செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயிலை நிறுத்தி செல்ல இரயில்வே வாரியத்தின் பயணிகள் நலக்குழு உறுப்பினரிடம் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் கச்சனாவிளை ரயில் நிலையத்தில் வைத்து நேரில் கோரிக்கை மனு கொடுத்தார்.
செய்துங்கநல்லூர் வழியாக இயங்கும் திருச்செந்தூர் பாலக்காடு ரயில் தற்போது விரைவு ரயிலாக மாற்றப்பட்ட பிறகு நின்று செல்லவில்லை. இதனால் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் பேராட்டம் நடந்தது . முதல் கட்டமாக செய்துங்கநல்லூர் தபால் நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்ராஜ், கருங்குளம் சேர்மன் கோமதி ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து போராட்ட குழுவினர் முற்றுகை போராட்டம் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில் ராஜ் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையிலான குழுவினரை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் முன்னிலையில் சந்தித்து பேசினார். உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் பாலக்காடு ரயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.இதற்கிடையில் பாலக்காடு & திருச்செந்தூர் ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டும் என தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுபோன்று பல்வேறு தரப்பினரும் செய்துங்கநல்லூரில் பாலக்காடு ரயில் நின்று செல்லவேண்டும் என போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதற்கிடையில் மதுரை கோட்டத்திற்கு இரயில்வே நிலையங்களை ஆய்வு மேற்கொள்ள இரயில்வே வாரியத்தின் பயணிகள் நலக்குழு உறுப்பினர் இரவிச்சந்திரன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் திருச்செந்தூர் வந்தனர். இவர்கள் கச்சனா விளையில் ஆய்வு செய்தபோது செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமையில் சமூக சேவகர் சுடலை முத்து, பம்பு ஆப்ரேட்டர் சங்க தலைவர் இசக்கி உள்பட பலர் கலந்துகொண்டு செய்துங்கநல்லூரில் பாலக்காடு எகஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும் என்று மனு கொடுத்தனர்.மனுவை வாங்கி கொண்ட இரவிச்சந்திரன் இதற்கு முன்பு ரயில் நின்று சென்ற விவரங்களை பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டுக்கொண்டார். மேலும் தொடர்ந்து பாலக்காடு ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.