ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி தரிசனம் அளித்தார். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் ஆனந்த காட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமிக்கு பால், மஞ்சள், தயிர், தேன், சீவக்காய், இளநீர் போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது.
இத்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேன், பஸ், கார் போன்ற வாகனங்களில் வந்து கோவில் வளாகத்தில் குவிந்தனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்செந்தூர், சாத்தான்குளம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில், ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் ஏராளமான போலீசார் செய்திருந்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அத்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்துள்ளார்.


