அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை வருகிற 28-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.கோவில்பட்டி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திர விற்பனை அஞ்சலகங்கள் மூலமாக வரும் 28-ந் தேதி முதல் மார்ச் 4-ந் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109.கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை தபால் நிலையங்களிலும், அனைத்து துணை அஞ்சலகங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். தனிநபர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில், அன்று தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு பான் கார்டு கட்டாயம் தேவை. அத்துடன் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கொடுத்து, தங்க பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அஞ்சல் விற்பனை பிரதிநிதிகளை 89400 19911, 79044 20532, 96770 67116 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.