தூத்துத்குடி மாவட்டத்தில் 1,222 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரே தவணையாக வருகிற 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதற்காக 1,222 போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப் படுகிறது. இந்த முகாம்களில் 5,379 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.
அதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 34 ஆயிரத்து 199 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனை, வட்டார சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெற உள்ளது.
மேலும் 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்ளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முகாம்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.