செய்துங்கநல்லூரில் கேரளாவிற்கு கடத்துவதற்காக வீடு வீடாக சென்று பைக்கில் ரேசன் வாங்க சென்றவர்கள் அதிகாரிகளை கண்டதும் ஓட்டம்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சந்தையடியூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வந்து சோதனை மேற்கொண்ட பொழுது அதிகாரிகளை கண்டவுடன் இருசக்கர வாகனத்தில் அரிசியுடன் வந்தவர்கள் வாகனத்தை அரிசியையும் போட்டு விட்டு தப்பி ஓடினார்.
வல்லநாடு மற்றும் செய்துங்கநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று காலை செய்துங்கநல்லூர் அருகே சந்தையடியூரில் வீடுகளில் கிலோ 5 ரூபாய்க்கு ரேஷன் அரிசிகளை பெற்றுக்கொண்டு ரேசன் அரிசி கடத்தி வருவதாக வருவாய் ஆய்வாளர் இருதயமேரிக்கு தகவல் கிடைத்தது.
இதற்காக அவர் சோதனை மேற்கொள்வதற்காக அங்கு சென்றுளார். அங்கே இரு சக்கர வாகனத்தில் மூன்று மூட்டை ரேஷன் அரிசியுடன் வந்தவர் அதிகாரியை கண்டவுடன் அரிசியையும் இருசக்கர வாகனத்தையும் போட்டு விட்டு தப்பி ஓடினார். உடனடியாக வருவாய் ஆய்வாளர் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரிக்கு தகவல் தெரிவித்ததோடு செய்துங்கநல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி அரிசியை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். செய்துங்கநல்லூர் போலீசார் இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர் தலைமையில் போலீசார் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு இலவசமாக வழங்கும் அரிசியை பணத்திற்காக விற்பது தெரியவந்தால் அவர்களிடமிருந்து ரேஷன் கார்டை பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.


