திருநெல்வேலி தெட்சண மாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறையும், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் இணைந்து இன்று மரபுசார் பயணம் மேற்கொண்டனர். அவர்கள், நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள சிற்பங்களை பார்வையிட்டனர். அதன் பின் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியம் அமைக்கும் பணிக்காக நடந்து வரும் அகழாய்வு பணியினை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். இவர்களுக்கு ஆய்வு மாணவர் அருண் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், அதன்காலங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.
தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைககு சென்றனர். மருதூர் அணை மிக நீளமான அணைக்கட்டு சுமார் 4 ஆயிரம் அடி நீளம் கொண்டது. பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்வதால் இதனை பாம்பணை என்றும் கூறுவார்கள். அணைக்கட்டினை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். மாணவர்களுக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி மற்றும் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் விளக்கமளித்தனர்.
அதன்பின்னர் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சான்சிதழ்களை கிராம நிர்வாக அதிகாரி கலியாவூர் முத்து குமார், முனைவர் கந்தசுப்பு, காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் வழங்கினர். அதன் பின் நெல்லை அரசு அருங்காட்சியகத்தினை மாணவ மாணவிகள் பார்வையிட்டனர். அங்குள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களை அவர்கள் பார்வையிட்டனர். அதன் பின் இன்றைய மரபு சார் பயணத்தின் அனுபவத்தினை மாணவ மாணவிகள் பகிர்ந்து கொண்டனர்.
இந்த மரபு சார் பயணத்தில் தெட்சண மாற நாடார் சங்க கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கிரிஜா, தமிழ்த்துறை பேராசிரியர்கள் முருகவேல், சோனா கிறிஸ்டி, முனைவர் சவரிராயம்மாள், பால்மோகன், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.