ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலிசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மேற்பார்வையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் புதுப்பாலம் பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீவைகுண்டம் கீழக்கோட்டை வாசல் தெருவைச் சேர்ந்த அம்மாமுத்து என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி ஆற்றுமணல் திருட முயற்சி செய்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அம்மாமுத்து மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும், குரும்பூர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு கொள்ளை வழக்கு என மொத்தம் 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.