சேரகுளம் அருகே அரசர் குளம் குளத்தில் மடை உடைந்து போன காரணத்தினால் 500 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
சேரகுளம் அருகே மணிமுத்தாறு பாசன கால்வாய் 3வது ரீச்க்கு பாத்தியப்பட்ட அரசர் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஒரே ஒரு மடை மட்டுமே உள்ளது. இந்த மடை மூலமாக 500 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த குளத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்தால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் சேகரிப்பதுடன் சுமார் 20க்கு மேற்பட்ட மோட்டார் பம்பு செட் இயங்கும். எனவே அரசர் குளம் இந்த பகுதியில் மிக முக்கிய குளமாகக் கருதப்படுகிறது. இந்த குளத்தில் ஒரே ஒரு மடை உள்ளது. இந்த மடை கடந்த 2 வருடத்துக்கு முன்பு உடைந்து விட்டது. இதுகுறித்து இந்த பகுதி விவசாயிகள் மணிமுத்தாறு பாசனம் மூன்றடைப்பு பொறியாளரிடம் மனு கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த வருடம் மடை முழுவதுமாக உடைந்து விட்டது. எனவே தண்ணீர் வீணாகச் சென்று விடக்கூடாது என்று இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும், 100 நாள் வேலை வாய்ப்பு ஊழியர்களும் மடைக்கு முன்பே மணல் மேடு வைத்து அடைத்து வைத்து விட்டனர். இதனால் தண்ணீர் விவசாயத்துக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி துரை ராஜ் கூறும் போது, எங்கள் பகுதி விவசாயிகளுக்கு ஒரே ஒரு நீர் ஆதாரம் அரசர் குளம் குளம் தான் . மணிமுத்தாறு பாசனத்தில் 3வது ரீச் பகுதியில் எங்கள் குளம் உள்ள காரணத்தினால் இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. இதில் மழை பொய்த்து விட்டால் கூடுதல் வருடம் தண்ணீர் வரக் கால தாமதமாகும். இந்த நிலையில் எங்கள் குளத்தில் பாசனமாக 500 ஏக்கர் பாசனம் உள்ளது. இந்த பாசனத்துக்கு ஒரே ஒரு மடை இந்த குளத்தில் தான் உள்ளது. இந்த குளத்து மடையும் தற்போது உடைந்து விட்டது. இந்த மடையைச் செப்பனிடப் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது விவசாயிகளும், 100 நாள் திட்ட வேலை பணியாளர்களும் இணைந்து மடையை அடைத்துக் கரை கட்டி வைத்திருக்கிறோம். இவ்விடத்தில் உடனே மடையைச் சீரமைத்துத் தரவேண்டும். என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அரசர்குளத்துககு ஒரே ஒரு மடையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. உடனே இந்த மடையைக் கட்டி தர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்ராஜ் அவர்களிடமும் மனு செய்துள்ளனர். எனவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.


