குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறுவதையொட்டி, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்னகத்தின் புகழ்பெற்ற ஆன்மீக விழாக்களில் ஒன்றான குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இன்று கோவிலுக்கு நேரில் வருகை தந்து கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான வரிசை வளாகங்கள், குடிநீர் வசதிகள், தற்காலிக கழிப்பறைகள், கூடுதல் பேருந்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை அவர் விரிவாகப் பார்வையிட்டார்.
விழா நாட்களிலும், சூரசம்ஹார நிகழ்வின்போதும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எவ்வித தடையுமின்றி உடனடியாகச் செய்து முடிக்குமாறு அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆய்வின் போது, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறை அரசு உயர் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.


