேர் கோவில்பட்டியில் கரோனா பரிசோதனை செய்தனர். மருத்துவ பரிசோதனையில் 7 வயது சிறுமியை தவிர மற்ற 8 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து 8 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் என சுமார் 33 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதி என நகராட்சி அதிகாரிகள் அறிவித்து பேனர் வைத்தனர்.
மேலும் அங்கு கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடரும் போடப்பட்டது. இதற்கிடையே கொரோனா உறுதி செய்யப்பட்ட 8 பேரில் கணவன்-மனைவி 2 பேருக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.


